ஓய்வில்லாச் சேவைக்குக் கிட்டிய அங்கீகாரம்

3 mins read
ba4dad84-f67e-4367-a2cb-faf53101c81a
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி உன்னத சேவை விருது பெற்ற நோபல் ‌‌‌ஷாஜி, 25. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

திடீரென ஒரு நெருக்கடியான சூழ்நிலை ஏற்படும்போது, ​​சில எளிய மனிதர்களின் அருஞ்செயல்களே பெரியதொரு தாக்‌கத்தை ஏற்படுத்துகின்றன.

நியூயார்க்கில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) வாடிக்கையாளர் சேவை முகவரான நோபல் ஷாஜி, 25, ஜனவரி 2023ல் வலிப்புநோயால் அவதிப்பட்டுக்‌கொண்டிருந்த ஒரு விமானப் பயணிக்கு எந்தத் தயக்கமுமின்றி உதவி செய்தார்.

திரு நோபலின் சேவையைப் பாராட்டி, அவருக்கு எஸ்ஐஏ தலைமை நிர்வாக அதிகாரி உன்னத சேவை விருது வழங்கப்பட்டது.

ரிட்ஸ்-கார்ல்டன் ஹோட்டலில் ஜூலை 11ஆம் தேதியன்று நடந்த விருதளிப்பு நிகழ்ச்சியில், உலகம் முழுவதுமிருந்தும் தங்கள் சேவைக்காகத் தனிநபர்கள், குழுக்கள் என 78 பேர் இவ்விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டனர்.

இந்தியாவில் பிறந்து வளர்ந்த நோபல் 2017ல் நியூயார்க்கிற்கு குடிபெயர்ந்தார். அங்கு பல்வேறு வாடிக்கையாளர் சேவைப் பணிகளில் பணியாற்றிய அவர், 2022ல் எஸ்ஐஏ நிறுவனத்தில் சேர்ந்தார். கொவிட்-19 தொற்றுப் பரவலின்போது எஸ்ஐஏ தன் ஊழியர்களுக்கு அளித்த ஆதரவு, அவருக்‌கு அங்கு வேலை செய்ய வேண்டும் என்பதற்கான உந்துதலாக இருந்ததாகச் சொன்னார்.

கடந்த 2023 ஜனவரியில் நடந்த சம்பவத்தை நினைவுகூர்ந்த நோபல், ஓய்வறையில் பயணி ஒருவர் மயங்கிய நிலையில் இருப்பதாக தனக்கு அவசர அழைப்பு வந்ததைப் பற்றி விவரித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அவர், பயணிக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில், அவரை மருத்துவமனைக்கு வசதியாக அழைத்துச் செல்ல எல்லா ஏற்பாடுகளையும் செய்தார்.

அதனைத் தொடர்ந்து, பயணியின் உடைமைகளும் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்படுவதை உறுதிசெய்த நோபல், அவருக்குத் தேவையான மருந்துகளை வாங்குவதற்கும் தானே சென்றார்.

“அவர் சேர்க்‌கப்பட்டிருந்த மருத்துவமனையில் அந்தக் குறிப்பிட்ட மருந்து இல்லையென்பதால் நான் அதனை வாங்குவதற்கு நள்ளிரவில் நகரத்திலிருந்த 24 மணி நேர மருந்தகத்திற்கு என் வாகனத்தில் சென்றேன்,” என்று நினைவுகூர்ந்தார் நோபல்.

பயணியின் பயண அனுபவம் சீராக அமைந்திட, அடுத்து புறப்படவிருந்த விமானத்தில் அவருக்‌கு முன்பதிவு செய்வதிலிருந்து, அவர் தங்குவதற்கு ஹோட்டலையும் விமான நிலையத்திற்கு அவரை அழைத்துச் செல்ல போக்குவரத்தையும் ஏற்பாடு செய்வதுவரை, எல்லாவற்றையும் நோபலே முடிந்தவரை கவனித்துக்கொண்டார்.

“அப்பயணிக்கு உதவிசெய்ய அருகில் குடும்பத்தினரோ நண்பர்களோ இல்லாததால் அவரை கவனித்துக்கொள்வது என்னுடைய பொறுப்பானது.

“அன்று நான் இரவும் பகலும் உறங்காமல் வேலை செய்திருந்தாலும், அதன் பலனாக அப்பயணி பாதுகாப்பாக விமானத்தில் பயணம் செய்தார் என்ற தகவல் எனக்‌கு மனநிம்மதியை அளித்தது,” என்று நோபல் கூறினார்.

பயணிகளுக்குத் தயங்காமல் உடனடியாக சேவையாற்றுவதன் முக்கியத்துவத்தை நோபல் வலியுறுத்தினார்.

“நற்செயல்களைச் செய்வது எப்பொழுதும் மேலும் அதிக நன்மைக்கு வழிவகுக்கும் என்று நான் நம்புகிறேன். சூழ்நிலை எப்படி இருந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் பயணிகளுக்குச் சிறந்த அனுபவத்தை உறுதிசெய்வதே எனது நோக்கம்,” என்றார் அவர்.

எஸ்ஐஏ நிறுவனத்திற்காக தங்கள் முழு வாழ்வையும் அர்ப்பணித்த சக ஊழியர்களால் ஊக்கம் பெற்ற நோபல், ​​நீண்ட காலம் எஸ்ஐஏவுடன் வேலை செய்ய விரும்புகிறார்.

“இந்த விருதால் எனக்‌கு அங்கீகாரம் கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அதே நேரத்தில், பயணிகளுக்‌குச் சேவையாற்றி, அவர்களின் சுமுகமான பயணத்திற்கு ஒரு காரணமாக அமைவதில் நான் மேலும் பெருமை கொள்கிறேன்,” என்றார் நோபல்.

குறிப்புச் சொற்கள்