இந்திய சமூகத்தினரிடையே ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை ஊக்குவித்ததுடன் மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்வதன் முக்கியத்துவத்தையும் சுகாதார விழா 2024 வலியுறுத்தியது.
இந்து அறக்கட்டளை வாரியம், மீடியாகார்ப் ஊடக நிறுவனத்துடன் இணைந்து 2015ஆம் ஆண்டு முதல் நடத்திவரும் (கொவிட்-19 காலகட்டத்தில் நடைபெறவில்லை) இந்த விழா, ஆகஸ்ட் 4ஆம் தேதி சிராங்கூன் ரோடு ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலுக்கு அருகிலுள்ள பி. கோவிந்தசாமி பிள்ளை (பிஜிபி) மண்டபத்தில் நடைபெற்றது.
கிட்டத்தட்ட 700 பேர் காலை 8.30 மணி முதல் மண்டபத்தின் தரைத்தளத்தில் அமைக்கப்பட்டிருந்த 15 சுகாதார முகப்புகளில் பரிசோதித்துக்கொண்டனர்.
அவர்களில் பெரும்பாலானோர் முன்பதிவு செய்திருந்ததால் நெரிசல் இன்றி தங்களுக்குரிய நேரங்களில் வந்து சோதனை மேற்கொண்டனர்.
உற்சாகம் மூட்டிய புகழ்பெற்ற வானொலிப் படைப்பாளர்களும் அன்பான முறையில் பேசிய தாதியரும் ஏற்படுத்திய கலகலப்பான சூழலில் பொதுமக்கள், மருத்துவச் சோதனைகளை மேற்கொண்டு பயன்பெற்றனர்.
பெருகிவரும் சேவை, ஆதரவு
கண்புரை நோய் (Cataract), கண் அழுத்த நோய் (Glaucoma) உள்ளிட்ட பிரச்சினைகளை முன்கூட்டியே கண்டுபிடிக்க உதவும் கண் பரிசோதனை, காது, மூக்கு, தொண்டைப் பராமரிப்பு, பல் மருத்துவம், மனநலம் உள்ளிட்டவற்றுக்காக தனித்தனி முகப்புகள் அமைக்கப்பட்டிருந்தன.
இந்தியர்களைப் பேரளவில் பாதிக்கக்கூடிய நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் ஆகியவற்றுக்கான சேவைகள் மேம்பட்டிருப்பதாக இந்து அறக்கட்டளை வாரியத்தின் நிர்வாக உறுப்பினராகவும் மருத்துவ ஆதரவுச் சேவைகளுக்கான தலைவராகவும் உள்ள டாக்டர் ஜெயராம் லிங்கம நாயக்கர் தெரிவித்தார்.
“செர்விக்கல் கேன்சர், அதாவது கருப்பைவாய்ப் புற்றுநோய்க்கான திரவ பரிசோதனை முகப்பையும் நாங்கள் இவ்வாண்டு முதன்முறையாக அறிமுகம் செய்துள்ளோம்,” என்று அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
1988ஆம் ஆண்டிலிருந்து ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் சிறிதாக ஆரம்பிக்கப்பட்ட சுகாதார விழா, தற்போது வலுப்பெற்று மக்களைத் திரளாக ஈர்ப்பது குறித்து மகிழ்ச்சி அடைவதாக இதய மருத்துவர் ஜெயராம் கூறினார்.
“இந்து அறக்கட்டளை வாரியத்தின் மருத்துவ ஆதரவுச் சேவையில் 45 தொண்டூழிய மருத்துவர்களும் 150 தாதிகளும் உள்ளனர். அவர்களில் சிலர் இன்று விழாவுக்காகச் செயல்பட்டனர். இந்தியர்கள் மட்டுமன்றி மற்ற இனத்தவரும் கைகொடுக்கின்றனர். அத்துடன் சிங்கப்பூர் புத்திஸ்ட் லாட்ஜ் காலை உணவை வழங்கியது,” என்றும் அவர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் இந்து அறக்கட்டளை வாரியமும் மீடியாகார்ப்பும் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான புதிய இணக்கக் குறிப்பில் கையெழுத்திட்டன.
சிறந்த உணவுப் பழக்கம், உடற்பயிற்சி, உறக்கம் போன்றவற்றின்வழி மக்கள் தங்களது உடல்நலத்தை எவ்வாறு பேணமுடியும் என்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு இதுபோன்ற சுகாதார நிகழ்ச்சிகள் முக்கியம் என்று மின்னிலக்க மேம்பாட்டு, தகவல் மற்றும் சுகாதார மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி கூறினார்.
“வருகையாளர்களுக்கு இங்குள்ள தொண்டூழியர்கள் ஆலோசனைகளை நேரில் வலியுறுத்தி பங்காளிகளுடனான இணைப்புகளை வலுப்படுத்தி வருகின்றனர். ஆர்வமும் கடப்பாட்டும் கொண்டுள்ள பங்காளிகளால் இந்த முயற்சி பயன் தருகிறது,” என்று அவர் கூறினார்.
ஆரோக்கியத்திற்கான ‘ஹெல்தி 365’ செயலி
சுகாதார விழாவின்போது சுகாதார மேம்பாட்டு வாரியத்தின் ‘ஹெல்தி 365’ செயலி குறித்து பேசப்பட்டது.
ஆரோக்கிய வாழ்க்கைமுறையை ஊக்குவிக்கும் இந்தச் செயலி மூலம் ஒருவரது நடமாட்டத்தைக் கணக்கிடுதல், சாப்பாட்டைக் கண்காணித்தல், ஆரோக்கியம் சார்ந்த போட்டிகளில் பங்கேற்றல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.
இந்த விழாவுக்காக இந்து அறக்கட்டளை வாரியத்துடன் கடந்த ஆறு ஆண்டுகளாக இணைந்து செயல்படுவதாக சுகாதார மேம்பாட்டு வாரியத்தின் பள்ளிச் சுகாதாரம், இந்தியர் தொடர்புக்கான தலைவர் வாசுகி உத்திராவதி தெரிவித்தார்.
“இந்தச் செயலியைப் பற்றிய விழிப்புணர்வு இந்திய சமூகத்தினரிடையே அதிகரிக்க இதனை இங்கு பிரபலப்படுத்த முயல்கிறோம்,” என்றார்.
விழாவில் முதன்முறையாகப் பங்கேற்ற இல்லத்தரசியும் ஆலயத் தொண்டூழியருமான அமுதா ராமையா, 67, தமக்காக தம் கணவர் இணையத்தளத்தின் மூலம் பதிவு செய்ததாகக் குறிப்பிட்டார்.
சுகாதாரப் பரிசோதனைகள் சுமுகமாக நடந்ததாகவும் எல்லோரும் பணிவாக நடந்துகொண்டதால் தமக்கு மனநிறைவாக இருந்ததாகவும் ஹவ்காங்கில் வசிக்கும் திருவாட்டி அமுதா கூறினார்.
காது, கண் பரிசோதனையுடன் ரத்த பரிசோதனையையும் மேற்கொண்ட ஓய்வுபெற்ற கணக்காளர் கணேசன் கருணாநிதி, 63, நிகழ்ச்சி சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டதாகப் பாராட்டினார்.
“அடுத்த முறை வரும்போது எனக்குத் தெரிந்தவர்களை உடன் அழைத்துவர விரும்புகிறேன்,” என்று அவர் கூறினார்.

