ஈரச்சந்தைத் தொழில் குறித்து வருந்தும் மீன் வணிகர்

ஈரச்சந்தைத் தொழில் குறித்து வருந்தும் மீன் வணிகர்

3 mins read
be75de6c-0b81-4a11-a3ba-26dbca870a34
கடந்த 20 ஆண்டுகளாக மீன் வணிகராக இருக்கும் உமா. - படம்: த. கவி

சிங்கப்பூரில் இந்தியர்கள் அதிகம் ஈடுபடாத ஒரு பணியில் 49 வயது ஹரிகிருஷ்ணன் உமா உள்ளார்.

அவர் ஒரு மீன் வணிகர். இத்துறையில் பெண் வேலை செய்வதும் அரிதே.

ஒவ்வொரு நாளையும் அதிகாலை நான்கு மணிக்குத் தொடங்கும் உமா, எந்நேரமும் புதைகாலணியை அணிந்துகொண்டு, குளிர்மிகு சூழலில் மீன், இறால், நண்டு, கணவாய் போன்றவற்றை ஈரச்சந்தையில் விற்றுவருகிறார்.

இந்த வேலைக்குப் போதிய உடல் வலிமையும் மன வலிமையும் வேண்டும் என்றார் அவர்.

ஆண்களுக்கு நிகராக மீன் விற்கும் உமா.
ஆண்களுக்கு நிகராக மீன் விற்கும் உமா. - படம்: த. கவி

மீன் வாடையில் நின்றுகொண்டு தொழில்செய்வது பல பெண்களுக்கும் ஈர்ப்பில்லாத பணியாக இருக்கும். ஆனால், ஒற்றைப் பெற்றோரான உமா, கடந்த 20 ஆண்டுகளாக இதில் ஈடுபட்டு வருகிறார்.

தம்மைப் பொறுத்தவரை இப்பணியில் தான் ஈடுபடாமல் இருந்தால் வணிகத்தை வேறு யார் பார்த்துக்கொள்ள முடியும் என்கிறார் இவர்.

கடையில் என்ன வகை கடல் உணவு விற்கப்படுகின்றன, என்னென்ன மீன் வகைகள் உள்ளன ஆகியவற்றை உமா கரைத்துக் குடிக்க கிட்டத்தட்ட ஓராண்டு ஆனது.

வாடிக்கையாளர்கள் மீனைத் தேர்ந்தெடுத்த பிறகு ஒவ்வொரு மீனையும் அறுத்து, அதைச் சுத்தம் செய்து தரும் திறனை கற்றுக்கொள்ள தமக்கு நீண்டநாள் ஆனதாக உமா சொன்னார்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.
மீன்களைச் சுத்தம் செய்யும் பணியில் உமா.
மீன்களைச் சுத்தம் செய்யும் பணியில் உமா. - படம்: த. கவி

ஆண் மீன் வணிகர் ஒருவர் உடல் உழைப்புடன் எவ்வாறு செயல்படுவாரோ, அதற்கு நிகராக உமாவை தேக்கா ஈரச்சந்தையில் இருக்கும் ‘பிகே ஃபிஷ் சப்ளையர்’ கடையில் காணலாம்.

தொழில் தொடங்கிய புதிதில் சரியான முறையில் மீனைச் சுத்தம் செய்யத் தெரியாமல் இருந்த உமாவிற்கு வாடிக்கையாளர்களின் குறைகூறல்கள் இருந்தன.

“வெட்டும்போது காயங்கள் ஏற்படும்; எரிச்சல் உண்டாகும்; விரல்கள் வீங்கும். ஆனால், இந்தப் பணியில் இது இயல்புதானே!” என்று புன்முறுவலுடன் கூறினார் உமா.

தொடக்கத்தில் அவர் தம்முடைய முன்னாள் கணவருடன் இணைந்து உணவுத்தொழிலில் ஈடுபட முடிவெடுத்தபோது கடை வாடகை கூடியிருந்தது. மீன் கடைக்கு அப்போது வாடகை குறைவாக இருந்ததால் இருவரும் மீன் வணிகத்திற்குத் தங்களை தகவமைத்துக் கொண்டனர்.

ஒவ்வோர் அதிகாலையும் லாரி ஓட்டிக்கொண்டு ஜூரோங் மீன்பிடித் துறைமுகத்திற்குச் சென்று அங்கிருக்கும் மீன் வழங்குநர்களுடன் மலாய் மொழியில் பேரம் பேசி, விற்பதற்குத் தேவையான கடல் உணவுவகைகளை வாங்கி வருவார் உமா.

ஜூரோங் மீன்பிடித் துறைமுகத்தில் மலாய் மொழியில் பேரம் பேசி மீன் வாங்கும் உமா. 
ஜூரோங் மீன்பிடித் துறைமுகத்தில் மலாய் மொழியில் பேரம் பேசி மீன் வாங்கும் உமா.  - படம்: த. கவி

கணவருடன் மணமுறிவு ஏற்பட்ட பிறகு, கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக உமாவின் மகள் மீன் வணிகத்தில் உதவி வருகிறார். உமாவுக்கு இரண்டு பிள்ளைகள். அவரது மூத்த மகள் உமாவைப் போல ஈடுபாடு காட்டி வருகிறார்.

இக்காலத்து இளையராக இருக்கும் அவரது மகள், வணிகச் சூழலைப் பொருட்படுத்தாமல் இத்தொழிலில் இறங்கியுள்ளார்.

“என் மகளை நினைத்து எனக்குப் பெருமையாக உள்ளது. யாரும் இக்காலத்தில் ஈரச்சந்தையில் வேலை பார்க்க விரும்ப மாட்டார்கள். பெரிய சுறாமீனைக் கூட அவளால் அறுத்துச் சுத்தம் செய்ய முடியும்,” என்று உமா பெருமிதத்துடன் கூறினார்.

கொவிட்-19 தொற்றுப் பரவலுக்கு முன் தொழில் சிறப்பாக இருந்ததாகக் குறிப்பிட்ட உமா, தற்போது ஈரச் சந்தை வணிகம் மிகவும் மந்தமாக உள்ளதாக வருந்தினார்.

“யாரும் பெரும்பாலும் வீட்டில் சாப்பிடுவதில்லை. கடைகளில் வாங்கிச் சாப்பிடுவதால் ஈரச்சந்தை வணிகத்தின் நிலை மோசமாக உள்ளது. எல்லாமே மின்னிலக்கமயமாகச் சென்று கொண்டிருக்கிறது,” என்று சொன்னார் உமா.

தம் மகள் கூடிய விரைவில் மேற்படிப்பு மேற்கொள்ள இருப்பதால் காலப்போக்கில் தொழிலை முன்னெடுத்துச் செல்வது கேள்விக்குறியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

‘இத்தொழிலின் எதிர்காலம் எவ்வாறு இருக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. இயன்றவரை நான் தொழிலைத் தொடர்வேன்,” என்றார் உமா.

கொவிட்-19 பரவலுக்கு முன்பிருந்ததைப்போல் இப்போது ஈரச்சந்தை வணிகம் இல்லை என வருத்தத்துடன் கூறினார் உமா.
கொவிட்-19 பரவலுக்கு முன்பிருந்ததைப்போல் இப்போது ஈரச்சந்தை வணிகம் இல்லை என வருத்தத்துடன் கூறினார் உமா. - படம்: த. கவி
குறிப்புச் சொற்கள்