குழந்தைப் பருவத்தில் ஆர்வத்துடன் ஈடுபட்ட நடவடிக்கைகள் இன்னும் நம் நினைவுகளில் இருக்கும்.
ஆனால், இப்போது 53 வயதாகும் திரு குருசாமி பெருமாளின் குழந்தைப் பருவம் சற்று வித்தியாசமாகக் கழிந்தது. சிறுவயதில் அவர் விலங்கியல் தோட்டத்தில் விலங்குகளுடன் அதிக நேரம் செலவிட்டார்.
திரு குருசாமியின் தந்தை 1973ல் விலங்கியல் தோட்டத்தில் காப்பாளராக பணிபுரியத் தொடங்கினார். இதனால், அவர் தம் குடும்பத்துடன் முன்பு விலங்கியல் தோட்டத்தில் இருந்த தங்குமிடத்தில் வாழ்ந்து வந்தார்.
தம் தந்தையார் விலங்குகளைப் பற்றி தம்மிடம் நாளும் கூறிய கதைகளைக் கேட்டு வளர்ந்ததால், நாளடைவில் திரு குருசாமிக்கும் விலங்குகள்மீது ஆர்வம் பெருகியது. தற்போது திரு குருசாமி ‘நைட் சஃபாரி’யில் மூத்த பொறுப்பாளராக இருக்கிறார்.
சிங்கப்பூரில் நைட் சஃபாரி தொடங்கப்பட்டு 30 ஆண்டுகள் ஆகிவிட்டன. அப்போது முதலே திரு குருசாமியும் அங்கு பணிபுரிந்து வருகிறார். நைட் சஃபாரி தொடங்கப்பட்ட காலத்திலிருந்து இப்போது வரை குருசாமி அதன் வளர்ச்சிக்குப் பேரளவில் பங்களித்துள்ளார்.
அந்த இடம் பல நினைவுகளையும் அனுபவங்களையும் அவருக்கு அள்ளித் தந்துள்ளது. மூத்த பொறுப்பாளராகும் முன்னர் குருசாமி, விலங்கியல் தோட்டக் காப்பாளராகத்தான் தனது பயணத்தை தொடங்கினார். விலங்கியல் தோட்டக் காப்பாளராக அவர், பலவகை விலங்குகளையும் கையாண்டுள்ளார்.
“தொடக்கத்தில் அச்சமாகத்தான் இருந்தது. ஆனால், போக போக விலங்குகளை நன்கு புரிந்துகொண்ட பின்னர் எனக்கு செளகரியமாக இருந்தது. விலங்குகள் நம்மை நம்ப வேண்டும். அதற்கு நாம் விலங்குகளுடன் நல்ல உறவை வளர்த்துக்கொள்ள வேண்டும்,” என்று குருசாமி விளக்கினார்.
விலங்கியல் தோட்டக் காப்பாளராக இருந்தபோது விலங்குகளைக் கண்டுஅஞ்சிய அனுபவங்களை திரு குருசாமி நினைவுகூர்ந்தார்.
தொடர்புடைய செய்திகள்
அழிந்துபோன ‘செலாடாங்’ எனப்படும் ஒருவகைக் காளை ஒருமுறை தமக்குப் பின்னால் நின்றிருந்ததைத் திரு குருசாமி கவனிக்கவில்லை.
“நான் பின்னால் திரும்பிப் பார்த்தபோது அந்தக் காளை உறுமிக்கொண்டிருந்தது. நான் திடுக்கிட்டு போனேன். அது கம்பீரமாக இருந்தது. அந்த நினைவை மறக்கவே முடியாது,” என்றார் இவர்.
“சிங்கம், புலி சற்று மாறுபட்டவை. அவற்றின் மனநிலையை நன்கு புரிந்துகொள்ள வேண்டும். விலங்குகளால் நம்மை முகர்ந்து பார்க்க முடியும். அதை வைத்து அதன் சைகையும் மாறும். சிறிய விலங்குகள் பயந்த சுபாவம் கொண்டவை. சிறிய விலங்குகளைக் கையாள்வதுதான் கடினம். ஊர்வனவற்றைக் கையாள எனக்குப் பயமாக இருக்கும். பாலூட்டிகளைக் கவனித்துக்கொள்வது எனக்கு மிகவும் பிடிக்கும்,” என்று புன்முறுவலுடன் கூறினார் திரு குருசாமி.
திரு குருசாமி முதலில் காண்டாமிருகங்களை கவனித்துக்கொள்ளத் தொடங்கினார். தான் முன்பு கவனித்துக்கொண்ட காண்டாமிருகம் மாண்டுபோனது இவரையும் மனத்தளவில் பாதித்தது.
“அதன் பெயர் சீதா. சீதா மாண்ட பிறகு அத்துயரத்திலிருந்து மீள எனக்கு வெகுநாள் ஆனது. விலங்குகளுடன் அன்றாடம் நேரம் செலவிடுவதால் காலையில் எழுந்தவுடன் என் நினைவுக்கு வருவது விலங்குகளின் முகங்கள்தான்,” என்று உணர்ச்சிபொங்க இவர் கூறினார்.
பிரபல பனிக்கரடி இனுக்காவையும் அதன் இறப்புக்குமுன் திருகுருசாமிதான் கவனித்துக்கொண்டார். 18 ஆண்டுகாலம் விலங்கியல் தோட்டக் காப்பாளாராக பணியாற்றிய பிறகு, அவர் கடந்த 12 ஆண்டுகளாக நைட் சஃபாரியில் மூத்த பொறுப்பாளராக இருக்கிறார்.
திரு குருசாமியின்கீழ் நைட் சஃபாரியில் மட்டும் 30க்கும் மேற்பட்ட வனவிலங்குக் காப்பாளர்கள் பணிபுரிகிறார்கள். அவர்களுக்குப் பயிற்சி வழங்குவது, விலங்குகளின் இனப்பெருக்கத்தைக் கவனிப்பது, புதிய இன விலங்குகளை அறிமுகப்படுத்துவது போன்ற பல பொறுப்புகளைத் திரு குருசாமி கையாள்கிறார்.
விலங்குப் பாதுகாப்புக்காக அவர் வெளிநாடுகளுக்குச் சென்று பயிற்சியும் பெற்றுள்ளார் இவர்.
நைட் சஃபாரி இரவில் செயல்படுவதால் அங்கு பணிபுரிவதில் சவால்களும் அதிகம். “வெளிச்சம் அதிகம் இருக்காது. இருட்டில் வேலை பார்க்க வேண்டும். சோர்வாக இருக்கும். நீண்ட நேரம் வேலை பார்க்க வேண்டும். இருந்தாலும், இவை அனைத்தையும் நான் விரும்பியே செய்கிறேன்,” என்கிறார் திரு குருசாமி.
ஐந்து பிள்ளைகளுக்குத் தந்தையான இவர், தான் எவ்வாறு சிறு வயதில் தன் தந்தையாரிடமிருந்து விலங்குகளைப் பற்றி கதைகேட்டு வளர்ந்தாரோ, அதுபோல் தாமும் தன் பிள்ளைகளுக்கு அத்தகைய கதைகளைக் கூறி, அவர்களுக்கும் விலங்குகளின்மேல் ஆர்வத்தை விதைத்துள்ளார்.
வாழையடி வாழையாக, திரு குருசாமியின் மகள் ரிவர் ஒண்டர்சில் விலங்கினங்களைக் கவனித்துக்கொள்ளும் பணியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

