அவசரகால நிதி அவசியம்: நிபுணர் கருத்து

4 mins read
238a3ed8-d323-413c-84b2-25536ddec3c8
எண்டோவஸின் தலைமை வாடிக்கையாளர் நிர்வாகி சோ சின் டிங். - படம்: எண்டோவஸ்

பொதுவாக சேமிப்பு என்றால், முன்கூட்டியே திட்டமிடப்பட்ட எதிர்காலச் செலவுகளின் அடிப்படையில் நாம் சிந்திப்பது வழக்கம்.

எடுத்துக்காட்டாக, கல்விச் செலவுகள், நீண்ட விடுமுறைக்கான செலவுகள் போன்றவற்றின் அடிப்படையில் நமது சேமிப்பும் அமைந்திடும். 

அவசரகால நிதி என்பது சற்று மாறுபட்டது. திட்டமிடாத, எதிர்பாராத சூழ்நிலைகளுக்காக ஒதுக்கப்படும் அவசரகால நிதிகளுக்குப் பெரும்பாலும் அதிக பணம் தேவைப்படும். 

அவசரகால நிதியை எப்படித் தொடங்கி எவ்வாறு நிர்வகிப்பது என்பது குறித்துக் கூறினார் எண்டோவஸின் தலைமை வாடிக்கையாளர் நிர்வாகி சோ சின் டிங்.  

அவசரகால நிதி ஏன் தேவைப்படுகிறது? 

திட்டமிடாத செலவுகளுக்காக ஒதுக்கப்படும் பணம், அவசரகால நிதி ஆகும். கடனைக் குவிக்கக் கூடிய கடன் அட்டைகள், தனிநபர் கடன்களைவிட அவசரகால நிதிச் சேமிப்பு சிறந்தது.  

அதேபோல், ஒருவர் ஏற்கெனவே கடன்களால் பாதிக்கப்பட்டிருந்தால் மேலும் பாதிப்படையாமல் தடுக்கவும் அவசரகால நிதி உதவும்.

திடீர் வேலை இழப்பு, மருத்துவச் செலவுகள், வீட்டைப் பழுதுபார்க்கும் சூழ்நிலைகள் போன்றவற்றுக்கு அவசரகால நிதிகள் பெரிதும் உதவுகின்றன.

அவசரகால நிதியில் எவ்வளவு பணம் இருக்கவேண்டும்?

பொதுவாக, அவசரகால நிதியானது குறைந்தது மூன்று முதல் ஆறு மாதங்களுக்கான செலவுகளுக்குக் கைகொடுக்கும் வகையில் இருக்கவேண்டும். 

இந்தத் தொகையைத் தீர்மானிக்க உணவு, வாடகை, காப்பீட்டுப் பணம் போன்ற அத்தியாவசிய மாதாந்தரச் செலவுகளின் தொகையைக் கணக்கிடுங்கள்.

உங்கள் மொத்த மாதாந்தரச் செலவுகளை நீங்கள் விரும்பிய கால அளவினால் பெருக்கவும்.

எடுத்துக்காட்டாக, உங்களுடைய மொத்த மாதாந்தரச் செலவுகள் $3,100 என வைத்துக்கொண்டால், இன்னும் ஆறு மாதங்களில் ஓர் அவசரகால நிதியை நீங்கள் அமைக்க எண்ணினால் அதன் மதிப்பு $18,600ஆக இருக்க வேண்டும். 

பெரிய குடும்பம் அல்லது நிலையற்ற வருமானம் கொண்ட சுயதொழில் செய்பவர்களுக்கு, 12 மாதங்கள் அல்லது அதற்கு மேலும் சேமிக்கப் பரிந்துரைக்கப்படுகிறது.

உங்களைச் சார்ந்துள்ளோர்க்குப் போதுமான அளவு சேமிப்பதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். மேலும், அவசரகாலத்தின்போது உங்கள் மாதாந்தரச் செலவுகள் எப்படி இருக்க வேண்டும் என்பதை இது தீர்மானிக்கும். 

அவசரகால நிதியை எவ்வாறு தொடங்குவது?

1) உங்கள் இலக்கை அடைய எவ்வளவு நேரம் எடுக்க விரும்புகிறீர்கள்?

அவசரகால நிதியைத் தொடங்க, உங்கள் இலக்கை அடைவதற்கான மிகப் பொருத்தமான கால அவகாசம், நிலையான மாதாந்தரச் சேமிப்புத் திறன் என இவ்விரண்டையும் கருத்தில் கொள்ளவேண்டும். 

உங்கள் மாத வருமானம் $4,000, மாதாந்தரச் செலவுகள் $3,100, அவசரகால நிதிக்கான இலக்கு $18,600 என்று வைத்துக்கொள்வோம். இந்த நிதியைச் சேமிக்க 20 மாதங்களுக்குமேல் ஆகும். 

சிலருக்கு ஏற்கெனவே சேமிப்பு இருக்கலாம். அதனால், இது எட்ட முடியாத ஒரு தொகையாக இருக்காது. இருப்பினும், இது மற்றவர்களுக்கு அச்சுறுத்தலான தொகையாக இருக்கலாம். 

உங்கள் அவசரகால நிதியைக் குறுகியகாலத்தில் சேர்க்க விரும்பினால், ஒவ்வொரு மாதமும் அதிகமாகச் சேமிக்க வேண்டும். வாழ்க்கைமுறையை மதிப்பீடு செய்து, பேரளவில் சில நிதி மாற்றங்களைச் செய்யவேண்டும். 

2. ஒவ்வொரு மாதமும் எவ்வளவு சேமிக்கலாம்?

இந்தச் சூழ்நிலையைச் சற்று மாற்றியமைக்கலாம். உங்கள் அவசரகாலச் சேமிப்பு இலக்கு இன்னும் $18,600ஆக இருக்கிறது. ஆனால், இப்போது மற்ற நிதிகளில் கவனம் செலுத்த 15 மாத கால அவகாசத்தில் சேமிக்க விரும்புகிறீர்கள். அவ்வாறானால் நீங்கள் அவசரகால நிதிக்காக மாதந்தோறும் $1,240 ஒதுக்க வேண்டும்.

செலவுகள் அல்லது வருமானக் கட்டுப்பாடுகள் காரணமாக உங்களால் இந்தத் தொகையைச் சேமிக்க முடியாவிட்டால் குறைந்த வாடகை கொண்ட அறைக்கு மாறுதல், கூடுதல் வருவாய் வழிகளைக் கண்டறிதல் போன்ற முயற்சிகளைக் கருத்தில்கொண்டு அவசர நிதிக்குச் சேமிக்கலாம்.

மாதாந்தரக் கட்டணத் திட்டத்தை அமைப்பதால் தொடர்ந்து சேமிக்கும் பழக்கம் உருவாகும். சம்பள நாள்களில் ஒரு குறிப்பிட்ட தொகையை அவசரகாலத்துக்காகச் சேமிப்பதால் இது வருங்காலத்தில் திடீர்ச் செலவுகளைச் சமாளிப்பதை எளிதாக்கும். 

கவனம் குறையாமல் கொள்கையின் மீது கண்ணாக இருந்தால் அவசர நிதியை விரைவில் அமைக்கலாம்.

அவசரகால நிதியின் பணப்புழக்கம் 

அவசரகால நிதியை உங்கள் வங்கிக் கணக்கில் வைத்திருப்பதைத் தவிர அதிகப் பலன் தரும் சேமிப்புக் கணக்குகள், வைப்புத்தொகைகள், சிங்கப்பூர் சேமிப்புப் பத்திரங்கள், பண மேலாண்மைக் கணக்குகள், காப்பீட்டுச் சேமிப்புத் திட்டங்கள் போன்றவற்றையும் கருத்தில் கொள்ளலாம்.

விபத்துகள் போன்ற எதிர்பாராத சூழ்நிலைகளுக்குத் தயார்படுத்திக் கொள்வது அவசரகால நிதி.  

ஒவ்வொரு மாதமும், நிலையான அவசரகால நிதியைக் கட்டிக்காக்க, அதிக வட்டி உள்ள ஒரு சேமிப்புக் கணக்கில் உங்கள் நிதியைச் சேமிக்கத் தொடங்கலாம். 

அதிகப் பலன் தரக்கூடிய பண மேலாண்மைக் கணக்கு ஒன்றிலும் அவசரகால நிதியைச் சேமிக்கலாம். இது பணவீக்கத்தைச் சமாளிக்கப் போதுமான வட்டியைத் தரும். மேலும், இதில் ஆபத்துகளும் குறைவு. 

அவசரகால நிதியின் முக்கியத்துவம் 

உங்கள் எதிர்காலத்தைப் பாதுகாக்க உதவுவது அவசரகால நிதி. எதிர்பாராத கடனிலிருந்து பாதுகாப்பதோடு அது மன அமைதியையும் அளிக்க வல்லது.

உங்கள் அவசரகால நிதிக்கான சேமிப்பில் உறுதியுடன் இருந்தால் மற்ற நிதி இலக்குகள் திறம்பட ஆதரவளிக்கும்.

குறிப்புச் சொற்கள்