பிறருடன் அதிகம் பேசாத, கூச்ச குணம் கொண்ட, பிறரால் கவனிக்கப்படாத குழந்தைகளிடம் அன்பும் பரிவும் காட்ட வேண்டும்.
நல்ல நண்பர்களால் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தி, வாழ்க்கையையே மாற்றியமைக்க முடியும் என்பதால் நட்பு அவசியம்.
இவ்விரண்டையும் வலியுறுத்துகிறது ‘தி இன்விசிபில் பேங்கலின் (The Invisible Pangolin)’ எனும் குழந்தைகளுக்கான நாடகம்.
மனிதர்களைக் கதாபாத்திரமாகக் கொண்டிராமல், விலங்குகளைக் கதாபாத்திரங்களாக அமைத்து, நாடகத்தின் கதை அமைக்கப்பட்டு இருக்கிறது.
பேங்கலின் பொதுவாக மற்றவர்களுடன் அதிகம் பேசாத, சாதுவான சிறுமி. அவள் தன் வகுப்பு நண்பர்களுடன் எவ்வாறு உரையாடுகிறாள், அவர் தனியாக இருக்கும் பொழுது அவளுடைய நண்பர்கள் எவ்வாறு அவளுக்கு உதவுகின்றனர் என்பன போன்ற அங்கங்கள் நாடகத்தில் இடம்பெற்றுள்ளன.
சிறுவயதில் ஒருவரின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளல், கூச்சத்தால் பிறருடன் எளிதில் பழகாமல் ஒதுங்கி இருக்கும் பிள்ளைகளிடம் அன்பும் பரிவும் காட்டுதல், வேறுபாடு பார்க்காமல் அனைவருடனும் ஒட்டி உறவாடுதல், பெற்றோர் - குழந்தைகள் இடையே ஆரோக்கியமான உரையாடல் ஆகியவையே நாடகத்தின் மையக்கரு.
பத்தாண்டுகளாக நாடகத்துறையில் இருந்தாலும் டாக்டர் ஜெய்சீலனுக்கு இதுவே முதலாவது குழந்தைகள் நாடகம். ஆறு வயதிலேயே அவருக்கு நாடகத்தின்மீது நாட்டம் பிறந்தது.
ஒரு நாடகத்தில் மருத்துவர் ஒருவர் பிறருக்கு உதவுவதைப் பார்த்து, தானும் மருத்துவராக வேண்டும், நாடகத் துறையில் இருக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்குள் தோன்றியது.
தொடர்புடைய செய்திகள்
சிறுவயதில் அவருக்குப் பள்ளியில் அதிக நண்பர்கள் இல்லை என்றாலும்கூட ஒரே ஒருவர் மட்டும் உற்ற துணையாக இருந்தார்.
தமக்குக் கிடைத்த அந்த நல்ல நண்பரைப்போல், இக்காலக் குழந்தைகளுக்கு ஒரு நண்பரேனும் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இக்கதையை இயற்றியதாகக் கூறினார் டாக்டர் ஜெய்சீலன்.
தொடக்கத்தில் ஒரு சில நடிகர்களை மனத்தில் வைத்தே இக்கதையை அவர் எழுதத் தொடங்கினார். அவ்வரிசையில், நான்கு நடிகர்கள், 12 குழு உறுப்பினர்கள் இந்நாடகத்தில் இடம்பெற்றுள்ளனர். இந்நாடகம் ஜூலை 27ஆம் தேதி சனிக்கிழமை காலை 11 மணி, பிற்பகல் 2 மணி, மாலை 5 மணி, மறுநாள் 28 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி, பிற்பகல் 2 மணி என அடுத்தடுத்த ஐந்து முறை மேடையேற இருக்கிறது.
கேட்வே தியேட்டர் பிளாக் பாக்சில் (L8) இடம்பெறும் இந்நாடகத்திற்கான நுழைவுச்சீட்டுகளை கேட்வே தியேட்டர் இணையத்தளம் வழியாகப் பெறலாம்.

