சிங்கப்பூர் சாதனைப் புத்தகத்தில் ஆனந்த பவன்

சிங்கப்பூர் சாதனைப் புத்தகத்தில் ஆனந்த பவன்

2 mins read
b4cdfa8d-c80c-49ed-bb8a-5889a1a9d207
ஆனந்த பவனின் வரலாற்றைப் பறைசாற்றும் சிறு கண்காட்சியைப் பார்வையிட்டனர் அதிபர் திரு தர்மன் சண்முகரத்னமும் அவரின் துணைவியார் ஜேன் இத்தோகியும். அவர்களுக்கு விளக்கமளித்தார் ஆனந்த பவனின் தலைமை நிர்வாகி வீரன் எட்டிக்கன் (இடது). - படம்: த. கவி

நூற்றாண்டு விழா கொண்டாடிய ஆனந்த பவன் உணவகம், சிங்கப்பூரில் ஆக அதிக காலம் இயங்கி வந்துள்ள இந்திய சைவ உணவகமாக வாகைசூடியுள்ளது. சனிக்கிழமை (ஜூலை 20) மாலை நடந்தேறிய அதன் நூற்றாண்டுக் கொண்டாட்டத்தில் இச்சாதனை அறிவிக்கப்பட்டது. 

சையது ஆல்வி சாலையிலுள்ள ஆனந்த பவன் கிளையில் சமூகத் தலைவர்கள், வாடிக்கையாளர்கள், வர்த்தக நண்பர்கள் உட்பட கிட்டத்தட்ட 100 பேர், உணவகத்தின் நூற்றாண்டு மைல்கல்லைக் கொண்டாடினர்.

அதிபர் தர்மன் சண்முகரத்னம், அவரின் துணைவியார் திருவாட்டி ஜேன் இத்தோகி நிகழ்வில் இணைந்து ஆனந்த பவனின் சிறப்பு ‘நூற்றாண்டு உணவுப் பட்டியலை’ச் சுவைத்தனர். கலாசார, சமூக, இளையர்துறை மற்றும் வர்த்தக தொழில் துணை அமைச்சர் துணை அமைச்சரான திரு ஆல்வின் டானும் நிகழ்வில் கலந்துகொண்டார். 

அறுசுவையோடு மணம் கமழ்ந்த சிறப்பு உணவுவகைகள், பல்வேறு தானிய வகைகள், காய்கறி வகைகள், கலவை சமையல் பாணியில் அமைந்திருந்தன. கடந்தாண்டுகளில் மக்கள் மனதைக் கவர்ந்த உணவுவகைகளும் இடம்பெற்றன. 

“கனவுகளுக்கு எல்லைகள் இல்லை என்றால், நிலவில் சுவைக்கப்படும் முதல் இந்திய சைவ உணவாக ஆனந்த பவனின் உணவு வகை இருக்கவேண்டும்,” என்றார் ஆனந்த பவனின் வரலாற்றுச் சாதனையில் மகிழ்வுறும் மூன்றாம் தலைமுறை தலைமை நிர்வாகி திரு வீரன்.

221 சிலிகி சாலையில் எல்லிசன் கட்டடத்தில் ஆனந்த பவன் முதன்முதலில் உதயமானது. 1924ல் மக்களுக்காக கதவுகளைத் திறந்த அது, திரு குழந்தைவேலால் தொடங்கப்பட்டு தற்போது பேரன் திரு வீரனால் நிர்வகிக்கப்படுகிறது. 

ஆனந்த பவன் ஓர் உணவகம் மட்டுமின்றி சிங்கப்பூர் மரபுடைமையின் ஒரு பகுதி; அன்றைய நாட்சம்பள ஊழியர்களுக்கு ‘தாயின் சமையலறை போன்றது’ என்றார் நிகழ்வில் பேசிய தமிழ் முரசின் ஆசிரியர் திரு த. ராஜசேகர். இரண்டாம் உலகப்போர், பிரிட்டிஷ் அரசாட்சி, சிங்கப்பூர்-மலேசியா இணைப்பு ஆகிய காலமாற்றங்களைத் தாண்டி உணவகம் நிலைத்ததையும் அவர் குறிப்பிட்டார். 

சமூகத்தாரோடும் ஊழியர்களோடும் ஆழமான நல்லுறவுகளை வளர்த்து பேணியது ஆனந்த பவனது வெற்றியின் ஆதாரம்.

“அவர்களின் அர்ப்பணிப்புக்கும் விசுவாசத்திற்கும் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்,” என்றார் திரு வீரன். 

ஆனந்த பவனின் ஊழியர்களுக்கிடையே நடைபெற்ற சமையல் போட்டி, மக்களுக்காக ஏற்பாடாகியிருந்த நிழற்படப் போட்டி ஆகியவற்றின் வெற்றியாளர்களுக்கு நிகழ்வில் பரிசளிக்கப்பட்டது. 

இன்னும் பெருவாரியான மக்களைச் சென்றடைய கூடுதல் இடங்களில் கிளைகள் துவங்க ஆனந்த பவன் திட்டமிடுவதாக திரு வீரன் கூறினார். சிங்கப்பூரில் விலங்குநலனுக்கான சமூக அக்கறை நடவடிக்கைகளில் ஆனந்த பவன் வருங்காலத்தில் பங்காற்றும் என்பதும் அவரின் நம்பிக்கை.

குறிப்புச் சொற்கள்