மனதில் உறுதியுடன் செயல்படும் ஒரு பெண்ணால் எதையும் சாதிக்க முடியும் என்றார் மார்பகப் புற்றுநோயிலிருந்து மீண்டுவந்துள்ள 41 வயது பைலபுடி கௌரி வரலட்சுமி.
இந்தியாவின் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த இவர், 2009ஆம் ஆண்டில் திருமணமாகி சிங்கப்பூர் வந்தார்.
தரக் கட்டுப்பாட்டு இயந்திரத் தொழில்நுணுக்கராகப் பணிபுரிந்து வந்த கௌரி, ஜூன் 2019ல் சீனாவில் பணிபுரிந்த தம் கணவரைப் பார்ப்பதற்காக தங்கள் மகளுடன் சென்றார்.
அங்கே தமது வலது மார்பில் கத்தியால் குத்துவது போன்ற வலியை அவர் உணர்ந்தார். ஒரு மாதம் கழித்து சிங்கப்பூருக்குத் தம் மகளுடன் திரும்பியபின் அதே வலி மீண்டும் ஏற்பட்டது. மருத்துவ உதவி நாடுமாறு சீனாவில் இருந்த அவரின் கணவர் வற்புறுத்தியபோதும் கௌரி தனியாகச் செல்லத் தயங்கினார்.
கணவர் விடுமுறைக்காக டிசம்பர் 2019ல் சிங்கப்பூருக்கு வந்தபோது கௌரி கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். மருத்துவப் பரிசோதனை செய்தபோது, அவருக்கு இரண்டாம் நிலை மார்பகப் புற்றுநோய் இருப்பது தெரியவந்தது.
“புற்றுநோய் புகைப்பிடிப்பவர்களையும் மது அருந்துபவர்களையும் மட்டுமே பாதிக்கும் என்று நினைத்திருந்த எனக்கு இச்செய்தி அதிர்ச்சியையும் வருத்தத்தையும் தந்தது,” என்று அவர் கூறினார்.
தமது இயந்திரச் சோதனை வேலையில் நீண்டநேரத்தைச் செலவழித்ததால், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்கள் ஏற்பட்டு நாளடைவில் அவருக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படும் ஆபத்தை அதிகரிக்கச் செய்ததாக மருத்துவர் கூறியதை கௌரி நினைவுகூர்ந்தார்.
சீனாவுக்கு வேலைக்காக மீண்டும் சென்ற அவருடைய கணவர், கொரோனா கிருமித்தொற்று ஏற்படுத்திய பயணக் கட்டுப்பாடுகளால் திட்டமிட்டபடி மீண்டும் சிங்கப்பூருக்குத் திரும்ப முடியவில்லை.
தொடர்புடைய செய்திகள்
தம் உயிருக்காக தனியே போராட வேண்டிய நிலை, கௌரிக்கு 2020ல் ஏற்பட்டது.
இக்கட்டான இந்தக் காலகட்டத்தில் தம்முடைய 11 வயது மகள் ஆதரவாக இருந்ததைக் குறித்துப் பேசினார் அவர்.
கூடுதல் ஆதரவு பெற எண்ணி கௌரி மார்பகப் புற்றுநோய் அறக்கட்டளையில் (BCF) உறுப்பினராக 2020ல் சேர்ந்தார்.
“மார்பகப் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் மற்ற உறுப்பினர்களைச் சந்தித்தபோது எனக்கு நம்பிக்கை கிடைத்தது.
புற்றுநோய் பாதிப்பிலிருந்து 2023ம் ஆண்டில் முழுமையாக மீண்ட கௌரி, தற்போது அலுவலக நிர்வாகப் பணியில் உள்ளார்.
ஆரோக்கியமான வாழ்க்கைமுறையைப் பின்பற்றிவரும் இவர், தமது ஓய்வு நேரத்தை மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வைப் பரப்ப அர்ப்பணித்து வருகிறார்.
“எனது கதையை நான் 10 பேரிடம் சொன்னால், அவர்கள் தங்களுக்குத் தெரிந்த 10 பேரிடம் அதைச் சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள் என்று நம்புகிறேன்,” என்று அவர் கூறினார்.
பெண்கள் ஆரோக்கியமான வாழ்க்கைமுறையைக் கடைப்பிடிக்கவும் வழக்கமான சுய பரிசோதனைகளை மேற்கொள்ளவும் ஆண்டுக்கு ஒரு முறையாவது மருத்துவப் பரிசோதனைகளைச் செய்துகொள்ளவும் கௌரி அறிவுறுத்தினார்.
“எத்தகைய சிரமங்களை நீங்கள் எதிர்கொண்டாலும், இதுவும் கடந்து போகும் என்ற எண்ணத்துடன் கவலைப்படாதீர்கள், நம்பிக்கையை இழக்காதீர்கள்,” என்று கௌரி மார்பகப் புற்றுநோயாளிகளிடம் கூறிக்கொள்ள விரும்பினார்.