சிங்கப்பூரின் நான்கு சுய உதவி குழுக்களான யூரேசியர் சங்கம், சீன மேம்பாட்டு உதவி மன்றம், யயாசன் மெண்டாக்கி, சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கம் ஆகியவை இணைந்து சிறுவர்களுக்காக ஏற்பாடு செய்திருந்த காற்பந்து முகாம் ஜூன் 12 முதல் ஜூன் 13 வரை ஹவ்காங்கில் இருக்கும் ‘கிக் ஆஃப்’ இடத்தில் நடைபெற்றது.
இம்முகாமில் ஏழு முதல் 12 வயதுக்கு உட்பட்ட 80 மாணவர்கள் பங்கேற்றனர்.
வர்த்தக, தொழில் மற்றும் கலாசார, சமூக, இளையர்துறை துணை அமைச்சர் ஆல்வின் டான் முகாமின் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
யூரேசியர் சங்கத் தலைவர் சாண்ட்ரா தெசேரா, சீன மேம்பாட்டு உதவி மன்றத்தின் நிர்வாக இயக்குநர் டான் யாப் கின், மென்டாக்கி துணைத் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் நோரஸ்லிண்டா ஜூபர் , சிங்கப்பூர் விளையாட்டு உத்திக் குழுவின் தலைவர் லீ ஹூய் செர்ன் ஆகியோரும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
சிங்கப்பூர் விளையாட்டுச் சங்கம் தனது பயிற்றுநர்களுடன் ஆதரவளித்த இந்த முகாமில், பல்வேறு இன, பின்னணியைச் சேர்ந்த மாணவர்களை ஒன்றிணைப்பதையும், விளையாட்டின் மூலம் இன நல்லிணக்கத்தை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டிருந்தது.
இம்முகாமைத் தொடங்கி வைத்த திரு ஆல்வின் டான்,“ பன்முகத்தன்மையே நம் சமூகத்தின் பலம், நமது தனித்துவ சிங்கப்பூரின் அடையாளம். பல்வேறு பின்னணியைச் சேர்ந்த சிறுவர்களுடன் தொடர்புகொள்வதற்கும் பிணைப்பை மேம்படுத்துவதற்கும் இம்முகாம் நல்வாய்ப்பு அளித்துள்ளது,” என்று சொன்னார்.
சிண்டா தலைமை நிர்வாக அதிகாரி அன்பரசு ராஜேந்திரன், “இந்தக் காற்பந்து முகாம் சிறுவர்கள் விளையாட்டுகளில் ஈடுபடவும், ஆரோக்கியமான வாழ்க்கைமுறைகளைப் பின்பற்றவும் ஒரு வாய்ப்பை வழங்குகிறது. அத்துடன், பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த சிறுவர்கள் ஒன்றிணைந்து வலுவான தொடர்புகளை உருவாக்குவதற்கான தளமாகவும் விளங்குகிறது. சிங்கப்பூரின் அடையாளத்தைத் தொடர்ந்து வலுப்படுத்த சக சுய உதவிக் குழுக்களுடன் வலிமையுடன் ஒத்துழைக்க சிண்டா உறுதிபூண்டுள்ளது,’’ என்றார்.
மூன்றாவது முறையாக நடைபெற்ற இம்முகாமின் முதல் நாளில், மாணவர்களுக்குக் காற்பந்து விளையாட்டின் அடிப்படைத் திறன்கள் கற்றுத்தரப்பட்டன. காற்பந்துப் பயிற்சி மூலம் குழு உணர்வையும் அவர்கள் கற்றுக்கொண்டனர்.
தொடர்புடைய செய்திகள்
முகாமின் இரண்டாவது நாளில், மாணவர்கள் சிறு போட்டிகளில் விளையாடி, தாங்கள் கற்றவற்றைச் செயல்படுத்தினர். முகாமின் இறுதியில், மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
கன்டோன்மெண்ட் தொடக்கப்பள்ளியில் ஆறாம் வகுப்பில் படிக்கும் ஹுசைஃபா,11, “நான் நான்கு வயதிலிருந்து காற்பந்துப் பயிற்சி பெற்று வருகிறேன். என் மாமா எனக்குச் சிறு வயதிலிருந்தே காற்பந்து விளையாட்டு குறித்து கற்பித்து வருகிறார். இம்முகாமின் மூலம் என் காற்பந்துத் திறன்களை மேம்படுத்திக்கொள்ள விரும்புகிறேன்,” என்றார்.
இம்முகாமில் பயிற்றுநராகச் செயல்பட்ட அலிஃ ஹாபிஸ் பின் மசனோர், 36, கூறுகையில், “ இது ஒரு நல்ல முயற்சி என்று நான் நினைக்கிறேன்.மாணவர்கள் தங்களது அடிப்படைத் திறன்களை வெளிப்படுத்துவதைத் தவிர்த்து, இவ்விளையாட்டில் தொடரக்கூடிய பண்புகள் அவர்களுக்கு இல்லையென்றால், மேலும் கற்றுக்கொள்ள அவர்களுக்கு உந்துதல் இருக்காது. இம்முகாம் மூலம், பல்வேறு பண்புகளையும் அவர்களுக்குக் கற்றுத் தர விரும்பினோம்,” என்றார்.

