தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கடல்துறையின் நீடித்த நிலைத்தன்மையில் ஆர்வம்

3 mins read
2edb1fb8-4c9b-4a26-a310-2b8a854751cb
சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையத்தில் நிலைத்தன்மை மேலாளராக பணிபுரியும் 27 வயது ரோஷினி செல்வம். - படம்: சிங்கப்பூர் கடல்துறை அறநிறுவனம்

கடல்துறையின் நீடித்த நிலைத்தன்மையைக் காக்கும் முயற்சியில் 27 வயது ரோஷினி ஈடுபட்டுள்ளார்.

சிங்கப்பூர்க் கடல்துறை, துறைமுக ஆணையத்தில் (எம்பிஏ) நீடித்த நிலைத்தன்மை மேலாளராகப் பணிபுரியும் இவர், சுற்றுச்சூழல் பொறியியல் மற்றும் கரிமநீக்கம் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர்.

2020ஆம் ஆண்டு வேதியியல் பொறியியல் பட்டம் பெற்ற ரோஷினி, பொறியியல் ஆலோசனை நிறுவனம் ஒன்றில் சேர்ந்து திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு செயலாக்கத்திலும் கப்பல்களில் எரிபொருள் நிரப்புதலிலும் கவனம் செலுத்தினார்.

கரிமநீக்கத்தில் எரிபொருளின் பங்கு குறித்த அவரது ஆர்வத்தினால், சுற்றுப்புற சூழல் பொறியியல் பயின்று அதில் முதுகலை பட்டம் பெற்றார். இது கடல்துறையின் நீடித்த நிலைத்தன்மை தாக்‌கம் குறித்த அவரது ஆய்வுக்கு வழிவகுத்தது.

ஆணையத்தில் ரோஷினியின் பணியானது, 2050ஆம் ஆண்டுக்குள் ‘நிகர-பூஜ்ஜிய உமிழ்வு’களுக்கு (Net-zero emissions) பங்களிப்பதற்கான நீடித்த நிலைத்தன்மை முயற்சிகளை வடிவமைப்பதை உள்ளடக்கியது.

“எரிசக்தி சிக்கனத்திறன் தொழில்நுட்பங்களில் பணியாற்றுவது எனது அன்றாடப் பொறுப்புகளில் ஒன்றாகும். எரிசக்தி மற்றும் எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்க, கப்பல்களில் எந்த வகையான உபகரணங்களைப் பயன்படுத்தலாம் என்பதில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம்,” என்று ரோஷினி விளக்கினார்.

அனைத்துலக கடல்சார் தரநிலைகளின் வளரும் நிலப்பரப்புடன் எம்பிஏ தொடர்ந்து இணைந்திருப்பதை உறுதிசெய்வதற்காக, தொழில்துறை பங்குதாரர்களுடன் விரிவான தொடர்புகளை ஏற்படுத்துவதும் அவரது பொறுப்புகளில் அடங்கும்.

“இந்தியாவில் உள்ள துறைமுக அதிகாரிகளுடன் அல்லது தமிழ் பேசும் குழு உறுப்பினர்களுடன் தொடர்புகொள்ளும்போது, ​​​​தமிழ் மொழியில் உரையாடுவதற்கான வாய்ப்பு கிடைக்கும்,” என்று அவர் சொன்னார்.

அவரது பயணமும் பங்களிப்பும், ‘உங்கள் மரிடைம்லைனைத் தேர்ந்தெடுங்கள்’ (Choose your MariTimeline) என்ற சிங்கப்பூர் கடல்துறை அறநிறுவனத்தின் (SMF) அண்மைய இயக்கத்தின் ஓர் அங்கமாக இடம்பெற்றன.

இந்த முயற்சியானது சிங்கப்பூரின் கடல்துறையில் உள்ள பலதரப்பட்ட தொழில் வாய்ப்புகளை முன்னிலைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், பல்வேறு பின்னணிகளிலிருந்து வரும் இளம் தொழில் வல்லுநர்களை, அவர்களின் திறன்களைப் பயன்படுத்திக் கடல்துறையில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தவும் அவர்களை வரவேற்கிறது.

மேல்விவரங்களுக்‌கு https://bit.ly/3V1ZEdE என்ற இணையத்தளத்தை நாடலாம்.

“உங்கள் கல்விப் பின்னணி எதுவாக இருந்தாலும், கடல்துறையில் உங்கள் அறிவையும் திறமையையும் விரிவுபடுத்துவதற்கான வாய்ப்பு உள்ளது என்பதே இந்த இயக்கத்தின் குறிக்கோள்,” என்று ரோஷினி குறிப்பிட்டார்.

“என்னுடன் பணிபுரிபவர்களில் பலர் கடல்சார் பொறியியல் (Marine Engineering) துறையில் பயின்றவர்கள் அல்லர்; பல்வேறு கல்விப் பின்னணியிலிருந்து வந்தவர்கள். அவர்களின் திறமைக்கேற்ப பல வாய்ப்புகள் இந்த துறையில் உள்ளன. அவர்கள் திறந்த மனதுடன் வருவதே முக்கியம்,” என்றார் அவர்.

ரோஷினி தனது பணியால் ஏற்படக்கூடிய பரந்துபட்ட தாக்கத்தைப் பற்றியும் கூறினார்.

“கடல்துறை, துறைமுக ஆணையத்தில் நான் சேர்ந்ததன்மூலம் முழு துறையையுமே வடிவமைக்கும் வாய்ப்பு எனக்கு உள்ளது. அதுமட்டுமல்லாமல் நான் செய்யும் வேலையின்மூலம் இந்தத் துறையின் எதிர்காலத்திலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த என்னால் முடியும் என்று நம்புகிறேன்,” என்றார் அவர்.

“நிலைத்தன்மையையும் கரிமநீக்கத்தையும் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டிய தேவை அதிகரித்து வருகிறது. உமிழ்வைக் குறைப்பது மற்றும் சுற்றுச்சூழலின் நீடித்த நிலைத்தன்மை பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துவது போன்றவையே எனது முதன்மை இலக்குகளாகும்,” என்றார் ரோஷினி.

குறிப்புச் சொற்கள்