தமிழரின் பாரம்பரிய அடையாளமான பறையிசையை உலகெங்கிலும் கொண்டு சேர்ப்பதைத் தலையாயக் கடமையாகக் கருதுகிறார் இந்தியப் பறையிசைக் கலைஞரான வேலு ஆசான்.
இவர், ஆனந்தா மரபுக்கலைகள் கூடமும், இந்திய மரபுடைமை நிலையமும் இணைந்து நடத்தும் ‘நம் மரபு’ பாரம்பரியக் கலைப் பயிலரங்குகளின் ஒரு பகுதியாக தனது கலையைப் பிறருக்குச் சொல்லித்தரும் நோக்கில் சிங்கப்பூர் வந்துள்ளார்.
தனது தந்தை, தான், தனது மகன் என மூன்று தலைமுறையாக பறையிசையை வாழ்வாகக் கொண்டு பயணிக்கும் குடும்பத்தை சேர்ந்த தனக்கு ‘பறை உயிருக்குச் சமமானது’ என்றார்.
மதுரை அலங்காநல்லூரைச் சேர்ந்த வேலு ஆசான் என அறியப்படும் வேல்முருகன், 10 வயதிலிருந்தே பறையிசை வாசிக்கத் தொடங்கியதாகச் சொன்னார். மனம் முழுவதும் பறையிசையே நிரம்பியிருந்ததால் எழுதுகோலை விடுத்து பறைக் குச்சிகளைக் கையிலெடுத்தார்.
இந்தியாவின் பல கல்வி நிலையங்கள், நிகழ்வுகளில் தொடங்கி, பல நாடுகளிலும் பறையிசை நிகழ்ச்சிகளைப் படைத்துள்ள இவர், சிங்கப்பூர்த் தமிழர்களுக்குத் தற்போது இதைக் கற்றுத்தருவது கூடுதல் மகிழ்ச்சி தருவதாகக் குறிப்பிட்டார்.
குழந்தை பிறப்பில் தொடங்கி காதணி விழா, கோவில் திருவிழா என இறப்பு வரை நீளும் அனைத்துச் சடங்குகளிலும் வாசிக்கப்படும் பறையிசை, தமிழ் மரபுடன் ஒன்றிணைந்து பயணித்து வருவதை இவர் சுட்டிக்காட்டினார்.
திருவிழா, துக்க நிகழ்வுகள் எனக் கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்தி பறை வாசித்ததாகச் சொல்லும் இவர், “துக்க வீட்டின் அழுத்தத்தைப் போக்கி, மற்றொரு துக்கம் நேராமல் காப்பதே பறையிசை,” என்றார்.
“ஒரு காலத்தில் பறை குறிப்பிட்ட சமூகத்தினருக்கானது என்றும் அது இழிவானது என்றும் பேசப்பட்டது மாறி, தற்போது அது தமிழரின் முக்கிய அடையாளமாக உருவெடுத்துள்ளதும் உலகெங்கிலும் உள்ளோர் இதனைக் கற்க ஆர்வம் கொண்டுள்ளதும் பேருவகை தருகிறது,” என்றார் இவர்.
தொடர்புடைய செய்திகள்
மிக அடிப்படையான தாளக்கட்டுகளைக் கொண்டு இயங்கும் பறையை எல்லா இசைக்கருவிகளுடனும் ஒத்திசைக்க முடியும் என்றும் அவ்வாறு நவீன இசையுடன் பறையையும் புகுத்தி இளையர்களிடம் இதைக் கொண்டு சேர்க்க விரும்புவதாகவும் கூறினார் வேலு ஆசான்.
‘நம் மரபு’ பயிலரங்கு
பாரம்பரியக் கலைகள் மீது ஆர்வம் கொண்டுள்ள சிங்கப்பூரர்களுக்கு, கலையில் தேர்ச்சி பெற்றவர்கள் மூலமே அவை குறித்து அறிமுகம் செய்யும் நோக்கில் ‘நம் மரபு’ எனும் பாரம்பரியக் கலைப் பயிலரங்குத் தொடரை இவ்வாண்டு மார்ச் மாதம் அறிமுகப்படுத்தியுள்ளது ஆனந்தா பாரம்பரியக் கலை, இசை அமைப்பு.
ஒயிலாட்ட, கரகாட்டப் பயிலரங்குகளின் வரிசையில் மூன்றாவதாக நடத்தப்படுவது பறையிசைப் பயிலரங்கு.
பாரம்பரியக் கலைகளில் தேர்ச்சி பெற்ற கலைஞர்களையும், அதில் ஆர்வம் உள்ளவர்களையும் இணைக்கும் பாலமாக ஆனந்தா அமைப்பு செயல்படும் என்றார் இந்நிகழ்வின் ஏற்பாட்டுக் குழுவைச் சேர்ந்த சுப்பு அடைக்கலவன்.
வேலு ஆசான் வழிநடத்தும் இப்பயிலரங்கு ஜூன் 27 தொடங்கி, ஜூன் 29 வரை நடைபெறுகிறது.
பறையிசையில் ஆர்வமுள்ளவர்கள் கலந்துகொள்ளும் பயிலரங்கு அம்மூன்று நாள்களும் ‘டமாரு சிங்கப்பூர்’ ஸ்டூடியோவில் நடைபெறுகிறது.
இசை, நடனம், தாளக் கருவிகளில் முன்னனுபவம் உள்ளோருக்கான பயிலரங்கு ஜூன் 28, 29ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.