தொழிற்கல்விக் கழகத்தில் சேவை நிர்வாகத்துறை மாணவியான அஷ்வினி திருப்பதி, 17, கடந்த ஆண்டு மரணத்தின் விளிம்பில் போராட நேரிட்டது.
கிருமித்தொற்றால் இதயம் சேதமடைந்த நிலையில் அவர் ‘ஓபன் ஹார்ட் சர்ஜரி’ எனும் இதய அறுவை சிகிச்சைக்குப் பிறகு புத்துயிர் பெற்றார்.
அஷ்வினியைக் காண்போர் அவர் கழுத்தின் அடியிலிருந்து கீழ்நோக்கி நீளும் அறுவை சிகிச்சைத் தழும்பைக் காணக்கூடும். சிலர் இதுகுறித்து விமர்சிக்கும் போதெல்லாம் அதைப் பொருட்படுத்துவதில்லை என்கிறார் அஷ்வினி.
தமிழ்முரசுக்கு நேர்காணல் அளித்தபோதும் அவர் தழும்பை மறைக்க எவ்வித முயற்சியும் செய்யவில்லை.
“பச்சைகுத்துவதை உலகம் ஏற்கும்போது என் தழும்பையும் அவ்வாறே எண்ணட்டுமே. நான் இத்தழும்பை மறைக்காமல் இருப்பதால் எழும் குறைகூறல்கள் குறித்து கவலைப்படுவதில்லை,” என்று மிகுந்த மனப்பக்குவத்துடன் கூறுகிறார் அஷ்வினி.
செம்பவாங் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போது ‘கேர்ல்ஸ் பிரிகேட்’ இணைப்பாட நடவடிக்கைகளில் தொண்டூழியம் செய்த அஷ்வினி, அடிக்கடி வெளியே செல்லும் துடிப்பு மிக்கவராக இருந்தார்.
2023ஆம் ஆண்டில் பொதுக்கல்விச் சான்றிதழ் சாதாரண நிலைத் தேர்வுக்காக மும்முரமாகப் படித்துக்கொண்டிருந்தபோது அந்த ஆண்டு ஜூலை மாதத்தில் அவர் வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது.
முதலில் காய்ச்சல் ஏற்பட்டபோது அதைத் தானும் பெற்றோரும் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை என அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
ஆனால் ஒன்பது நாள்கள் கழித்தும் காய்ச்சல் மோசமாகிக் கொண்டே போனது. உடலின் வெப்பநிலை 40, 45 டிகிரி செல்சியல் வரை ஏறிக்கொண்டிருந்தது. கே கே மருத்துவமனையில் ஜூலை 13ஆம் தேதி தனியார் மருந்தகம் ஒன்றுக்குச் சென்றபோது முதலில் வைரஸ் கிருமியால் காய்ச்சல் ஏற்பட்டதாக அங்குள்ள மருத்துவர்கள் கூறினர்.
மறுநாள் கே கே மருத்துவமனையில் ரத்தப் பரிசோதனைகள் செய்த பிறகு ‘இன்ஃபெக்டிவ் என்டோகார்டைட்டிஸ்’ எனும் (infective endocarditis) கடுமையான ‘பாக்டீரியா’ தொற்று ஏற்பட்டது தெரியவந்தது.
“என் இதயத்தின் ஒரு பாதியைக் கிருமிகள் தின்றுவிட்டதாக மருத்துவர்கள் என் பெற்றோரிடம் தெரிவித்தனர். எனவே இதய அறுவை சிகிச்சை தேவைப்படுவதாக அவர்கள் கூறினர்,” என்றார் அஷ்வினி.
சிகிச்சை குறித்து அதிகம் விளக்கிக் கூறாமலே பெற்றோர் தன்னை சிகிச்சைக்கு அனுப்பியதாக அவர் கூறினார்.
“சிகிச்சைக்குப் பிறகு உயிர் பிழைப்பது குறித்து உறுதி தர இயலாது என்று மருத்துவர்கள் என் பெற்றோரிடம் கூறினர். அதனால் நான் மனம் உடைந்துபோகக்கூடாது என்ற எண்ணத்தினால் என் பெற்றோர், தங்கள் வலியை என்னிடமிருந்து மறைத்தனர்,” என்று அஷ்வினி கூறினார்.
ஆயினும், 2023 ஜூலை 18ஆம் தேதி, 12 மணி நேரம் நீடித்த இதய அறுவை சிகிச்சைக்குப் பிறகு கண்விழித்த அஷ்வினி, அதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் ஆறு வாரங்கள் தங்கினார்.
வீடு திரும்பிய பிறகு அஷ்வினிக்கு பிஐசிசி எனும் குழாய் பொருத்தப்பட்டு அதன் வாயிலாக நோய்த் தடுப்பாற்றல் தரும் திரவம் அவரது உடலில் செலுத்தப்பட்டது.
“அன்றாடம் மூன்று முறை கே கே மருத்துவமனைத் தாதி ஒருவர் எனக்கு ‘ஆன்டிபயாடிக்ஸ்’ மருந்தைச் செலுத்தினார்,” என்று அவர் கூறினார். அஷ்வினிக்கு இந்த வீட்டுச் சிகிச்சை சுமார் ஒரு மாதத்திற்கு நீடித்தது.
இந்தச் சிகிச்சைக்குப் பிறகு படிப்படியாக வெளியே சென்று தம் மனச்சோர்வைப் போக்கிக்கொள்ள அவர் முயன்றார். குடும்பத்தினருடனோ நண்பர்களுடனோ அடிக்கடி வெளியே சென்று கலகலப்பாக இருந்து பழகிய அஷ்வினி, ஒரே இடத்தில் முடங்கி இருப்பதை விரும்பவில்லை.
கடுமையான இந்த அதிர்ச்சியிலிருந்து தற்போது மீண்டுவருவதாகக் கூறும் அஷ்வினி, இயன்றவரை இது குறித்துப் பிறரிடம் பேசுவதைத் தவிர்ப்பதாகக் கூறினார். “சில நேரங்களில் என்னை மீறி என் எண்ணங்கள் மனத்தைப் பிழியும்போது எனக்கு ஆக நெருங்கிய நண்பரிடம் சொல்லிச் சமாதானம் அடைவேன்,” என்று அவர் கூறினார்.
அரிய காரணம்
அஷ்வினியின் இதய வால்வில் ‘ஸ்டெஃபிலோக்கஸ் ஓரியஸ்’ என்ற பாக்டிரியாவால் கிருமித்தொற்று ஏற்பட்டதாக கே கே மருத்துவமனையின் ஆலோசகர்கள் டாக்டர் சார்மேன் சின்னும் டாக்டர் கேரன் நடுவாவும் தமிழ் முரசிடம் தெரிவித்தனர்.
“இந்தக் கிருமி எப்படி அஷ்வினியின் ரத்தத்திற்குள் சென்று கிருமித்தொற்றை ஏற்படுத்தியது என்று சரியாகத் தெரியவில்லை. ஏற்கெனவே நாட்பட்ட நோயால் பாதிக்கப்படாத பிள்ளைகளுக்கு இவ்வாறு ஏற்படுவது மிக அரிது,” என்று அவர்கள் கூறினர்.
முன்னோக்கிச் செல்ல விருப்பம்
இவ்வாறு நடந்தும் சாதாரண நிலைத் தேர்வை ஒத்திப்போடாமல் கடந்த ஆண்டிறுதியில் தேர்வு எழுத முடிவு செய்தார் அஷ்வினி.
“நான்கு ஆண்டுகள் சிரமப்பட்டுப் படித்தது இந்தத் தேர்வுக்காகத்தான். தேர்வை நன்றாக எழுதினேனோ இல்லையோ, எப்படியேனும் முடிக்கவேண்டும், முன்னோக்கிச் சென்றுகொண்டே இருக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்,” என்றார் அவர்.
தேர்வு முடிவுகள் எதிர்பார்த்த அளவுக்கு நன்றாக இல்லை. அதனால் பலதுறைத் தொழிற்கல்லூரிக்குப் போக இயலவில்லை. இருந்தாலும் தனியார் பல்கலைக்கழகத்தில் பட்டயப்படிப்பில் சேர அஷ்வினி காத்திருக்கிறார்.
“வருங்காலத்தில் தொடர்புத் துறையில் சிறந்து விளங்க வேண்டும் என்ற கனவை நனவாக்க முயல்கிறேன்,” என்று கூறும் அஷ்வினி அனைவருக்கும் சிறந்த முன்னுதாரணம் என்று கூறினால் அது மிகையில்லை.

