சலங்கை ஒலியோடு பிணைந்த உறவு

7 mins read
8e94694b-e915-426e-9d3d-be6a67bb341e
பரதநாட்டியப் பயிற்சியில் ஈடுபடும் தாய்-மகள் ஜோடிகள். - படம்: த. கவி
தங்கள் மகள்களுடன் சேர்ந்து பாடலுக்கு அபிநயம் பிடிக்கும் நடனமணிகள்.
தங்கள் மகள்களுடன் சேர்ந்து பாடலுக்கு அபிநயம் பிடிக்கும் நடனமணிகள். - படம்: த. கவி
பரதநாட்டிய வகுப்பில் 40 வயதும் அதற்கும் மேற்பட்ட பெண்கள்.
பரதநாட்டிய வகுப்பில் 40 வயதும் அதற்கும் மேற்பட்ட பெண்கள். - படம்: த. கவி

மங்கையரின் சிரிப்பொலி அறை முழுவதும் நிரம்பியிருக்க, தாளத்துடன் ஜதிகள் ஒலிக்கத் தொடங்கியபோது பார்ப்போர் மனதைக் கவரும் நடனப் படைப்பு அவ்விடத்தை அலங்கரித்தது.

இது பரதநாட்டிய வகுப்புகளில் வழக்கமாக நிகழ்வதுதான். இருப்பினும், 70B ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள ஓம்கார் கலைக் கழகத்தின் ஸ்டூடியோ எப்பிட்டோமில் வித்தியாசமான அம்சம் ஒன்று பளிச்சென்று கண்ணில் தென்பட்டது.

நடனம் ஆடிக்கொண்டிருந்தவர்கள் தாய்-மகள் ஜோடிகள்.

ஓம்கார் கலைக் கழகத்தில் தாய்-மகள் எனக் கிட்டத்தட்ட 15 ஜோடிகளைக் காண இயலும். பரதநாட்டியம் தங்களுக்கு மட்டுமன்றி தங்கள் மகள்களுக்கும் உயிர்மூச்சாக இருப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைவதாக தமிழ் முரசிடம் பேசிய ஓம்கார் கலைக் கழக நடனமணிகள் கூறினர்.

தங்கள் மகள்களுடன் இணைந்து பரதநாட்டியப் பயிற்சிகளில் ஈடுபடும்போதும் இக்கலையைப் பற்றிக் கலந்துரையாடும்போதும் பரதநாட்டிய நிகழ்ச்சிகளுக்கு ஒன்றாகச் செல்லும்போதும் தாய்-மகள் உறவு வலுவடைவதாக அவர்கள் பகிர்ந்துகொண்டனர்.

தங்களுக்கு இடையிலுள்ள தலைமுறை இடைவெளியைத் தகர்க்க பரதக் கலை பெருமளவில் உதவியுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.

“சிறுவயதிலிருந்தே எனது பரதநாட்டியப் பயணம் தொடங்கியது. அதேபோல் என்னுடைய மகளும் பரதக் கலையைப் பயின்று மேடைகளில் ஆட வேண்டும் என்ற ஆசை எனக்குள் ஏற்பட்டது. கடுமையான பயிற்சிக்குப் பிறகு என் மகள் மேடையில் நளினமாக ஆடுவதைப் பார்த்தேன். அப்போது எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது. அவர் முதன்முதலாக மேடை ஏறியபோது என்னை அறியாமலேயே ஆனந்தக் கண்ணீர் வழிந்தோடியது. என் மகளுடன் இணைந்து மேடையில் ஆடுவதே எனது இலக்கு,” என்று வாடிக்கையாளர் சேவை உதவி மேலாளராகப் பணிபுரியும் 41 வயது பரிமளா தேவி செல்வராஜு தெரிவித்தார்.

“கடந்த எட்டு ஆண்டுகளாகப் பரதநாட்டியம் பயின்று வருகிறேன். நான் ஆடுவதைப் பார்த்து என் மகளுக்கும் அதில் ஆர்வம் ஏற்பட்டது. எனக்குத் தமிழ் கலாசாரம் மீது அதிகப் பற்று உள்ளது. அதை அடுத்த தலைமுறையினரும் பேணிக் காப்பது மட்டுமல்லாது, புதிய உச்சத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்பதே எனது விருப்பம். எனவே, பரதநாட்டிய வகுப்பில் எனது மகளைச் சேர்த்துவிட்டேன்,” என்று மனிதவள நிர்வாகியாகப் பணிபுரியும் 51 வயது சரஸ்வதி சுப்பையா கூறினார்.

“நான் நடனமாடும்போது ஏதேனும் தவறு செய்தால் என் அம்மா அதை உடனடியாகச் சுட்டிக்காட்டுவார். எனக்கு வழிகாட்டியாகவும் முன்மாதிரியாகவும் அவர் இருக்கிறார்,” என்று அவரது மகளான 17 வயது கெஷ்மிந்த கோர் தெரிவித்தார்.

“பரதநாட்டிய வகுப்பில் கற்றுக்கொண்டவற்றை ஒவ்வொரு நாளும் தூங்கச் செல்வதற்கு முன்பு நானும் என் இரு மகள்களும் ஒன்றிணைந்து பயிற்சி செய்வோம். அதற்காகவே கிட்டத்தட்ட பத்து நிமிடங்களை நாங்கள் ஒதுக்குவோம். இது எங்களது வாழ்க்கையின் ஒரு பகுதியாகிவிட்டது. இவ்வாறு செய்வதால் எனது மகள்கள் என்னுடன் மிகவும் நெருக்கமாக இருக்கிறார்கள். இதன்மூலம் என் மகள்களுக்குச் சிறந்த ஒரு தாயாக இருப்பதுடன் அவர்களுக்கு நல்ல தோழியாகவும் இருக்க முடிகிறது,” என்று மனிதவளத் துறை நிபுணரான 45 வயது திருமதி புஷ்பா தெக்வானி கூறினார்.

40க்குப் பிறகும் பரதம்

ஓம்கார் கலைக் கழகத்தில் 40 வயதும் அதற்கும் மேற்பட்ட வயதும் உடைய நடனமணிகள் கிட்டத்தட்ட 30 பேர் இருக்கின்றனர்.

இவர்களில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பரதநாட்டியம் பயிலத் திரும்பியவர்களும் அடங்குவர்.

இப்பிரிவைச் சேர்ந்தவர்கள் சிறுவயதிலிருந்து பரதநாட்டியக் கலையைக் கற்று, பல நிகழ்ச்சிகளில் நடனமாடி, அரங்கேற்றத்தை முடித்த மிக அனுபவம் வாய்ந்த நடனமணிகள் ஆவர்.

திருமண பந்தத்தில் இணைந்து, தாய்மை அடைந்து, குடும்பப் பொறுப்புகளுடன் வேறு பொறுப்புகளையும் கருத்தில் கொண்டு, நேரமின்மை காரணமாகப் பரதக் கலையைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

ஆனால், சபை ஆடிய பாதம் ஒருபோதும் நிற்காது என்பதற்கேற்ப, பிள்ளைகள் வளர்ந்ததும் அவர்களது கவனம் மீண்டும் பரதநாட்டியத்தின் திசையை நோக்கித் திரும்பியது.

“என் இரு பிள்ளைகளுக்கும் தற்போது 20 மற்றும் 17 வயதாகின்றன. அவர்கள் சிறு பிள்ளைகளாக இருந்தபோது அவர்களைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு இருந்தது. அத்துடன், ஆசிரியராகப் பணிபுரியும் எனக்கு வேலைப்பளுவும் அதிகமாக இருந்தது. இதனால் எனது பரதநாட்டியப் பயணத்திலிருந்து சிலகாலம் ஒதுங்கினேன். ஆனால், பரதநாட்டியம் மீது எனக்கு இருந்த ஆர்வம் துளியளவும் குறையவில்லை. 10 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு பரதநாட்டியத்துக்குத் திரும்பினேன்.

“நீண்டகாலத்துக்குப் பிறகு பரதநாட்டியத்தில் மீண்டும் சேரும்போது பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. வயது அதிகரித்துவிட்டதால் முன்பு இருந்த உடல் வலிமை தற்போது இல்லை. நடனமாடும்போது எளிதில் சோர்வடைகிறேன். இருப்பினும், இவற்றை எல்லாம் கடந்திட இக்கலை மீது நான் வைத்துள்ள பக்தி தூண்டுகோலாக இருக்கிறது,” என்று ஆசிரியராகப் பணிபுரியும் 49 வயது ரத்னா செல்வதுரை தெரிவித்தார்.

“நான் கடந்த ஆறு மாதங்களாகப் பரதநாட்டியம் கற்று வருகிறேன். 40 வயதுக்கும் மேலாகிவிட்ட நிலையில் இக்கலையைப் புதிதாகக் கற்றுக்கொள்ள எனக்கு முதலில் தயக்கமாக இருந்தது. ஆனால் தயக்கத்தை ஓரங்கட்டிவிட்டு இந்தப் புதிய அத்தியாயத்தில் காலடி எடுத்துவைத்தேன்.

“இளம் வயதில் பரதநாட்டியத்தை முறைப்படி கற்றுக்கொள்ள எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அதன் பிறகு குடும்பம், வேலை என இருந்துவிட்டேன். சுமார் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு என் கணவர் காலமானார். அதன்பிறகு என் பிள்ளைகளுக்கு எல்லாம் நான்தான் என்ற நிலை ஏற்பட்டது. இந்நிலையில், பரதக் கலை மீது எனக்கு இருந்த ஆர்வத்தை ஓம்கார் கலைக் கழகத்தில் நடனமணியாக இருக்கும் என் மகள் நன்கறிவார். இப்பள்ளியில் சேர்ந்து பரதக் கலையைக் கற்றுக்கொள்ளுமாறு அவர்தான் ஊக்குவித்தார்.

“பரதக் கலை எனக்குத் தியானம் போன்றது. வாழ்வில் உள்ள சவால்களை மறந்து எனது உணர்வுகளை வெளிப்படுத்த அது மிகச் சிறந்த தளமாக இருக்கிறது,” என்றார் ஆசிரியரான 52 வயது மோகனா முரளிதரன்.

பரதம் பயில நோய் தடையல்ல

கடுமையான நோய்கூட ஒருவரது வாழ்க்கையைப் புரட்டிப் போடுவதுடன் பரதக் கலைப் பயணத்தைத் தடம் புரளச் செய்யலாம். ஆனால், தம்மை அச்சுறுத்திய கொடிய நோயையும் வென்று இன்றும் மேடைகளில் நடனமாடுகிறார் 48 வயது பரமேஸ்வரி வீரசிங்கம்.

“எனக்கு ஆறு வயதாக இருந்தபோது பரதநாட்டிய வகுப்புக்குச் செல்லத் தொடங்கினேன். பிறகு, திருமணமாகிக் குழந்தைகள் பிறந்த பிறகு, பரதநாட்டியத்திலிருந்து தற்காலிகமாக விலகும் சூழ்நிலை ஏற்பட்டது. கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு 2016ஆம் ஆண்டில் மீண்டும் பரதநாட்டிய வகுப்பில் சேர்ந்தேன். பரதக் கலையைத் தொடர முற்பட்டபோது எதிர்பாராத பேரிடி விழுந்தது. எனக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குச் சிகிச்சை பெற்றேன். அந்நேரத்தில் என்னுடைய குடும்பத்தினர் எனக்கு உறுதுணையாக இருந்தனர். சிகிச்சை பெற்ற பின்னர் மீண்டும் எனது பரதக் கலைப் பயணத்தைத் தொடர்கிறேன்.

“அதற்கு முன்னதாக நான் மேடையில் நடனம் ஆடுவதை என் இரு மகள்களும் பார்த்ததில்லை. கடந்த ஐந்து ஆண்டுகளாக நான் பல நிகழ்ச்சிகளில் நடனமாடி வருகிறேன். அவர்கள் எனது நடனத்தை நேரில் பார்த்து ரசித்தனர்; பெருமையடைந்தனர்,” என்று ஆசிரியரான பரமேஸ்வரி நெகிழ்ந்தவாறு பகிர்ந்துகொண்டார்.

வாழ்வில் தாம் சந்தித்த பல்வேறு சவால்களை முறியடிக்கவும் அவற்றிலிருந்து விடுபடவும் பரதக் கலை முக்கியப் பங்கு வகித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

வியக்க வைக்கும் கடப்பாடு

குடும்பம் மற்றும் வேலைப் பொறுப்புகள் இருக்கும்போதிலும் 40 வயதுக்கு மேலாகிவிட்டபோதிலும் பரதநாட்டிய வகுப்புகளுக்கு வாரந்தோறும் மிகுந்த முனைப்புடன் வந்து, கடுமையாகப் பயிற்சி செய்து, அனைவரும் கரவொலி எழுப்பும் வகையில் நடனமாடும் தம் நடனமணிகளைப் பார்த்துத் தாம் வியப்படைவதாகப் புகழாரம் சூட்டினார் ஓம்கார் கலைக் கழகத்தின் கலை இயக்குநர் எஸ். ஸ்ரீதேவி.

“பரதநாட்டியம் வகுப்பில் சேர வேண்டும், அக்கலையைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற வேட்கையில் 40 வயதும் அதற்கும் மேற்பட்ட பல தாய்மார்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு என்னை அணுகினர். முதலில் நான் தயங்கினேன். பரதநாட்டியக் கலைஞர்களுக்கு நல்ல உடற்திறன், உடல் வலிமை இருப்பது அவசியம். கடுமையாகப் பயிற்சி செய்ய வேண்டும். சிறு பிள்ளைகள், இளம் பெண்கள் ஆகியோருக்கு இது ஒரு பிரச்சினையாக இருக்காது.

“நடுத்தர வயது தாய்மார்களின் ஆரோக்கியநிலை, அவர்களால் தொடர்ந்து வகுப்புகளுக்கு வர முடியுமா போன்றவற்றைப் பற்றி யோசிக்க வேண்டி இருந்தது. ஆனால், பரதநாட்டிய வகுப்பில் சேர வேண்டும் என நடுத்தர வயது தாய்மார்கள் பலர் மீண்டும் மீண்டும் என்னைக் கேட்டுக்கொண்டனர். எனவே, அவர்களைச் சேர்த்துக்கொள்ள முடிவெடுத்தேன். 40 வயதும் அதற்கும் மேற்பட்ட வயதுடைய பெண்களுக்கான வகுப்புகளை ஓம்கார் கலைக் கழகம் தொடங்கியது. இப்பெண்கள் மிகுந்த கடப்பாட்டுடன் வாரந்தோறும் வகுப்புகளுக்கு வந்து, சிரத்தையுடன் பயிற்சி செய்வதைப் பார்த்து பிரமித்தேன்.

“தற்போது நாங்கள் எல்லா வயதினரையும் சேர்த்துக்கொள்கிறோம். அவர்கள் அனைவருக்கும் பல நாட்டிய நிகழ்ச்சிகளை நடத்துகிறோம். அவற்றில் 5 வயது முதல் 60 வயதினர் வரை ஆடுகின்றனர்.

“பரபரப்பான வாழ்க்கைச் சூழலுக்கு இடையே தாய்மார்களும் அவர்களின் மகள்களும் இணைந்து ஒரே நடவடிக்கையில் ஈடுபட பரதநாட்டியம் பேரளவில் உதவுகிறது. அவர்களது உறவை வலுப்படுத்த இது ஒரு பொதுத் தளமாகவும் தலைசிறந்த வாய்ப்பாகவும் அமைகிறது. இக்கால பதின்மவயதினர் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். சமூக ஊடகத்தில் அதிக நாட்டம் கொண்டு அதில் கணிசமான நேரத்தைச் செலவிடுகின்றனர். அவர்களைத் தங்கள் பக்கம் வைத்துக்கொண்டு ஒன்றாக நேரத்தைச் செலவழிக்கத் தாய்மார்களுக்குப் பரதம் கைகொடுக்கிறது.

“பல ஆண்டுகளாகப் பரதக் கலை பயின்று வரும் நடனமணிகள் இக்கலையைத் தங்கள் மகள்களுக்கும் அறிமுகப்படுத்துகின்றனர். அவர்களைப் பரதநாட்டிய வகுப்புகளில் சேர்த்துவிடுவது மட்டுமல்லாது அவர்களுடன் சேர்ந்து பயிற்சி செய்கின்றனர். இதன்மூலம் அவர்களின் மகள்களுக்கும் பரதக் கலை மீது அதிக ஈடுபாடு ஏற்படுகிறது. பரதக் கலை மீது ஒருமுறை ஆர்வமும் பக்தியும் வந்துவிட்டால் அது காலத்துக்கும் அழியாது. அது வாழையடி வாழையாகத் தொடரும் என்பதால் பரதக் கலை என்றென்றும் வாழும் கலையாக இருக்கும்,” என்று தெரிவித்தார் ஏறத்தாழ 12 ஆண்டுகளாக முழுநேரமாகப் பரதநாட்டிய வகுப்புகளை நடத்திவரும் ஸ்ரீதேவி.

புதிய பரிமாணங்களில் பரதம்

ஒரு காலத்தில் பரதநாட்டியம் என்றாலே சிறுமியர், இளம் பெண்கள், ஒருசில ஆண்கள் மட்டுமே ஆடும் நடனம் என்ற கருத்து மேலோங்கி இருந்தது. அதுபோலவே பெரும்பாலான மேடை நிகழ்ச்சிகளும் அமைந்தன. 

ஆனால், தற்போது நிலைமை மாறிவிட்டது. தாய்-மகள் ஜோடிகள், 40 வயதும் அதற்கும் மேற்பட்ட வயதும் உடைய நடனமணிகள் எனப் புதிய பரிமாணங்களில் பரதக் கலை உயிர்த்தெழுந்து பீடுநடை போடுகிறது.

தங்கள் தாய்மார்களுடன் சேர்ந்து இளம் பெண்கள் பரதநாட்டியம் ஆடுவதைப் பார்க்கும்போது பரதக் கலை தலைமுறை தலைமுறையாகச் செழித்தோங்கும் என்ற நம்பிக்கை பிறக்கிறது.

கடும் பயிற்சிக்குப் பின்னர் என் மகள் மேடையில் நளினமாக ஆடுவதைப் பார்த்தேன். அப்போது எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது. அவர் முதன்முதலாக மேடை ஏறியபோது என்னை அறியாமலேயே ஆனந்தக் கண்ணீர் வழிந்தது. என் மகளுடன் இணைந்து மேடையில் ஆடுவதே எனது இலக்கு.
பரிமளா தேவி செல்வராஜு, 41
குறிப்புச் சொற்கள்