மாறாத அன்பு, தெவிட்டாத பயணம்

மாறாத அன்பு, தெவிட்டாத பயணம்

2 mins read
561fa257-ee48-4261-aeae-6d9a85097894
பயணிகள் தம்மீது அன்பு காட்டுவதாகக் கூறினார் பேருந்து ஓட்டுநர் ரவுண்டன் ராமசாமி, 68. - படம்: அனுஷா செல்வமணி

ஒருநாள் லாட்டரி குலுக்கலில் பணம் வந்தால் எவ்வாறெல்லாம் அதைச் செலவழிக்கலாம் என்று நம்மில் பலர் மனக்கோட்டை கட்டுவதுண்டு.

ஆனால், அந்த அதிர்ஷ்டம் 1993ஆம் ஆண்டில் வந்த பின்பும் தமது பேருந்து ஓட்டுநர் வேலைக்கு எப்போதும் போல சென்றுவருகிறார் ரவுண்டன் ராமசாமி, 68.

“நான் வேலையிலிருந்து ஓய்வுபெறுவதற்கு லாட்டரி குலுக்கல் பணம் போதுமானதாக இருந்தது. ஆனால், என்னால் வேலைக்குப் போகாமல் இருக்க முடியாது,” என்று அவர் கூறியபோது அவரது கடமையுணர்ச்சியை உணரமுடிந்தது.

வென்ற பணத்தை மொத்தமாகத் தம் மனைவியிடமும் பிள்ளைகளிடமும் ஒப்படைத்த ரவுண்டன், “அவர்கள் அந்தப் பணத்தில் சுற்றுலா சென்றார்கள். மற்ற செலவுகளுக்கும் பயன்படுத்தினார்கள். நான் வழக்கம்போல வேலைக்குக் கிளம்பினேன்,” என்றார் புன்னகையுடன்.

நாளும் பலதரப்பட்ட பயணிகளைச் சந்திப்பதும் அவர்களுடன் பேசுவதும் சக ஊழியர்களுடன் கலந்துரையாடுவதும் இப்பணியில் தமக்குப் பிடித்த விஷயங்கள் என்று குறிப்பிட்டார் ரவுண்டன்.

பின்னிரவு 1.50 மணிக்கு எழுந்து வேலைக்குப் பயணம் செய்யத் தொடங்கும் ரவுண்டன், காலை ஐந்து மணிக்குத் தம் பணியைத் தொடங்குவது வழக்கம்.

இந்த வயதிலும் சோர்ந்திடாமல் பேரப்பிள்ளைகளுடன் உடற்பயிற்சி மேற்கொள்ளுதல், மிதிவண்டி ஓட்டுதல், நீச்சல் அடித்தல், கூடைப்பந்து விளையாடுதல் ஆகியவற்றுக்கு தமது ஓய்வு நாள்களில் நேரம் ஒதுக்கி வருகிறார் இவர்.

பேருந்துச் சேவை 273ல் ஏறும் பயணிகள் பலருடன் தாம் கொண்டுள்ள நட்பு குறித்து பேசிய அவர், “அடிக்கடி உணவு வாங்கித் தருவார்கள், நலன் விசாரிப்பார்கள். சிறுசிறு வழிகளில் அவர்கள் காட்டும் இந்த அன்பு எனக்கு உற்சாகமளிக்கிறது,” என்று நெகிழ்ந்தபடி கூறினார் ரவுண்டன்.

வேலை தேடி 17 வயதில் மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு ஒப்பந்தத் தொழிலாளராக வந்த இவர், பின்னர் எஸ்பிஎஸ் பேருந்து நிறுவனத்தில் நிலையான வேலையில் சேர்ந்தார்.

அன்றிலிருந்து வேறெந்த வேலைக்கும் மாற விரும்பாமல் பேருந்து ஓட்டுநராகவே தொடர்கிறார். புக்கிட் மேரா பேருந்து நிலையத்தில் கடந்த 20 ஆண்டுகளாக பேருந்து ஓட்டுநராக இருக்கும் இவர், தாம் ஆரோக்கியமாக இருக்கும்வரை வேலையிலிருந்து ஓய்வுபெறுவதைப் பற்றித் தாம் நினைத்துப் பார்க்கப் போவதில்லை என்று உறுதியாகச் சொன்னார் ரவுண்டன்.

குறிப்புச் சொற்கள்