தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இன்பத்தேன் சொட்டிய ‘ருக்மிணி கல்யாணம்’ நாட்டிய நாடகம்

2 mins read
336aafad-0c36-418f-bfd1-1206f937b326
1964 முதல் இந்த நாடகத்தை  ‘கலாக்ஷேத்திரா’ கலைப்பள்ளி படைத்து வருகிறது. - படம்: சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகம்

மகாபாரதத்தில் அங்கம் வகிக்கும் ‘ருக்மிணி கல்யாணம்’, காலங்காலமாகக் கூறப்பட்டு வரும் சுவைமிகு தெய்வீகக் காதல் கதையாக இருந்தபோதும் அது ஒவ்வொரு தலைமுறைக்கும் உகந்த புதிய நாடக, இசை வடிவங்களைப் புனைந்து மக்களை மீண்டும் மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது.

பழம்பெரும் நடன மேதை வழுவூர் பி ராமையா பிள்ளை 60 ஆண்டுகளுக்கு முன்னதாக இயற்றிய இந்த நாட்டிய நாடகத்தை 20ஆம் நூற்றாண்டு பரதநாட்டிய முன்னோடி ருக்மிணி தேவி அருண்டேல் வடிவமைத்தார். 1964ல் முதல்முதலாக தமிழ்நாட்டில் மேடையேறிய இந்நாடகம், ஏப்ரல் 27ஆம் தேதி சிங்கப்பூரில் முதன்முறையாகப் படைக்கப்பட்டது.

‘சிஃபாஸ்’ எனப்படும் சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகம் தனது 75ஆம் ஆண்டு நிறைவுக்காக, அதன் கொண்டாட்டங்களில் சென்னையில் புகழ்பெற்ற ‘கலாக்ஷேத்திரா’ கலைப் பள்ளியின் ருக்மிணி கல்யாணத்தை இணைத்துள்ளது.

ருக்மிணியின் தாய் தந்தையரான ருக்மாங்கி, பீஷ்மகர்.
ருக்மிணியின் தாய் தந்தையரான ருக்மாங்கி, பீஷ்மகர். - படம்: சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகம்

‘கலாக்ஷேத்திரா’ கலைப் பள்ளியிலிருந்து மொத்தம் 25 நடனமணிகளும் சிஃபாசிலிருந்து நடன ஆசிரியர்கள் நால்வரும் இந்த நிகழ்ச்சியில் ஆடினர். கதையின் நாயகியான ருக்மிணி பிராட்டியாரின் அண்ணனான ருக்மி, தம் தங்கை விரும்பும் கிருஷ்ணரை வெறுத்து சிசுபாலருக்குத் திருமணம் செய்து வைக்க எண்ணினார்.

ஆயினும், கிருஷ்ணர் தக்க நேரத்தில் ருக்மிணியை மீட்டு கரம் பற்றினார். நயமிகு உடல் அசைவுகளும் பொருத்தமான முக பாவங்களும் நடனத்திற்குப் பொலிவு சேர்ததன.

ருக்மி மற்றும் கிருஷ்ணராக நடித்து ஆடியவர்கள் வீரபராக்கிரமத்துடன் வாள் சுழற்றி மேடையில் வலம் வந்த விதம் ரசிக்கும்படியாக, நினைவில் நிற்கும் வண்ணமாய்த் திகழ்ந்தது.

பாடல் வடிவிலான வசனங்கள் தெலுங்கில் உள்ளன. துணை வாசகங்கள் சேர்க்கப்பட்டிருந்தால் நாடகத்தை அதிகமானோர் புரிந்திருக்கக்கூடும். ஆயினும், முகபாவனை, கண்ணசைவு, அபிநயம், உடல் அசைவு ஆகியவற்றைப் பயன்படுத்தி நடனமணிகள் பார்வையாளர்களுக்கு விளக்கமளித்தனர்.

கதாநாயகி ருக்மிணியின் தாயார் ருக்மாங்கியாக இடம்பெற்ற கலாக்ஷேத்திரா ஆசிரியர் பி. ஆர். ஸ்ரீதேவி, 32, நடனம் ஆடினாலும் நாடக வடிவில் கதாபாத்திரத்தை ஏற்று ஆடுவது கூடுதல் சவால் என்றார்.

வாற்போர் புரியும் ருக்மி, கிருஷ்ணன்.
வாற்போர் புரியும் ருக்மி, கிருஷ்ணன். - படம்: சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகம்

“நாட்டியத் திறன் அடிப்படை என்றாலும் அதனை கதாபாத்திரத்தின் தன்மைக்கு ஏற்ற விதத்தில் அனைத்து அசைவுகளும் இருக்கவேண்டும். கற்றுத்தேர்ந்த குருமார்களின் வழிகாட்டுதல் இருந்தது. அத்துடன், பரதநாட்டிய மாமேதைகள் எப்படி ஆடுகின்றனர் என்பதை நானும் சக நடனமணிகளும் கூர்ந்து கவனித்தோம்,” என்று அவர் கூறினார்

கலாக்ஷேத்திராவில் பட்டம் பெற்று சுமார் ஆறு ஆண்டுகளாக அங்கேயே கற்பித்த பின் 2015ல் சிஃபாசில் ஆசிரியராகச் சேர்ந்த பி.என். விகாஸ், இந்நாடகத்தில் ஆக முக்கியக் கதாபாத்திரமான கிருஷ்ணராக நடித்தார். தெரிந்த பல முகங்களுடன் சிங்கப்பூரில் மீண்டும் நிகழ்ச்சி படைப்பதற்காக இணைவதில் மகிழ்வதாக அவர் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்