குடும்பத்துடன் கொண்டாட வேண்டிய பிறந்தநாள்களை நடுக்கடலில், நீர்மூழ்கிக் கப்பலில் சிங்கப்பூர் கடற்படைச் சேர்ந்த ‘எம்இ3’ ராணுவ நிபுணர் ஹரிஹரன் நாயுடு கழித்துள்ளார்.
ஆயினும், சகோதரர்களைப் போல் பழகும் வேலையிட சகாக்கள் தம்மைச் சூழ்ந்திருப்பதில் தாம் ஆறுதல் அடைவதாகக் கூறினார் இவர்.
நீர்மூழ்கிக் கப்பலில் கடந்த 16 ஆண்டுகளாகப் பணியாற்றிவரும் திரு ஹரிஹரன், இந்த வேலையைத் தேர்ந்தெடுத்ததற்கான காரணத்தை நண்பர்களும் தெரிந்தவர்களும் அடிக்கடி தம்மிடம் வினவுவதாகக் குறிப்பிட்டார்.
“அன்று என்னை நீச்சலில் ஈடுபடுத்த என் தந்தை எடுத்த முடிவில் இருந்துதான் இந்தப் பயணம் தொடங்கியது,” என்று அவர் கூறினார்.
நீர் சார்ந்த விளையாட்டுகளையும் நடவடிக்கைகளையும் விரும்பிக் கடற்படையில் சேர்ந்தபோதும் நீர்மூழ்கிக் கப்பலில் பணியாற்றப் போவதை திரு ஹரிஹரன் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
பதின்ம வயதில் உயிர்க்காப்பாளராகப் பணியாற்றிய திரு ஹரிஹரன், தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் தகவல் தொடர்பு தொழில்நுட்பம் பயின்ற பின்னர் 2003ல் கடற்படையில் சேர்ந்தார்.
புதிய ‘இன்வின்சிபல்’ ரக நீர்மூழ்கிக் கப்பல்களை இயக்குவதற்காக அவர் ஜெர்மனியின் கியல் நகரில் மூன்று ஆண்டுகள் பயிற்சி பெற்று சிங்கப்பூர் திரும்பினார்.
நீர்மூழ்கிக் கப்பல்கள் பொதுவெளியில் தென்படாமல் இருப்பதால் அவற்றைப் பற்றி அறிந்திட பலரும் பல்வேறு கேள்விகளை முன்வைப்பதாக திரு ஹரி கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
“நீர்மூழ்கிக் கப்பல் என்றாலே பலருக்கும் அது ஒரு மர்மமாகத் தோன்றும். உங்களால் ஒரு வாரத்திற்குக் கைப்பேசியைவிட்டுப் பிரிந்திருக்க முடியுமா? நீர்மூழ்கிக் கப்பலில் இருக்கும் அனுபவமும் அப்படித்தான்,” என்றார் அவர்.
நீர்மூழ்கிக் கப்பலில் நடமாடுவதற்கு அதிக இடம் இல்லாததால் குறுகலான இடங்களைக் கண்டு பயப்படுவோருக்கு அது ஏற்ற வேலையிடம் ஆகாது என்று அவர் கூறினார்.
நீர்மூழ்கிக் கப்பலில் உடன் இருப்போருடன் நட்புணர்வும் நம்பிக்கையும் பெரிதும் கைகொடுத்திருப்பதாகக் குறிப்பிட்டார் அவர்.
“நீர்மூழ்கிக் கப்பலில் இடப் பற்றாக்குறை இருந்தாலும் எப்படியேனும் உடற்பயிற்சி செய்வதற்கான வழியைக் கண்டறிந்தோம். உடற்பயிற்சிக்கூடம் இருக்காது. ஆனாலும், யோகாசனம் செய்வதற்கான இடமாவது இருக்கும்,” என்று அவர் கூறினார்.
புதிய நீர்மூழ்கிக் கப்பல்களில் வசதிகள் மேம்பட்டுள்ளதால் கடற்படை அதிகாரிகள் இனி கப்பலுடன் இணைக்கப்பட்ட ‘குக்கர்’ போன்ற சமையல் சாதனங்களைப் பயன்படுத்தலாம்.
அத்துடன், தங்களின் சமையற்கலை வல்லுநர் சமைத்துத்தரும் கோழிச்சோறு, ‘லக்சா’ போன்ற உணவு வகைகள் தனி ருசி என்றார் சிரித்தவாறு.
ஆறு மணி நேர வேலை, ஆறு மணி நேர ஓய்வு என நீர்மூழ்கிக் கப்பலில் இவரது வேலை நாள் செல்கிறது. நீருக்கடியில் உள்ள பொருள்களின் தூரம், திசை மற்றும் வேகத்தை அளவிடப் பயன்படும் ‘சோனார்’ அலைவரிசை சாதனத்தைக் கையாள்வது திரு ஹரியின் வேலை. இந்தச் சாதனத்தை அவர் நீர்மூழ்கிக் கப்பலின் கண்கள் என வருணிக்கிறார்.
“நீர்மூழ்கிக் கப்பல்களுக்குச் சன்னல் உண்டா என்று என் மகள் ஒருமுறை கேட்டார். அலைவரிசை மூலமாக, செவிப்புலன் வழியாக நீர்மூழ்கிக் கப்பல்களை நாங்கள் செலுத்துவதாகப் பதிலளித்தேன்,” என்று 36 வயது திரு ஹரிஹரன் கூறினார்.
2013ல் திருமணம் செய்துகொண்ட திரு ஹரிஹரன், ஜெர்மனியில் தம் மனைவி மகளுடன் தங்க முடிந்தது தாம் பெற்ற நற்பேறு என்றார்.
மனைவி திருவாட்டி மாலதியோ, தம் கணவருடன் ஜெர்மனி செல்வது கடினமான முடிவாக இருந்ததாகக் கூறினார். ஆயினும், வெளிநாடு போக ஹரிக்கு கிடைத்த வாய்ப்பு, அனைவருக்குமான ஒரு வாய்ப்பாகத் தான் கருதியதாகச் சொன்னார் அவர்.
கடந்தாண்டு டிசம்பர் ஜெர்மனியிலிருந்து சிங்கப்பூர் திரும்பிய திரு ஹரிஹரன், சாங்கி கடற்படைத் தளத்தின் பயிற்சிக் கழகத்தில் பயிற்றுவிப்பாளராக உள்ளார்.
நீர்மூழ்கிக் கப்பலில் புதிதாகப் பயணம் செய்யவிருப்போருக்கான ஆறு மாதப் பயிற்சி வகுப்பை நடத்தி வருகிறார்.