தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

லி‌‌‌‌ஷா மகளிர் பிரிவின் புதிய செயலவைக் குழு அறிமுக விழா

3 mins read
94e28ec8-ef16-4a52-889b-ca7a84205df7
லி‌‌‌‌ஷா மகளிர் பிரிவின் புதிய செயலவைக் குழுவும் துணை அமைச்சர் ஆல்வின் டானும் (நடுவில்). - படம்: த.கவி
multi-img1 of 5

லிட்­டில் இந்­தியா கடைக்­கா­ரர்­கள், மர­பு­டை­மைச் சங்­க (லிஷா) மகளிர் பிரி­வின் புதிய செயலவைக் குழு உறுப்பினர்களின் அறிமுக விழா ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 7) ஆசிய நாகரிக அரும்பொருளகத்தில் நடைபெற்றது.

லி‌‌‌‌ஷா மகளிர் பிரிவின் புதிய தலைவியாக எலி‌‌‌ஷா வாணி பெருமாள் செயல்படுவார். அப்பிரிவின் நிறுவனரும் கடந்த 10 ஆண்டுகளாக அதன் தலைவியாகவும் செயலாற்றிய திருவாட்டி ஜாய்ஸ் கிங்ஸ்லியிடம் இருந்து தலைமைப் பொறுப்பை திருமதி எலி‌‌‌ஷா ஏற்றுள்ளார்.

“லி‌‌‌ஷா மகளிர் பிரிவில் மேலும் பல சுவாரசியமான, பயனுள்ள நிகழ்ச்சிகளைப் பெண்களுக்காக தொடர்ந்து ஏற்பாடு செய்ய பல திட்டங்கள் உள்ளன. இந்தியப் பெண்கள் அனைவரும் ஒன்றுகூடி ஒருவருக்கொருவர் கற்றுக்கொடுக்கவும் கற்றுக்கொள்ளவும் பல வாய்ப்புகளை அமைக்‌க வேண்டும்,” என்றார் திருமதி எலி‌‌‌ஷா.

வர்த்தக, தொழில் துணை அமைச்சர் ஆல்வின் டான், விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

“பல்வேறு பின்னணிகள், தொழில்கள், வாழ்க்கைமுறை கொண்ட பெண்கள் ஒன்றிணைவதற்கு ஒரு முக்கியத் தளத்தை லிஷா மகளிர் பிரிவு வழங்குகிறது. மேலும், லிட்டில் இந்தியா வர்த்தகத்திலும் கலாசாரத்திலும் பெண்கள் முக்கியப் பங்காற்ற லிஷா மகளிர் பிரிவு வழிவகுக்‌கிறது,” என்று திரு டான் தமது உரையில் கூறினார்.

தாம் தலைவியாக இருந்தபோது கிட்டத்தட்ட 200 நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்த திருவாட்டி ஜாய்ஸ் ஆற்றிய உரையில், தமது பயணத்தை நினைவுகூர்ந்தார்.

“ஓர் உண்மையான தலைவர், மேலும் சிறந்த தலைவர்களை உருவாக்குவார்,” என்றார் அவர்.

நிகழ்ச்சியில் சிறப்புப் பேச்சாளராகக் கலந்துகொண்ட தமிழ்நாட்டின் பிரபல தொலைக்காட்சி நெறியாளரும் தன்முனைப்புப் பேச்சாளரும் எழுத்தாளருமான கோபிநாத், பெண்கள் அதிகாரத்தைப் பற்றி வருகையாளர்களுடன் கலந்துரையாடினார்.

தத்தம் துறைகளில் ஆற்றல் வாய்ந்த ஏழு பெண் தலைவர்கள், திரு கோபிநாத்துடன் உரையாட நிகழ்ச்சியின் தொடக்‌கத்திற்கு முன்னரே தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களின் கேள்விகளுக்‌குப் பல்வேறு எடுத்துக்‌காட்டுகளுடன் விளக்கமாகப் பதிலளித்தார் திரு கோபிநாத்.

பெண்களுக்‌காக பெண்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சி, பெண்கள் அதிகாரம் தலைப்பையொட்டி அமைக்‌கப்பட்டிருந்ததால் அதில் கலந்துகொள்ள முடிவெடுத்ததாக சொன்னார் திரு கோபிநாத்.

“வியாபாரம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஆண்களின் பங்களிப்புடன் பெண்களின் யோசனைகளும் இணையும்போது, அவை மேலும் மேன்மை அடையும் என நான் நினைக்கிறேன். அதற்கான ஒரு புரிதலை இன்றைய நிகழ்ச்சியில் பார்க்‌க முடிந்தது.

“பலரும் நிறைய கேள்விகளை ஆர்வத்துடன் கேட்டார்கள். எனக்கும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதில் மிகவும் மகிழ்ச்சி,” என்று தமிழ் முரசிடம் அவர் கூறினார்.

நிகழ்ச்சியின் மற்றோர் அங்கமாக, ‘கிரியேட்டிங் ஏ கிளாஸ் கார்ப்பரட்ஸ்’ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான திருவாட்டி ஜாய்ஸ் உட்பட மூன்று சிறப்புப் பேச்சாளர்கள், தங்கள் தொழில் சார்ந்த தலைப்புகளையொட்டி உரையாற்றினர்.

‘பின்டாட் ஸ்மார்ட் கேப்பிட்டல் சொலுஷன்ஸ்’ நிறுவனத் தலைமை நிர்வாக அதிகாரி கிருஷ்ணமணியும் ‘நஃபில்ட் ஹோல்டிங்ஸ்’ தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் சமிந்தராஜும் மற்ற இரு பேச்சாளர்கள்.

உள்ளூர் தொழில்முனைவோருக்‌கு ஆதரவளிப்பதற்காக, அவர்களால் தயாரிக்‌கப்பட்ட ஆடை அணிகலன்களை அணிந்துகொண்ட விளம்பரக் கலைஞர்களின் ஆடை அலங்கார நடை அங்கமும் இடம்பெற்றது.

நிகழ்ச்சியின் இறுதியில் அதிர்ஷ்டக் குலுக்கலும் நடைபெற்றது.

குறிப்புச் சொற்கள்