செந்தோசா தீவு மேம்பாட்டுக் கூட்டு நிறுவனத்தில் உள்ள நுழைவுச்சீட்டுப் பிரிவில் எட்டு ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் 35 வயது புகுனேஸ் விஸ்வநாதனுக்கு ஏழு மொழிகள் அத்துபடி.
நாள்தோறும் வருகைதரும் சுற்றுப்பயணிகளை இன்முகத்துடன் வரவேற்பதோடு, தமிழ், மலாய், ஆங்கிலம், இந்தி, சீனம், பஹாசா இந்தோனீசியா, சைகை மொழி என மொத்தம் ஏழு மொழிகளில் அவர்களுடன் எளிதாக உரையாடுகிறார் புகுனேஸ்.
கடந்த ஜூன் 28ஆம் தேதி சிங்கப்பூர்ப் பயணத்துறைக் கழகம் ஏற்பாடு செய்த சிங்கப்பூர் பயணத்துறை விருது நிகழ்ச்சியில் புகுனேசுக்குச் சிறந்த வாடிக்கையாளர் சேவைக்கான விருது வழங்கப்பட்டது.
மலேசியாவின் பேராக் மாநிலத்தில் பிறந்து, ஜோகூரில் வளர்ந்த இவர், தமது 19வது வயதில் சிங்கப்பூருக்கு வந்தார். ஒரு தாதி ஆக வேண்டும் என்ற ஆசை இருப்பினும், சிங்கப்பூரில் பல ஆண்டுகளாக சேவைத் துறையில் வேலை செய்துவருவது மட்டற்ற மகிழ்ச்சி தருவதாகக் கூறுகிறார் இவர்.
“செந்தோசாவுக்கு வரும் பலதரப்பட்ட சுற்றுப்பயணிகளுடன் அவர்களது மொழிகளில் உரையாடுவது தொடக்கத்தில் சற்று கடினமாக இருந்தது. அப்போதெல்லாம் கூகல் மொழிபெயர்ப்பைப் பயன்படுத்திச் சமாளித்தேன்,” என்று புகுனேஸ் நினைவுகூர்ந்தார். சிறு வயதிலிருந்தே தமிழ், ஆங்கிலம், மலாய் மொழிகள் தவிர வேறு மொழிகளைக் கற்றுக்கொள்ள ஆசைப்பட்ட புகுனேஸ், இந்தித் திரைப்படங்களைப் பார்த்து அந்த மொழியை சிறிதளவு கற்றார். “2016ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டுவரை வடஇந்தியாவிலிருந்து அதிகமான சுற்றுப்பயணிகள் செந்தோசாவுக்கு வந்ததால் அவர்களுக்குப் புரியும்படி இந்தி மொழியில் பேசத் தொடங்கினேன்,” என்றார் இவர்.
தினமும் பல வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளைச் சந்திப்பதால் சீனம் மற்றும் இந்தோனீசிய மொழிகளையும் இவர் பேசப் பழகிக்கொண்டார். பழக்கப்பட்ட மொழியில் சுற்றுப்பயணிகளுடன் உரையாடுவதால் சேவையின் மீதான நம்பிக்கை வளரும் என்பது புகுனேசின் நம்பிக்கை.
“இக்காலத்தில் தொழில்நுட்பம் மேம்பட்டிருந்தாலும், அது ஒருவருக்கொருவர் முகம் பார்த்துப் பேசுவதற்கு இணையாகாது. அவர்களின் நம்பிக்கைக்கு இந்த தனித்திறம் மிக முக்கியம்,” என்கிறார் புகுனேஸ். நாளும் பலதரப்பட்ட மக்களைச் சந்தித்து அவர்களுடன் மகிழ்ந்து உரையடுவதில் இன்பம் காணும் இவர், இதுபோன்ற புகழ்பெற்ற சுற்றுலாத்தலச் சேவைத் துறையில் இருப்பதால், அதிக இளையர்கள் மொழித்திறன் போன்ற தனிப்பட்ட திறன்களை மேம்படுத்திக்கொள்ள முடியும் என்றும் நம்புகிறார்.
“செந்தோசா தீவுக்கு வரும் ஜப்பானிய சுற்றுப்பயணிகள் மிகவும் கனிவானவர்கள். அதனால், அடுத்ததாக ஜப்பானிய மொழியையும் கற்க விரும்புகிறேன்,” என்று புன்னகையுடன் கூறினார் புகுனேஸ்.