‘தீயோரை விலக்கியதால் திருந்த முடிந்தது’

‘தீயோரை விலக்கியதால் திருந்த முடிந்தது’

3 mins read
cb0d320e-41eb-4174-a511-e64c30c7c455
பத்து முறை சிறைக்குச் சென்ற ஷான் ஜேக், திருந்தப்போவதாக மறுபடியும் சொன்னபோது அவரை யாரும் நம்பவில்லை. - படம்: ‘எவரஸ்டிங் ஃபார் செகன்ட் சான்சஸ்’

பத்து முறை சிறைக்குச் சென்ற ஷான் ஜேக், தாம் திருந்தி வாழப் போவதாகச் சொன்னபோது யாரும் அவரை நம்பத் தயாராகவில்லை. திருந்துவதாகக் கூறும் ஒவ்வோர் உறுதிமொழியையும் பொய்யாக்கியது இவரை இறுகப் பற்றிய போதைப்புழக்கம்.

எளிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்த திரு ஷான், தம் புன்சிரிப்புக்காகவும் விளையாட்டுத்தனத்திற்காகவும் பிறரால் விரும்பப்பட்டவர். “என் தந்தை தொழிற்சாலையில் வேலை செய்தார். தாயார் வீட்டைக் கவனித்து வந்தார். இருவருமே என்னையும் என் உடன்பிறந்தவர்களையும் பார்த்துக்கொள்ள பாடுபட்டனர்,” என்று அவர் கூறினார்.

உயர்நிலைப் பள்ளிப்பருவ காலத்தில்தான் திரு ஷான் தடம் மாறினார். பள்ளிப்படிப்பில் சிரமங்கள் ஏற்பட்டபோது அவருக்குத் தாழ்வு மனப்பான்மை ஏற்படத் தொடங்கியது. இதனால் படிப்பின்மீதான அவரது கவனம் சிதைய, நண்பர்களிடமிருந்து போதைப்புழக்கத்தைக் கற்றுக்கொண்டார். அந்த நண்பர்களுடன் கூடுதல் நெருக்கத்தை ஏற்படுத்தவேண்டும் என்பதற்காக இதனைச் செய்ததாகத் திரு ஷான் கூறினார்.

2004ல் தேசிய சேவையில் சேர்ந்த திரு ஷான், சில மாதங்களிலேயே சிறுநீரகப் பாதிப்புக்கு ஆளான தன் தந்தையை இழந்தார். அப்போதும்கூட அவர் தன்னைத் திருத்திக்கொள்ளவில்லை.

“நான் வழிதவறிய சோகத்தில் என் தந்தையின் உயிர் பிரிந்தது. அவர் இறந்த பின் எனக்குக் கடுமையான மனச்சோர்விலிருந்து தப்புவதற்கு இந்தத் தீய வழியைத் தவிர வேறு எதுவும் தெரியவில்லை,” என்றார் திரு ஷான்.

தேசிய சேவைக்குப் பின் வாகனம் ஓட்டுவது, மின்சாரப் பழுதுபார்ப்பு, சமையல் அறையையும் கழிவறையையும் சுத்தம் செய்வது போன்ற பணிகளில் அவர் ஈடுபட்டார். பதின்ம வயதில் அறிமுகமான ஒரு பெண்ணை சில ஆண்டுகளுக்குப் பின் சந்தித்து அவரை 2015ல் திருமணம் செய்துகொண்டார். ஏற்கெனவே ஒரு மகளுக்குத் தாயான அந்தப் பெண்ணுக்கும் ஷானுக்கும், திருமணத்திற்குப் பிறகு ஒரு மகன் பிறந்தார். சில ஆண்டுகளுக்குப் பின் ஷானின் மனைவி மணவிலக்குப் பெற்றார்.

“என்னைப் பற்றி தெரிந்தும் எனக்கு வாய்ப்பளிக்க எண்ணி அவர் என்னை மணந்தார். என்னை உறுதியாக நம்பிய என் முன்னாள் மனைவி என்னைப் பலமுறை மன்னித்தார். ஆனால் என்னை நான் திருத்திக்கொள்ளாமல் தவறுகளைச் செய்தபடி இருந்தேன்,” என்று அவர் கூறினார்.

பழைய நண்பர்களின் நட்பை விட்ட பிறகுதான் இவரது வாழ்க்கையில் உண்மையான மாற்றம் ஏற்பட்டது. ‘எச்சிஎஸ்ஏ’ சமூக சேவைகளுக்கான அமைப்பும் அவர் சேர்ந்த தேவாலயமும் இவருக்குக் கைகொடுத்தன. தம்மீதான மதிப்பை தக்கவைத்துக்கொண்ட திரு ஷான், திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை மேற்கொண்டு தற்போது அவர் வேலையிட, பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றுகிறார்.

சிங்கப்பூர் மஞ்சள் நாடா, சிங்கப்பூர் சைக்கிள் சங்கம், தேசிய தொண்டூழிய கொடைவள்ளல் நிலையம் (என்விபிசி) ஆகிய அமைப்புகளின் ஆதரவுடன், ஜூலை 1ஆம் தேதியன்று நடைபெற்ற ‘எவரஸ்டிங் ஃபார் செகன்ட் சான்சஸ்’ (‘Everesting for Second Chances’) நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழச்சியில் திரு ஷானின் மனமாற்றம் பாராட்டப்பட்டது.

தற்போது மற்றொரு துணையுடன் புதிய வாழ்க்கையை அமைக்கவுள்ள திரு ஷான், நடந்ததை எண்ணி துவண்டுபோகாமல் நடக்கப் போவதுமீது கவனம் செலுத்த விரும்புகிறார்.

“என் வாழ்க்கைக் கதையிலிருந்து ஒருவராவது தம் தவற்றை உணர்ந்து திருந்தவேண்டும் என விரும்புகிறேன்,” என்று அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்