‘திருமணத்திற்குப் பின்பும் அழகுராணியாகலாம்’

‘திருமணத்திற்குப் பின்பும் அழகுராணியாகலாம்’

2 mins read
அழகுராணிப் போட்டி வெற்றியாளருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள்
427583c1-1bfa-4a60-90bc-115eed0cf0c0
மே 31 முதல் ஜூன் 2ஆம் தேதி வரை நடைபெற்ற ஜெய்ப்பூர் ஆடைக் காட்சியின் 12வது அத்தியாயத்தில் மேடையேறி நடந்தார் ராணி ஸ்ரீகந்தாச்சாரி. - படம்: ராணி ஸ்ரீகந்தாச்சாரி
மே மாதம் ‘ஹோட் மோண்டு திருமதி இந்தியா 2024’ அனைத்துலக அழகுராணிப் போட்டியில் தெற்காசியா பிரிவில் மூன்றாம் நிலையைப் பிடித்த ராணி ஸ்ரீகந்தாச்சாரி.
மே மாதம் ‘ஹோட் மோண்டு திருமதி இந்தியா 2024’ அனைத்துலக அழகுராணிப் போட்டியில் தெற்காசியா பிரிவில் மூன்றாம் நிலையைப் பிடித்த ராணி ஸ்ரீகந்தாச்சாரி. - படம்: ராணி ஸ்ரீகந்தாச்சாரி

மே மாதம் ‘ஹோட் மோண்டு திருமதி இந்தியா 2024’ அனைத்துலக அழகுராணிப் போட்டியில் தெற்காசியா பிரிவில் மூன்றாம் நிலையைப் பிடித்த ராணி ஸ்ரீகந்தாச்சாரிக்கு சிங்கப்பூர் திரும்பியவுடன் அடுத்தடுத்துக் கூடுதல் வாய்ப்புகள் கிடைத்துள்ளன.

மே 31 முதல் ஜூன் 2ஆம் தேதி வரை நடைபெற்ற ஜெய்ப்பூர் ஆடைக் காட்சியின் 12வது அத்தியாயத்தில் அவர் ஆடை வடிவமைப்பாளர் நாசிம் அலி கானின் ஆடைகளைக் காட்சிப்படுத்த மேடையேறி நடந்தார்.

ஹோட் மோண்டு போட்டியில் பங்குபெறும்போது அவர் விதவிதமான உடைகளில் புகைப்படங்கள் எடுத்து தன் இன்ஸ்டகிராம் தளத்தில் பதிவேற்றம் செய்ததைக் கண்ட நாசிம், அவருக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

இதையடுத்து, ஆசிய அனைத்துலக ஃபேஷன் வாரத்திலும் அவர் நாசிமின் உடைகளைக் காட்சிப்படுத்தவுள்ளார்.

“அழகுராணிப் போட்டி எனக்குப் பல புதிய கதவுகளைத் திறந்துள்ளது,” என்கிறார் ராணி.

சிங்கப்பூரில் வங்கித் துறையில் செயல்திட்ட மேலாளராக ஓர் அணியை வழிநடத்திவரும் இவர், தகவல் தொழில்நுட்பத் துறையில் 17 ஆண்டுகால அனுபவம் நிறைந்தவர்.

எனினும், அழகுராணியாக வேண்டும் என்ற தன் சிறுவயது இலட்சியத்தைக் கைவிடாமல், கடந்த ஓராண்டில் அவர் அழகுத் துறையில் கால்பதித்துள்ளார்.

சென்ற ஆண்டு செப்டம்பரிலிருந்து இவ்வாண்டு மே மாதம் வரை நீடித்த அவரது ஹோட் மோண்டு போட்டிப் பயணம், அவரது இலட்சியத்திற்கு உரமிட்டுள்ளது; நிறைய கற்றுக்கொடுத்தும் உள்ளது.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

எவ்வாறு தன் அழகை வெளிக்காட்டுவது, பிறர் முன்பு எவ்வாறு தன்னைப் படைப்பது போன்ற பல விஷயங்களையும் அவர் அறிந்துகொண்டார்.

சுற்றுப்புறம், ஆரோக்கியம், மனநலம், மாதவிடாய், யோகாசனம், உணவு எனப் பலவற்றைப் பற்றியும் அவர் தன் இன்ஸ்டகிராம் தளத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

தேர்வுச் சுற்றுகளில் வினாக்களுக்குச் சிறப்பாகப் பதிலளித்த அவர், துபாயில் மே 6ஆம் தேதி நடைபெற்ற மாபெரும் இறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்றார்.

ஆனால் இறுதிச் சுற்றுக்கு ஏழு வாரங்களே இருந்த நிலையில் கால் அடிபட்டது. அதையும் தாண்டி அவர் தன்முனைப்போடு செயல்பட்டார்.

இறுதிச் சுற்றுக்கான முன்னோடி நிகழ்ச்சிகளில் பங்குபெற ராணி மே 1 முதல் 7ஆம் தேதி வரை துபாயில் இருந்தார்.

“அந்த ஏழு நாள்களை என்னால் மறக்கமுடியாது. மூன்று மணி நேரம்தான் தூங்கினோம். நாள் முழுவதும் நிகழ்ச்சிகள். கப்பலில் செல்வது, அழகழகான உடைகளில் புகைப்படங்கள் எடுப்பது, தேசிய கீதம் பாடுவது என மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது,” என நினைவுகூர்கிறார் ராணி.

போட்டியில் அவர் சகப் போட்டியாளர்களுடன் நன்றாகப் பேசிப் பல புதிய நண்பர்களைப் பெற்றுக்கொண்டார். அவரது உற்சாகமும் உத்வேகமும் அவருக்குத் ‘திருமதி உற்சாகம்” என்ற பட்டத்தையும் இறுதிச் சுற்றில் பெற்றுக் கொடுத்தது.

“உங்கள் எல்லைகளை மீறுங்கள்; சவால்களைத் தகர்த்தெறியுங்கள். உங்கள் கனவுகளை அடைவீர்கள்,” என்று தங்களின் இலட்சியத்தை நோக்கிப் பயணம் செய்யும் அனைத்துப் பெண்களுக்கும் அவர் கூறுகிறார்.

குறிப்புச் சொற்கள்