மீண்டும் புதுபாணியில் ஒலிக்கிறது ‘உயிரே உருகாதே’

மீண்டும் புதுபாணியில் ஒலிக்கிறது ‘உயிரே உருகாதே’

2 mins read
969d0963-d8c6-4e79-bd2e-67a2f55cb137
‘உயிரே உருகாதே’ பாடலின் மேம்பட்ட வடிவம் யூடியூப் தளத்தில் மீண்டும் வெளியீடு கண்டது. - படம்: ஜோர்டன் ஜோசுவா

தேவாலயத்தில் பெண்கள் மட்டுமே கீபோர்டு வாசிப்பதைப் பார்த்த ஜோர்டன் ஜோசுவா, 34, அம்மா விரும்பியபடி ஆரம்பத்தில் கீபோர்டு வகுப்புக்குச் செல்ல மறுத்தார்.

ஆனால், தேவாலயத்தைச் சேர்ந்த ஒரு நண்பரின் வழிகாட்டலில் தனது 14ஆவது வயதில் ஜோர்டன் முதன்முறையாக கீபோர்டு வாசித்தார். 

“போட்டித்தன்மை உணர்வின்றி இசையில் எவ்வாறு ஒன்றிணையலாம் என்பதைக் கற்றுக் கொண்டேன்,” என்றார். 

ஏ.ஆர்.ரகுமான், இளையராஜா போன்ற புகழ்பெற்ற இசையமைப்பாளர்களின் பாடல்களையும் இவர் விசைப்பலகையின் மூலம் வாசிக்கத் தொடங்கினார். 

ஒரு பாடலைச் செவியுற்ற பின்னர் அதை வாசிக்கும் திறனைப் பெற்றார் ஜோர்டன். ஆனால், ஒரு பாடலைப் புதிதாக உருவாக்குவது அவருக்குச் சவாலாக அமைந்தது. 

ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் அவர் தனது முதல் இரண்டு பாடல்களை ஒரு மேடை நாடகத்துக்காக எழுதி இசையமைத்தார்.

2013ஆம் ஆண்டில் ‘உயிரே உருகாதே’ என்ற பாடலை எழுதி இசையமைத்தார் ஜோர்டன். உள்ளூர் கலைஞர்களுடன் உருவாக்கப்பட்ட இந்தப் பாடல், எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை.  

ஜோர்டன் சிங்கப்பூர் காவல் துறையில் சேர்ந்தபோது அவரின் இசைப் பயணம் 11 ஆண்டுகள் நின்றுபோனது.  

மனந்தளராமல் 2013ல் தான் வெளியிட்ட அதே ‘உயிரே உருகாதே’ பாடலை, மேம்பட்ட இசைத் தரத்துடன் காணொளி வடிவிலும் வழங்க ஆயத்தமானார் ஜோர்டன். 

“நான் இம்முறை பாடலுக்காகப் பல புதிய நுணுக்கங்களைக் கையாண்டேன்,” என்றார் அவர். 

மலேசியா, இந்தியா போன்ற நாடுகளிலிருந்து பல கலைஞர்கள் ஜோர்டனுடன் களமிறங்கினார்கள். கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி ‘உயிரே உருகாதே’ பாடலின் மேம்பட்ட பதிப்பு வெளியீடு கண்டது. 

“இசையமைப்பாளர் என்ற அங்கீகாரத்தைவிட, என் இசை எங்கும் ஒலிக்க வேண்டும் என்பதே என் விருப்பம்,” என்றார் ஜோர்டன்.

குறிப்புச் சொற்கள்