தமிழ்ச் சமூகத்தினரிடையே போதைப் பழக்கம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ‘நம்பிக்கைத் தாளம்’ எனும் நிகழ்ச்சி நீ சூன் சென்ட்ரல் சமூக மன்றத்தில் ஜூலை 27ஆம் தேதி நடைபெற்றது.
உள்துறை, தேசிய வளர்ச்சி துணை அமைச்சர் முகம்மது ஃபைஷல் இப்ராகிம் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
போதைக் கும்பலின் ஊடுருவல்கள், போதை விழிப்புணர்வின் முக்கியத்துவம் உள்ளிட்டவை குறித்துப் பேசிய அவர், மகிழ்ச்சியைக் கொண்டாடவும் துக்கத்தை மறக்கவும் போதைப்பொருள் உட்கொண்டதால் வாய்ப்புகளை இழந்த ஓர் இளம் விளையாட்டு வீரரின் கதையைப் பகிர்ந்தார். அந்த நிலை வேறொருவருக்கு நேரக்கூடாது என அவர் குறிப்பிட்டார்.
“சிங்கப்பூரை போதையில்லாச் சமூகமாக மாற்றுவது ஒருவரால் மட்டும் முடியாது, மக்கள் மனது வைக்க வேண்டும். அன்பு, அரவணைப்பு, குடும்ப, சமூக ஒற்றுமையால் இந்த மாற்றத்தைக் கொண்டுவர இயலும்,” என்றார் இணைப் பேராசிரியர் ஃபைஷல்.
நீ சூன் சென்ட்ரல் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழு, ஸ்ரீ முனீஸ்வரன் ஆலய சமூக சேவைகள் அமைப்புடன் இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சியில் ஏறத்தாழ 150 பேர் கலந்துகொண்டனர்.
அவ்வட்டார மாணவர்களின் இசை, நடன அங்கங்களுடன் தொடங்கிய நிகழ்ச்சியில் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரி பிரவீன் பங்கேற்று போதைப் பழக்கமும் அதன் விளைவுகளும் குறித்துப் பேசினார். சமூகத்திலிருந்து அதை முற்றிலுமாக நீக்க, சமூகம் ஆற்ற வேண்டிய பங்கு குறித்தும் அவர் வலியுறுத்தினார்.
“போதையற்ற சமூகத்தை உருவாக்குவதில் சமூகத்தின் பங்கு முக்கியமானது. அதை உணர்த்தும் விதமாக அமைந்த இந்நிகழ்ச்சியில் பங்காற்றியது நிறைவான அனுபவம்,” என்று சொன்னார் திரு பிரவீன், 27.
போதைப் பழக்கத்திலிருந்து மீண்டெழுந்து தற்போது வெற்றிகரமாகத் தொழில் நடத்திவரும் சிவபாலன், தனது அனுபவங்களைப் பங்கேற்பாளர்களுடன் பகிர்ந்தார்.
தொடர்புடைய செய்திகள்
“போதைப் பழக்கம், அதனை உட்கொள்பவர் மட்டுமன்றி மொத்தக் குடும்பத்தையும் சுற்றத்தையும் சேர்த்து அழித்துவிடும். பிரச்சினை எதுவாயினும் அதற்குப் போதை தீர்வன்று. குடும்பத்தை நினைத்துப் பார்த்தாலே இப்பழக்கத்திற்கு அடிமையாவதைத் தவிர்க்கலாம்,” என்றார் அவர்.
மேலும், யாராவது போதைக்கு அடிமையாவது தெரிந்தால் அதனைத் தொடக்கத்திலேயே கண்டறிந்து உதவ பல அமைப்புகள் உதவுகின்றன என்றும் தயங்காமல் உதவி நாடினால் பின்விளைவுகளில் சிக்காமல் காத்துக்கொள்ளலாம் என்றும் திரு சிவபாலன் சொன்னார்.
“இந்தியர்கள் பொதுவாக இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில்லை. நம் சமூகத்தினரைப் போதை எனும் ஆபத்திலிருந்து காக்கும் நோக்கில் இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது,” என நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களுள் ஒருவரான சாந்தா சொன்னார்.
“போதை குறித்த பயம் இந்தியச் சமூகத்தில் அதிகமுள்ளது. சவால்களை அணுகுவதிலும் சிரமம் நிலவுகிறது. இதுகுறித்து பிள்ளைகளிடம் பேசவும் பெரியவர்கள் தயங்குகின்றனர். இவற்றை எல்லாம் மாற்றும் முயற்சியில் ஒன்று இந்த நிகழ்ச்சி,” என்றார் ஸ்ரீ முனீஸ்வரன் ஆலய சமூக சேவைகள் அமைப்பின் சிறைக் கைதிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஒன்றிணைக்கும் தொண்டூழியர் கோபாலகிருஷ்ணன், 40.
“பதின்ம வயதினரிடையே இப்பழக்கம் அதிகரித்து வருவதை இந்நிகழ்ச்சியில் அறிந்தேன். எனக்கு இரு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். அவர்களிடம் போதைப் பழக்கத்தின் விளைவுகள் குறித்தும் அதைத் தவிர்க்க வேண்டியதன் அவசியம் குறித்தும் பேசவேண்டும் என அறிந்தேன். என் பிள்ளைகளுக்கு ஆதரவாக இருப்பேன்,” என நிகழ்ச்சி பங்கேற்பாளர் லிண்டா சொன்னார்.
தன் மகளுக்கு பாதுகாப்பான குடும்பச் சூழல் அமைப்பதன் அவசியத்தை உணர்ந்ததாக ஈசூன் குடியிருப்பாளர் சரவணன் சொன்னார்.
போதைப் பழக்கம் குறித்தும் அதற்கு ஆளானோரிடம் தென்படும் அறிகுறிகள், அவர்களை அணுக வேண்டிய முறை குறித்தும் அறிய உதவும் தகவல் கூடமும் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் சார்பில் அமைக்கப்பட்டிருந்தது.
மேலும், போதைப் புழக்கம் தொடர்பான விழிப்புணர்வு குறித்த சிறு நாடகமும் அரங்கேற்றப்பட்டது.

