தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வளர்ப்புப் பெற்றோராக இருப்பதை ஊக்குவித்த நிகழ்வு

3 mins read
4b37de65-92a0-48df-b9dd-250db72d8e3c
இவ்வாண்டிற்கான வளர்ப்புப் பெற்றோர் பொது வரவேற்பு நாள் நிகழ்வு சன்டெக் சிங்கப்பூர் மாநாட்டு, கண்காட்சி மையத்தில் நடைபெற்றது.  - படம்: சாவ் பாவ்
multi-img1 of 2

ஆண்டுதோறும் நடைபெறும் வளர்ப்புப் பெற்றோர் பொது வரவேற்பு நாள் நிகழ்வு இம்மாதம் 13ஆம் தேதியன்று சன்டெக் சிங்கப்பூர் மாநாட்டு, கண்காட்சி மையத்தில் நடைபெற்றது.

சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சும் ஐந்து வளர்ப்புப் பெற்றோர் ஆதரவு நிலையங்களும் இணைந்து இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தன.

வளர்ப்புப் பிள்ளைகளுக்கான மேம்பட்ட பராமரிப்பு மற்றும் ஆதரவு பற்றியும் அவர்களுக்குத் தேவைப்படும் பாதுகாப்பான சூழலை உருவாக்குவது பற்றியும் இந்நிகழ்வில் கலந்துகொண்டோர் அறிந்துகொண்டனர்.

இவ்வாண்டு நிகழ்வில், வளர்ப்புப் பெற்றோர், முன்னாள் வளர்ப்பு இளையர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள், பெற்றோருக்குரிய பயிலரங்குகள் உள்ளிட்ட நடவடிக்கைகள் ஆகியவை இடம்பெற்றன.

பங்கேற்பாளர்கள், வளர்ப்புப் பெற்றோரிடமிருந்து அவர்களுடைய அனுபவத்தைக் கேட்டு, நிபுணர்களால் வழங்கப்படும் ஆதரவைப் பற்றி அறிந்துகொண்டனர்.

பிள்ளைகளின் வாழ்க்கையில் தங்களால் எவ்வாறு ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பது பற்றியும் பெற்றோர்கள் அறிந்துகொண்டனர். சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு 17 முதல் 21 வயதுடைய இளையர்களுக்கான பின்னலம் பேணும் (aftercare) ஆதரவை மேம்படுத்தியுள்ளது. இந்நிலைமை, அவர்கள் தங்கள் குடும்பத்துடன் மீண்டும் இணையாமல் இருக்கும் நிலைமை ஏற்பட்டால் அமையும். இது இளையர்களின் கனவுகளை நிறைவேற்றவும் அவர்களின் திறன்களை மேம்படுத்தி, வாழ்க்கையில் முன்னேறவும் உதவுகிறது.

பின்கவனிப்புச் சம்பவ நிர்வாகம், காம்கேர் குறுகிய, நடுத்தரகால நிதி உதவி ஆகியவை மூலம் அமைச்சு, வளர்ப்பு இளையர்களுக்கு உதவி வருகிறது. 

கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சு மற்றும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சுகளுக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளர் எரிக் சுவா நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

கலந்துரையாடல் அங்கத்தில் வளர்ப்புப் பெற்றோராக இருப்பது குறித்து சிலர் தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.
கலந்துரையாடல் அங்கத்தில் வளர்ப்புப் பெற்றோராக இருப்பது குறித்து சிலர் தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர். - படம்: சாவ் பாவ்

“பராமரிப்பின்கீழ் உள்ள பிள்ளைகளது வாழ்க்கையை மேம்படுத்துவதில் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு உறுதியாகவுள்ளது.

“ஒவ்வொரு பிள்ளையும் வளரவும் நன்னிலையை எட்டவும் ஒரு பாதுகாப்பான குடும்பச் சூழல் இருக்க வேண்டும். அதற்கு வளர்ப்புப் பெற்றோர்கள் அயராது முயல்கின்றனர். அவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

“அவர்கள் பராமரிப்பாளர்கள் மட்டுமல்லர், அவர்களே வழிகாட்டிகளும் முன்மாதிரிகளும்கூட. வளர்ப்புப் பெற்றோராக மாற அதிக தம்பதிகள் முன்வருவது மகிழ்ச்சி தருகிறது,” என்று திரு சுவா தெரிவித்தார். 

இந்நிகழ்ச்சியில், வெவ்வேறு தலைப்புகளை ஒட்டி வெவ்வேறு பின்னணிகளைச் சேர்ந்த வளர்ப்பு பெற்றோர்கள் தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர். 

இரண்டு வளர்ப்புப் பிள்ளைகள் உட்பட மூன்று பிள்ளைகளின் பெற்றோரான திருவாட்டி ஏஞ்சலான் பால் அண்டோனி, 42, மற்றும் திரு டேவிட் நோயல் ஆரோக்கியசாமி, 46, இருவரும் வளர்ப்புப் பிள்ளைகள் தங்களின் வாழ்க்கையை மேலும் ஒளிமயமாக்கி உள்ளதாகக் குறிப்பிட்டனர்.

“வளர்ப்புப் பிள்ளையைப் பார்த்துக்கொள்வது என்பது எளிதான செயலன்று. ஒரு வளர்ப்புக் குழந்தை இரண்டு வாரம் இருக்கும்போதே அதனை நாங்கள் வளர்க்கத் தொடங்கியதால் அவ்வளவு கடினமாக இல்லை.

“ஆனால், எங்களின் மற்றொரு வளர்ப்புக் குழந்தையை 11 மாதங்களுக்குப் பின்னர் வளர்க்க ஆரம்பித்ததால் அவருக்கு என்ன பிடிக்கும், அவர் என்ன சாப்பிடுவார் போன்றவற்றை நாங்கள் மெதுவாகத்தான் தெரிந்துகொண்டோம். எங்களுக்குச் சொந்தப் பிள்ளையும் வளர்ப்புப் பிள்ளைகளும் ஒன்றுதான். மூவரிடத்திலும் நாங்கள் ஒரே மாதிரியான பாசத்தையே வெளிப்படுத்துகிறோம்,” என்று அவர்கள் தெரிவித்தனர்.

திரு பாஸ்கர் பெரி, திருவாட்டி ஹேமா தம்பதியர்.
திரு பாஸ்கர் பெரி, திருவாட்டி ஹேமா தம்பதியர். - படம்: சாவ் பாவ்

மற்றோர் இணையரான திருவாட்டி பெரி ஹேமா, 53 - திரு பாஸ்கர் பெரி, 45, இப்போது ஓர் இளையரை வளர்க்கிறார்கள். இதற்கு முன்பும் பல பிள்ளைகளை அவர்கள் வளர்த்துள்ளனர்.

வளர்ப்புப் பிள்ளைகளைத் தாங்கள் வளர்ப்பதற்கான காரணம், பிள்ளைகள் மீதான அன்புதான் என்று அவர்கள் குறிப்பிட்டனர்.  

“சமுதாயத்தில் வளர்ப்புப் பிள்ளைகள் பற்றிப் பல தவறான கண்ணோட்டங்கள் உள்ளன. அவற்றை மாற்ற முயற்சிகள் எடுக்கப்படவேண்டும். இதற்கு முன்பு நாங்கள் இளையர்களை வளர்த்ததில்லை. இப்போது ஓர் இளையரை வளர்க்கிறோம். இது ஒரு புதுமையான அனுபவம்,” என்று ஹேமா - பாஸ்கர் இணையர் கூறினர்.

குறிப்புச் சொற்கள்