உணவகத்தில் வாடிக்கையாளர்கள், உணவுப் பட்டியலிலிருந்து உணவைத் தேர்ந்தெடுப்பதற்குப் பதிலாக சமையல் வல்லுநரின் புத்தாக்கத்திற்கு அதை விட்டுவிடுவதை ஜப்பானியர்கள் அவர்களின் மொழியில் ‘ஒமாகாசே’ என்பார்கள்.
சமையல் வல்லுநர், வாடிக்கையாளருக்குச் சுவையான உணவைச் சமைத்துத் தருவார் என்ற நம்பிக்கையில் ஒமாகாசே உணவகங்களில் உணவுப் பட்டியல் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுவதில்லை.
சிங்கப்பூரர்களுக்கும் இந்த அனுபவம் கிடைக்கப் பல ஜப்பானிய ஒமாகாசே உணவகங்கள் உள்ளன. இந்த அணுகுமுறையைத் தழுவிய இந்திய உயர்தர உணவகமான ‘அம்மாகாசே’, வாடிக்கையாளர்களிடையே பிரபலமாகி வருகிறது.
கடந்த டிசம்பரில் தொடங்கப்பட்ட இந்த உணவகத்தில் வாடிக்கையாளர்கள் இந்திய உணவு வகைகளைச் சுவைக்கலாம்.
வீட்டில் அம்மா சமைக்கும் உணவைச் சாப்பிடும் ஓர் உணர்வு; அதே நேரத்தில் உயர்தர உணவகத்தில் சாப்பிடும் அனுபவம். இவை ஒன்றுசேர்ந்த கலவைதான் அம்மாகாசே.
உணவகத்துக்குள் வந்தவுடன் வாடிக்கையாளரிடம், குறிப்பிட்ட ஏதாவது உணவுப் பொருளுக்கு ஒவ்வாமை உள்ளதா என்று முதலில் கேட்கப்படுகிறது. பிறகு எந்த இறைச்சி வகை வேண்டும் என்று வாடிக்கையாளர் தெரிவுசெய்ய வேண்டும்.
இந்தியாவிலும் இலங்கையிலும் உள்ள மாநிலங்களில் தாய்மார்களின் பாரம்பரிய சமையல் வகைகளை வாடிக்கையாளர்கள் இங்கு எதிர்பார்க்கலாம்.
அம்மாகாசே உணவகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜே.கே.சரவணா, 42, ஊடகத் துறையில் பல்லாண்டு அனுபவம் மிக்கவர். இளம் வயதிலிருந்து பலரும்போல அம்மா கைப்பட சமைத்துத் தரும் உணவை ருசித்து சாப்பிட்டு வளர்ந்தவர் அவர்.
தொடர்புடைய செய்திகள்
அம்மாகாசே உணவகத்தின் தூதர் ஷாமினி சுப்பையாவும் திரு சரவணாவும் உணவுப் பிரியர்கள். இருவரும் பல இடங்களுக்குச் சென்று புதிய உணவு வகைகளைச் சுவைத்து பார்ப்பதில் கைதேர்ந்தவர்கள்.
“சிங்கப்பூரில் பொதுவாக இந்திய உயர்தர உணவகத்தில் நாம் அதிகம் வடஇந்திய உணவு வகைகளைதான் காண முடியும். மேலும், அம்மா சமைக்கும் உணவின் ருசியைக் கடைகளில் நாம் எதிர்பார்க்க முடியாது. அந்த ருசியை எங்களால் முடிந்தவரை வாடிக்கையாளர்களுக்கு விந்தையான முறையில் கொண்டுசேர்ப்பதுதான் எங்கள் நோக்கம்,” என்றார் ஷாமினி.
மத்திய வர்த்தக வட்டாரத்தில் அமைந்துள்ள அம்மாகாசே உணவகத்துக்குப் பலதரப்பட்ட வாடிக்கையாளர்கள் வருகிறார்கள். வேலை, தொழில் சந்திப்புகளுக்கு இது ஒரு சிறந்த தளமாக விளங்குகிறது. இந்திய உணவை மேற்கத்திய சமையல் முறையில் வாடிக்கையாளர்கள் ருசித்து உண்ணலாம்.
குடும்பங்களும் மகிழும் வகையில் உணவகத்தில் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான வசதிகளும் செய்து தரப்படும். அம்மாகாசே உணவக சமையல் வல்லுநர்கள், ஒவ்வொரு வாரமும் அவர்களின் படைப்பாக்கத்தைப் பயன்படுத்தி புதிய உணவு வகைகளை பரிந்துரைக்கிறார்கள்.
“நானும் ஷாமினியும் எங்கள் சமையல் வல்லுநர்கள் பரிந்துரைக்கும் உணவு வகைகளைச் சுவைத்து பார்த்து கருத்து கூறுவோம். அதன் பிறகு உணவு சற்று மாற்றியமைக்கப்பட்டு அது வாடிக்கையாளர்களுக்கு பரிமாறப்படும்,” என்று திரு சரவணா பகிர்ந்துகொண்டார்.
வாடிக்கையாளர் இன்று சாப்பிடும் உணவை நாளை மீண்டும் அம்மாகாசே உணவகத்திற்கு வரும் போது சாப்பிட முடியாது. இதற்கான காரணம், வாடிக்கையாளர் முதல்முறையாக அம்மாகாசே உணவகத்திற்கு வரும்போது அவரின் விவரங்களைப் பணியாளர்கள் கவனத்தில் எடுத்துக் கொள்கின்றனர். அதேநேரத்தில் வாடிக்கையாளரின் புகைப்படமும் எடுக்கப்படுகிறது.
மேலும், அவர்கள் அந்த நாளில் சாப்பிட்ட உணவுவகைகள் அழகான ஓர் அட்டையில் பதிவு செய்யப்படுகின்றன. அதன் பக்கத்தில் வாடிக்கையாளரின் புகைப்படமும் சேர்க்கப்படுகிறது. வாடிக்கையாளரின் விவரங்கள் தரவுத்தளத்தில் பதிவு செய்வதால் அவர் அடுத்த முறை அம்மாகாசே உணவகத்திற்கு வரும்போது அவர் முன்பு சாப்பிட்ட அதே உணவு பரிமாறப்படுவதில்லை.
வாடிக்கையாளர்களின் ரசனைக்கேற்றவாறு அம்மாகாசே உணவகத்தில் பணிபுரியும் சோமெலியரும், பானங்களைக் கலக்கும் நிபுணரும் பானங்களைத் தயாரிக்கின்றனர்.
உணவுபானத் துறையில் பல்லாண்டு அனுபவம் மிகுந்த ஷாமினி சுப்பையா உணவகத்தை நடத்தும் நுணுக்கங்களைக் கற்றுத் தந்தவர்.
“சிறந்த அனுபவம் கொண்ட சமையல் வல்லுநர்களை உணவகத்தில் அமர்த்துவது எங்களுக்குப் பெரிய சவாலாக இருந்தது. உயர்தர உணவகம் என்பதால் அதற்கான இடத்தைத் தேர்ந்தெடுக்கவும் நாங்கள் சிரமப்பட்டோம்,” என்று ஷாமினி சொன்னார்.
ஏழு சமையல் வல்லுநர்கள் கொண்ட குழுவில், தலைமைச் சமையல் வல்லுநரான ரோபின், 38, கடந்த 17 ஆண்டுகளாக இத்துறையில் இருக்கிறார்.
“நாங்கள் முடிந்தளவில் வாடிக்கையாளர்களுக்குப் புதுமையான உணவுவகைகளை கொண்டு சேர்க்க முயற்சிப்போம். குங்குமப்பூ சீஸ்கேக், பாயசம் பன்னா கோட்டா, குலாப் ஜாமுன் சீஸ்கேக் என பட்டியலிட்டுக் கொண்டு போகும் அளவுக்கு நாங்கள் இனிப்பு வகைகளையும் பரிமாறுகிறோம்.
“ஆனால் வாடிக்கையாளருக்கு அது என்னவென்று சாப்பிடும் வரை தெரியாமல் இருப்பதுதான் இந்த உணவகத்தின் சிறப்பு,” என்று ரோபின் கூறினார்.
“நான் அம்மாகாசே உணவகத்திற்கு மூன்று முறை வந்துள்ளேன். ஒவ்வொரு முறையும் நான் புதுப் புது உணவுவகைகளைச் சுவைத்துள்ளேன். எத்தனை முறை வந்தாலும் புதுமையான உணவை சாப்பிடுவதுதான் இந்தக் கடையின் சிறப்பு. இது வாடிக்கையாளர்களுக்கு கண்டிப்பாக ஒரு தனித்துவமான அனுபவம்,” என்றார் வாடிக்கையாளர் பிரசன்னா.

