தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆனந்த பவன் - மக்கள் மனதில் வேரூன்றிய பெயர்

6 mins read
a2adc458-93fa-4630-84d1-1f8e46c20305
எண் 95 சையது ஆல்வி ரோட்டில் அமைந்துள்ள ஆனந்த பவன் உணவகம். - படம்: ஆனந்த பவன்
multi-img1 of 2

ஆனந்த பவனின் ரவா மசாலா தோசை 74 வயது திரு சங்கர் ராஜனை அவரின் பதின்ம வயதிலிருந்து இன்றுவரை ஆட்டிப்படைக்கிறது. 

அச்சமயம் எண் 221 சிலிகி சாலையில் அமைந்திருந்த உணவகத்தில் தமது மலாய், சீன நண்பர்களோடு பள்ளி மாணவரான அவரை வழக்கமாகக் காணலாம். பல்வகை தோசைகள், இனிப்புப் பலகாரங்கள் ஆகியவற்றைச் சுவைத்து நட்பு வளர்த்த அவர்கள், அவ்வுணவகத்தில் பரிச்சயமான முகங்கள் ஆயினர்.

“தம்பிகளா என்றுதான் எங்களை திரு குழந்தைவேலு அழைப்பார். மிக எளிமையான மனிதர். சில சமயம் எங்களுக்கு இலவசமாகக்கூட உணவளிப்பார். 

“ஆனந்த பவன் எப்போதும் வீட்டு சமையலைப் போல் இருக்கும், அதுவே அதன் பலம்,” என்றார் திரு சங்கர். 

திரு சங்கரின் மாமா திரு எல்.எஸ் நடராஜ ஐயர், ஆனந்த பவனில் பகுதிநேர காசாளராக இருந்த காலத்தில் அவர்களின் வீட்டில் ஆனந்த பவன் பலகாரங்கள் எந்நேரமும் இருக்கும். அவர்கள் இல்ல சுப நிகழ்வுகளில் எல்லாம் ஆனந்த பவனின் உணவு இடம்பெற்றிருக்கும். குடும்பத்தோடு இயைந்ததாகவே அவ்வுணவகத்தைக் கருதுகிறார், இன்றளவில் வாரந்தோறும் ஆனந்த பவன் உணவை விரும்பி உண்ணும் திரு சங்கர். 

நூற்றாண்டு வெற்றிப் பயணம்

எண் 221 சிலிகி சாலையில் வழங்கப்பட்ட உணவுச் சேவை.
எண் 221 சிலிகி சாலையில் வழங்கப்பட்ட உணவுச் சேவை. - படம்: ஆனந்த பவன்

சிலிகி சாலையின் எல்லிசன் கட்டடத்தில் ஆனந்த பவனின் பயணம் தொடங்கியது. 1924ல் திரு குழந்தைவேலு முத்துசாமி கௌண்டரால் திறக்கப்பட்ட உணவகம், பக்கத்தில் பணிபுரிந்த ‘டிராம்வே’, பேருந்து ஊழியர்களைப் பெரிதும் ஈர்த்தது. வீட்டுச் சமையலை நினைவுபடுத்தும் வகையில் பக்குவமாகத் தயாரிக்கப்பட்ட ஆனந்த பவனின் உணவு பல வகைகளில் உருமாறியுள்ளது. 

சைவ உணவைத் தாண்டி, நனிசைவ, சைன, இந்தோ-சீன உணவுவகைகளையும் இன்று மக்கள் ருசிக்கலாம். பல தலைமுறைகளாக இல்ல நிகழ்வுகளிலும் அதற்கு இடமுண்டு. வாடிக்கையாளர்களை முன்னிலைப்படுத்திய அதன் சேவைக்காக, சிங்கப்பூர் இந்திய வர்த்தக தொழிற்சபையின் நூற்றாண்டு சிறந்த சேவை விருதினை ஆனந்த பவன் பெற்றது. 

எங்களின் ஊழியர்களும் வாடிக்கையாளர்களுமே எங்களின் பலம். அவர்களின் நலனை முன்னிலைப்படுத்தி எங்களின் நெறிகளுக்கு இணங்கி செயல்படுவதும் உறவுகளை உறுதியாக வைத்துக்கொள்வதும் எங்களின் முன்னுரிமைகள்.
மூன்றாம் தலைமுறை தலைமை நிர்வாகியான வீரன் எட்டிக்கன்

ஆக்கத்தைக் கூட்டும் வண்ணம் தொழில்நுட்ப வளங்களை உணவகம் தமது இயக்கங்களில் இணைத்துள்ளது. சாங்கி விமான நிலையத்தில் உள்ள கிளையில் ஆசியாவிலேயே முதல் நிகழ்நேர மின்னிலக்க உணவுப் பட்டியல் பலகைகளும் ‘ஆர்எஃப்ஐடி’ தொழில்நுட்பம் பயன்படுத்தும் மேசைகளும் மக்களை வரவேற்கின்றன. கடந்த மூன்றாண்டுகளாக, சேவை இயந்திர மனிதர்களும் ஆனந்த பவனோடு கைகோத்துள்ளன.

தமிழ்மொழிக்குத் தமது ஆதரவையும் காட்டியுள்ளது ஆனந்த பவன். சிங்கப்பூரிலேயே தமது ரசீதுகளில் தமிழ் மொழிபெயர்ப்புகளை இணைத்த முதல் உணவகமாக 1996ல் அது இடம்பிடித்தது. 2009ல் தமிழ்மொழி விற்பனை முனையத்தைப் பயன்படுத்திய முதல் உணவகமும் அதுவே. 

நெகிழி ‘ஸ்டெரர்’க்குப் பதிலாக ‘மக்கும் தன்மையுடைய’ (biodegradable) ஸ்டெரர் தற்போது பயன்படுத்தப்படுகிறது.

தொடர்ந்து இதுபோன்ற இயற்கைக்கு உகந்த மாற்றுகளுக்கு மாறவேண்டும் என்பது ஆனந்த பவனின் குறிக்கோள்களில் ஒன்றாகும். கூடுதலான தொழில்நுட்பப் பயன்பாடு, புதுவகையான உணவு வகைகள் முதலியவையும் சேர்க்கப்பட வேண்டும் என எதிர்பார்த்திருக்கிறார், மூன்றாம் தலைமுறை தலைமை நிர்வாகியான வீரன் எட்டிக்கன்.

“எங்களின் ஊழியர்களும் வாடிக்கையாளர்களுமே எங்களின் பலம். அவர்களின் நலனை முன்னிலைப்படுத்தி எங்களின் நெறிகளுக்கு இணங்கி செயல்படுவதும் உறவுகளை உறுதியாக வைத்துக்கொள்வதும் எங்களின் முன்னுரிமைகள்,” என்றார் வீரன். 

221 சிலிகி சாலையின் ஆனந்த பவன் கிளையில் வண்ணமயமான இனிப்புப் பண்டங்களுக்கு அருகே நின்றிருக்கும் முன்னாள் உணவக நிர்வாகி திரு நடராஜன்.
221 சிலிகி சாலையின் ஆனந்த பவன் கிளையில் வண்ணமயமான இனிப்புப் பண்டங்களுக்கு அருகே நின்றிருக்கும் முன்னாள் உணவக நிர்வாகி திரு நடராஜன். - படம்: ஆனந்த பவன்

திரு குழந்தைவேலுவுக்குப் பின்னர், அவரின் குடும்பத்தாரிடம் ஆனந்த பவனின் நிர்வாகம் ஒப்படைக்கப்பட்டது. அவரின் மனைவி திருவாட்டி காளியம்மாள், மைத்துனர் திரு ராமசாமி ஆகியோரை அடுத்து திரு குழந்தைவேலுவின் மகன்களான திரு ராமச்சந்திரா, திரு நடராஜன் இருவரும் உணவகத்தை நிர்வகித்தனர். தற்போது பேரன் வீரனின் கைகளில் ஆனந்த பவன் வளர்ச்சி பெற்று வருகிறது. 

பல்லாண்டு நினைவலைகள்  

பழைய ஆனந்த பவனுக்கு நேரெதிரே சிலிகி ஹவுஸ் குடியிருப்பில் வசித்தவர் திரு லிங்கம் சின்னப்பன் ராமசாமி. வாரத்தில் மூன்று நாள்களாவது அவரின் சிறுவயதில் மதிய வேளைக்கோ தின்பண்டம் சாப்பிடவோ ஆனந்த பவனுக்கு அவர் சென்றுவிடுவார். வாழையிலையில் மசாலா தோசையோடு பல சட்டினி வகைகள் வைத்து சாப்பிடுவதை எதிர்பார்த்துக் காத்திருப்பார். 

சிறுவயதில் அடிக்கடி ஆனந்த பவனுக்கு உணவருந்தச் சென்றிடுவதாகக் கூறினார் திரு லிங்கம் சின்னப்பன் ராமசாமி (படத்தில் புன்னகையுடன் காணப்படும் சிறுவன்).
சிறுவயதில் அடிக்கடி ஆனந்த பவனுக்கு உணவருந்தச் சென்றிடுவதாகக் கூறினார் திரு லிங்கம் சின்னப்பன் ராமசாமி (படத்தில் புன்னகையுடன் காணப்படும் சிறுவன்). - படம்: லிங்கம் சின்னப்பன் ராமசாமி

ஆறு வயதில், 1971ஆம் ஆண்டில் திரு லிங்கம் ஆனந்த பவனில் சிரித்தபடி உணவருந்தும் ஒரு கறுப்பு வெள்ளை நிழற்படம், உணவகத்தின் இணைய நிழற்படப் போட்டியில் $500 முதல் பரிசைப் பெற்றுள்ளது. 

சமூகத்தினரோடு தமது மைல்கல்லைக் கொண்டாடும் வகையில் இணைய நிழற்படப் போட்டிக்கு ஆனந்த பவன் ஏற்பாடு செய்திருந்தது. உணவகம் தொடர்பில் மக்கள் கொண்டிருந்த இனிமையான நினைவுகளைத் திரட்டும் இம்முயற்சியில், மக்களிடமிருந்து கிட்டத்தட்ட 100 படங்கள் வந்து குவிந்தன. 1943 வரை இப்படங்கள் பின்னோக்கி அமைந்திருந்தன. படங்களோடு மனம் நெகிழும் கதைகளைப் பங்கேற்பாளர்கள் பகிர்ந்துகொண்டனர். 

சிறுவயதில் ஆனந்த பவனில் உணவருந்திய நினைவுகள், கொண்டாட்டங்களுக்குச் சுவையூட்டிய அதன் பல்சுவை உணவு, உணவகம் நிகழ்த்திய சாதனைகள், சேவை முயற்சிகள் முதலிய தருணங்கள் குறித்து பகிரப்பட்டன.  

ஸ்ரீ ராமகிருஷ்ணா இல்லவாசிகளுக்கு ஆனந்த பவன் இலவச சைவ உணவை வழங்கியது.
ஸ்ரீ ராமகிருஷ்ணா இல்லவாசிகளுக்கு ஆனந்த பவன் இலவச சைவ உணவை வழங்கியது. - படம்: ஆனந்த பவன்

கவர்ச்சி, படத்தின் தரம், உணர்ச்சி வெளிப்பாடு, வரலாற்று முக்கியத்துவம், பண்பாட்டு முக்கியத்துவம் என ஐந்து கூறுகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 15 படங்களிலிருந்து, பொதுமக்களிடையே நடத்தப்பட்ட வாக்களிப்பின்மூலம் முதல் ஐந்து வெற்றியாளர்கள் நிர்ணயிக்கப்பட்டனர். ஏறத்தாழ 1,000 வாக்குகள் ஃபேஸ்புக்வழி பதிவாகின. இன்று நடைபெற இருக்கும் ஆனந்த பவனின் நூற்றாண்டு விழாவில் வெற்றியாளர்களுக்குப் பரிசளிக்கப்படும். 

ஆனந்த பவனின் தூண்கள் 

18 ஆண்டுகாலமாக ஆனந்த பவனில் பணியாற்றும் திரு மாணிக்கம் தென்னரசு.
18 ஆண்டுகாலமாக ஆனந்த பவனில் பணியாற்றும் திரு மாணிக்கம் தென்னரசு. - படம்: ஆனந்த பவன்

உணவருந்த வருவோர் தங்களின்மீது வைக்கும் நம்பிக்கை விலைமதிப்பற்றது; அதுவே இப்பணியின் பயன் என்பது 18 ஆண்டுகாலமாக ஆனந்த பவனில் பணியாற்றும் திரு மாணிக்கம் தென்னரசின் அனுபவம். அத்தகைய முக்கியத்துவம் கொண்ட வாடிக்கையாளர்களுக்குத் தொலைநோக்கு பார்வையோடு சேவைபுரியும் ஆனந்த பவன் அவரின் மனதுக்கு நெருக்கமானது. 

எச்சமயத்திலும் தூய்மையைக் கடைப்பிடிக்கவேண்டும், நகங்களை வெட்டிக்கொள்ளவேண்டும், முகச்சவரம் செய்துகொள்ளவேண்டும் ஆகிய பழக்கங்களை உணவகம் திரு தென்னரசு உள்ளிட்ட எல்லா சமையல் கலைஞர்களிடத்திலும் வளர்த்துள்ளது. 

சமையல் எண்ணெய் மீள்பயனீடு, ‘எம்எஸ்ஜி’, செயற்கை பதனப்பொருள்கள், செயற்கை நிறங்களின் பயன்பாடு ஆகியவற்றை ஆனந்த பவனில் காண முடியாது. அதுவே அவர்களின் வாடிக்கையாளர்களுக்கும் மனநிறைவளிப்பதாக திரு தென்னரசு கூறினார். 

புதுமையை வரவேற்கும் போக்கும் ஆனந்த பவனின் தனித்துவமான ஒரு பலம். ஒவ்வொரு தீபாவளிக்கும் புதுவகையான பலகாரங்களை அறிமுகப்படுத்த திரு தென்னரசும் அவரின் குழுவினரும் பல சோதனை முயற்சிகளில் ஈடுபடுவர். கடந்தாண்டு ஏழு வகை மூலிகைகள் சேர்க்கப்பட்ட மூலிகை முறுக்கு அவர்களின் கைவண்ணமே.  

சுமார் ஒரு மீட்டர் நீளமுடைய முறுக்கை, 2017ஆம் ஆண்டு பிழிந்து சிங்கப்பூர் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றது ஆனந்த பவன்.
சுமார் ஒரு மீட்டர் நீளமுடைய முறுக்கை, 2017ஆம் ஆண்டு பிழிந்து சிங்கப்பூர் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றது ஆனந்த பவன். - படம்: ஆனந்த பவன்

கிட்டத்தட்ட ஒரு மீட்டர் நீளமுள்ள முறுக்கை, 2017ல் பிழிந்து சிங்கப்பூர் சாதனைப் புத்தகத்தில் ஆனந்த பவன் இடம்பெற வகைசெய்தவர் திரு தென்னரசு. சிங்கப்பூரின் ஆக பெரிய முறுக்கைப் பிழிவதற்குப் பல பயிற்சிகள், சோதனைகளை மேற்கொண்டதை அவர் நினைவுகூர்ந்தார். 

கொள்ளைநோய் காலகட்டத்தில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு நன்கொடையாக முறுக்குகள் வழங்கப்பட்டன.
கொள்ளைநோய் காலகட்டத்தில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு நன்கொடையாக முறுக்குகள் வழங்கப்பட்டன. - படம்: ஆனந்த பவன்

கொவிட்-19 காலத்தில் வெளிநாட்டு ஊழியர்களுக்கென 10 நாள்களில் 100,000 முறுக்குகளைத் தயாரித்த நினைவுகளும் தன் மனதிலிருந்து அகலாதவை என திரு தென்னரசு குறிப்பிட்டார். வாடிக்கையாளர்களிடையே நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டும் வண்ணம் சிறுசிறு வகைகளில் தமது சமையல் முறையையும் உணவகம் மாற்றியது. 

“சைவ உணவில் இருந்த நுணுக்கங்களை ஆனந்த பவனின் சமையல் பயிற்சி எனக்கு உணர்த்தியது. வகைவகையாக, புதுமையாகச் சிந்திப்பதற்கும் சமைப்பதற்கும் அது உற்சாகம் அளித்து வந்துள்ளது,” என்றார் 54 வயது திரு தென்னரசு. 

சையது ஆல்வி ரோட்டில் உள்ள ஆனந்த பவன் கிளையை நிர்வகிக்கும் திரு ராஜசேகர், ஆனந்த பவனோடு 28 ஆண்டுகள் இருந்துள்ளார். 
சையது ஆல்வி ரோட்டில் உள்ள ஆனந்த பவன் கிளையை நிர்வகிக்கும் திரு ராஜசேகர், ஆனந்த பவனோடு 28 ஆண்டுகள் இருந்துள்ளார்.  - படம்: ஆனந்த பவன்

சையது ஆல்வி ரோட்டில் உள்ள கிளையை நிர்வகிக்கும் திரு ராஜசேகர், ஆனந்த பவனோடு 28 ஆண்டுகள் பயணித்துள்ளார். அவரின் பார்வையில், ஆனந்த பவன் பலவகைகளில் ஒரு முன்னோடி.

வாடிக்கையாளர்கள் சமையலைக் பார்க்கும் வண்ணம் அமைந்த முறையை 1990களில் ஆனந்த பவன் அறிமுகப்படுத்தியது. அதே காலகட்டத்தில், காத்திருப்பு நேரத்தைக் குறைக்கவேண்டி வாடிக்கையாளர்களே தருவிப்பு ஆணைகளைத் தேர்ந்தெடுத்து கட்டணம் செலுத்தும் தானியங்கி இயந்திரமும் இணைக்கப்பட்டது. மூன்றாண்டுகளாக உணவைத் தாமே சென்று வழங்கும் சேவை இயந்திரமும் மக்களை மகிழ்வித்து வருகிறது. 

ஆனந்த பவனின் மரியாதையான, கட்டுப்பாடான வேலையிடச் சூழலைக் குறிப்பிட்ட திரு ராஜசேகர், தமது நிர்வாகத் திறன்கள் மேம்பட்டுள்ளதாக உணர்கிறார். குறிப்பாக, கொவிட்-19 காலத்தில் பல புதிய விதிமுறைகளை உணவகத்தில் செயல்படுத்த வேண்டியிருந்தது. அச்சமயத்தில் ஊழியர்களுக்குச் சரியான பயிற்சி இருப்பதை உறுதிசெய்ததோடு, வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பைப் பெற அவர் உழைத்தார். தொடர்ந்து ஆனந்த பவனின் பல கிளைகள் திறக்கப்பட வேண்டும் என்பது அவரின் விருப்பம். 

குறிப்புச் சொற்கள்