தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வீட்டு மசாலா விற்பனையில் தொடரும் பாரம்பரியம்

2 mins read
54281b01-045b-431b-8446-b778788bcaf5
திரு அல்லா பிச்சையும், அவரது மனைவி திருமதி ஆஜரா பீபியும். - படம்: யோகிதா அன்புச்செழியன்

பெரிய நிறுவனங்களால் பெரிய அளவில் தயாரிக்‌கப்படும் மசாலாத் தூள் வகைகள் எளிதில் எங்கும் கிடைக்‌கும் இக்‌காலத்தில், பாரம்பரியத் தொழிலாக மசாலாத் தூள்களைச் சுயமாகத் தயாரித்து விற்கும் சிறிய வர்த்தகங்களின் எண்ணிக்‌கை இன்று மிகக் குறைவு.

அழிந்­து­வ­ரும் இந்த வர்த்­த­கத்­தைத் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள் 76 வயது திரு அல்லா பிச்சையும், அவரது 70 வயது மனைவி திருமதி ஆஜரா பீபியும். பிடோக் 85 ஃபெங் ஷான் மையத்தில் அமைந்திருக்‌கும் ஈரச்சந்தையில் விதவிதமான மசாலாத் தூள்களைத் தயார் செய்து விற்பனை செய்கிறார்கள்.

அத்துடன், குழம்பு வகைகளுக்கு ஏற்ப, தேவையான அளவில் மசாலாக் கலவையையும் தயாரித்துக் கொடுக்கிறார்கள்.

“சீரகம், மல்லி, மிளகாய், மஞ்சள், பிரியாணி, சூப் முதலியவற்றுக்கான பொடிகளோடு இஞ்சி, வெங்காயம், புளி, பூண்டு போன்றவற்றையும் நாங்கள் அரைத்து வைத்திருப்போம். வாடிக்‌கையாளர்கள் கோழிக் குழம்பு சமைக்‌க வேண்டும் என்று கேட்கும்போது அதற்கேற்ப அரைத்து வைத்திருக்‌கும் பொருட்களைக்‌ கலந்து தண்ணீர் ஊற்றி குழம்பு செய்வதற்கு ஏற்ற வகையில் கொடுப்போம்,” என்று விளக்‌கினார் திருமதி ஆஜரா.

கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளுக்‌கு முன்பு இந்தத் தொழிலை ஆரம்பித்தார் திரு அல்லா பிச்சை.

பரம்பரை பரம்பரையாக தமது குடும்பம் செய்து வரும் இந்த வர்த்­த­கத்­தை தம்முடைய இளவயதிலேயே கற்றுக்‌கொண்டார் திரு அல்லா பிச்சை. படிப்பு முடிந்தவுடன் குவீன்ஸ்டவுன் ஈரச்சந்தையில் இருந்த தாயாரின் கடையில் உதவி செய்து மசாலா தயாரிக்‌கும் நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டார் அவர்.

தாயார் தவறிய பிறகு கடையை ஏற்று நடத்தத் தொடங்கிய திரு பிச்சை, தொடர்ந்து இருபது ஆண்டுகளுக்‌கு அதே ஈரச்சந்தையில் வியாபாரம் செய்தார். பின்னர் கட்டுமானப் பணியின் காரணமாக கடையை விற்கும் நிலை ஏற்பட்டது.

அதையடுத்து ஃபெங் ஷான் ஈரச்சந்தையில் வியாபாரத்தைத் தொடங்கினார் திரு அல்லா பிச்சை.

மாறிவரும் காலத்திற்கேற்ப மக்களின் விருப்பங்களும் தேவைகளும் மாறிவிட்டதால் இந்த வர்த்தகம் அழிந்து வருவதாக வருத்தத்துடன் கூறினார் திருவாட்டி ஆஜரா.

“இது போன்ற தொழில்களில் இக்‌கால இளையர்கள் அதிகம் ஆர்வம் காட்டுவதில்லை. எங்களது பிள்ளைகளுக்‌கு இந்தத் தொழிலை முன்னெடுத்துச் செய்ய விருப்பம் இல்லை,” என்றார் அவர்.

எனினும் கலப்படமில்லாத இந்தப் பாரம்பரியத் தொழிலை விட்டுவிடாமல் அடுத்த தலைமுறையினருக்‌கு கொண்டு செல்வது முக்‌கியம் என்று வலியுறுத்தினார் திருவாட்டி ஆஜரா.

“வீடும் வாகனமும் வாங்குவதற்கும், பிள்ளைகளைப் படிக்‌க வைப்பதற்கும் எங்கள் வாழ்க்‌கையின் முக்‌கிய தருணங்கள் பலவற்றிற்கும் இந்தத் தொழில்தான் உதவி செய்துள்ளது,” என்று திருமதி ஆஜரா சொன்னார்.

தாங்கள் தயார் செய்யும் மசாலாத் தூள் வகைகளை விரும்பித் தேடி வரும் மக்‌கள் இருக்‌கும்வரை இந்தத் தொழிலைத் தொடர்ந்து செய்துகொண்டிருப்போம் என்றனர் தம்பதியர்.

“இந்தியர்களுடன் சீன, மலாய் இனத்தவர்களும் எங்களிடம் மலாசாத் தூள்களை வாங்கிச் செல்கிறார்கள். அவ்வப்போது ஆங்கிலேயர்களும் வருவார்கள்,” என்று திருமதி ஆஜரா கூறினார்.

குறிப்புச் சொற்கள்