நாற்காலியைப் பயன்படுத்தி எளிய யோகாசனப் பயிற்சி செய்வதன் மூலம் தமது முதுமைக்காலத்திலும் மீண்டும் புத்துணர்ச்சி பெறுகிறார் அமீனாள் ஷெய்க் உத்மான், 82.
அண்டைவீட்டார் ஒருவரின் பரிந்துரையாலும் பிள்ளைகளின் ஊக்குவிப்பாலும் திருவாட்டி அமீனாள் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக யோகாசனப் பயிற்சியை மேற்கொண்டு வருகிறார். யோகாவைத் தொடர்வதால் உடல் வலுவடைவதுடன், மனநலனும் உடலை வளைக்கும் ஆற்றலும் மேம்பட்டுள்ளதையும் அவர் உணர்கிறார்.
டெப்போ ரோட்டில் புளோக் 103ஏல் வசிக்கும் திருவாட்டி அமீனாள், வார நாள்களில் காலை 10 மணி முதல் 11 மணி வரை சன்லவ் துடிப்புடன் மூப்படைதல் நிலையத்திற்குச் செல்கிறார்.
அண்டைவீட்டில் வசிக்கும் சீன மூதாட்டி ஒருவர் இதுபற்றி தமக்குத் தெரிவித்ததாக அவர் கூறினார். “என் அண்டை வீட்டார் அடிக்கடி செய்தித்தாள் படிப்பதால் வயதானோருக்கு நன்மை பயக்கும் திட்டங்களைப் பற்றித் தெரிந்துகொள்கிறார்,” என்றார் திருவாட்டி அமீனாள்.
“யோகா பற்றி அதிகம் தெரியாததால் தொடக்கத்தில் உடற்பயிற்சி செய்யத் தயங்கினேன்,” என்று திருவாட்டி அமீனாள் கூறினார்.
“இது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என என் பிள்ளைகள் எனக்கு அடிக்கடி சொல்லி, ஊக்கம் கொடுத்ததால் அங்கு செல்வதற்கு எனக்கு மெல்ல துணிவு வந்தது,” என்று அவர் கூறினார்.
இந்தப் பயிற்சி மூலம் மகிழ்ச்சியையும் நிம்மதியையும் பெறுவதாகக் கூறும் திருவாட்டி அமீனாள், தம்மைப் போன்ற முதியவர்கள் வீட்டில் முடங்கி இருப்பதைத் தவிர்த்து இயன்றவரை வெளியே சென்று உடற்பயிற்சி செய்யும்படி கேட்டுக்கொண்டார்.
ஜூன் 21ஆம் தேதி டெப்போ ஹைட்சிலுள்ள சன்லவ் துடிப்புடன் மூப்படைதல் நிலையத்தில் அண்மையில் கலந்துகொண்ட 100 முதியோரில் திருவாட்டி அமீனாளும் ஒருவர்.
தொடர்புடைய செய்திகள்
சக்கர நாற்காலியைப் பயன்படுத்துவோரையும் ஒருங்கிணைக்கும் வகையில் அந்த உடற்பயிற்சி நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முதியோருக்கு ஏற்ற, அவர்களை எளிதில் சென்றடையக்கூடிய வண்ணம் யோகாசனப் பயிற்சிகளை அறிமுகம் செய்வதன் மூலம் மற்ற உடற்பயிற்சி நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்படி அவர்கள் ஊக்கம் பெறுகின்றனர்.
“யோகா பயிற்சியைக் குழு நடவடிக்கையாகவும் செய்து மகிழலாம் என்பதை எடுத்துக்காட்டுவது இந்த நிகழ்ச்சியின் நோக்கம்,” என்று டெப்போ ஹைட்சின் துடிப்புமிக்க மூப்படைதல் நிலையத்தின் மேலாளர் ஷோபிகா மகேந்திரன் கூறினார்.
திருவாட்டி அமீனாள் துடிப்புமிக்க மூப்படைதல் நிலையத்திற்கு மகிழ்ச்சியுடன் சென்று வருவதைக் கண்டு மகிழ்வதாக போக்குவரத்துச் சேவை நிறுவனம் நடத்தி வரும் அவர் மகள் ஹபீபா முகைதீன், 60, கூறினார்.
“இருந்தபோதும், என் தாயார் கலந்துகொள்ளும் யோகா வகுப்புகளில் அவர்தான் ஒரே தமிழர். தமிழர்கள் அதிகம் பங்கேற்பதை நாங்கள் அனைவரும் விரும்புகிறோம்,” என்றார் திருவாட்டி ஹபீபா.

