தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பூட்டானில் பறந்த சிங்கப்பூர் தேசியக் கொடி

2 mins read
c54cec58-3a85-4782-96a6-bb2364ece3b1
தேசிய தின நிகழ்ச்சியின்போது பூட்டானில் யோகா கற்றுத்தந்த திரு ஜீவன். - படம்: ஜீவன்

மடங்கள், மலைகள், கோட்டைகள் என இயற்கை எழிலுக்குப் பெயர்போன பூட்டான் நாட்டில் சிங்கப்பூர் கொடியை உயரப் பறக்கவிட்டார் திரு கே.ஆர். ஜீவன், 54.

கடந்த 25 ஆண்டுகளாக யோகா பயிற்சியில் மிகுந்த ஆர்வம் காட்டிவரும் திரு ஜீவன், இவ்வாண்டு பூட்டானில் தேசிய தினத்தைக் கொண்டாடினார்.

கைககளில் சிங்கப்பூர் கொடிகளை ஏந்திகொண்டு பூட்டான் உள்ளூர் மக்களுடன் தேசிய தினத்தை கொண்டாடிய ஜீவன்.
கைககளில் சிங்கப்பூர் கொடிகளை ஏந்திகொண்டு பூட்டான் உள்ளூர் மக்களுடன் தேசிய தினத்தை கொண்டாடிய ஜீவன். - படம்: ஜீவன்

யோகக்கலைப் பயிற்றுவிப்பாளரான திரு ஜீவன், சிங்கப்பூருக்கு அப்பாற்பட்டு இந்தோனீசியா, பிரான்ஸ் என பல நாடுகளில் யோகா கற்றுத்தந்துள்ளார். ஆன்மிக உணர்வை அதிகம் அள்ளித்தரும் பூட்டான் தம்மைக் கவர்ந்திழுக்க, ஜீவன் முன்பு அங்கு யோகா கற்றுத்தரச் சென்றிருந்தார்.

தற்போது பூட்டானில் பாரோ எனும் நகரில் இருக்கும் இவர், முன்பு அந்நாட்டிற்குச் சென்றிருந்த போதே அதன் இயற்கை வளங்களைக் கண்டு மெய்மறந்து போனார்.

“முன்பு பூட்டானில் யோகா வகுப்புகள் நடத்தியபோது, உள்ளூர்வாசிகள் என்மீது அன்பைப் பொழிந்தனர். அவர்கள் சிங்கப்பூர்மீது மிகுந்த மதிப்பு கொண்டுள்ளனர்,” என்றார் திரு ஜீவன்.

பாரோ நகரில் செண்டா எனும் நல்வாழ்விடத்தில் யோகக்கலையைக் கற்பித்து வரும் இவர், அந்த நல்வாழ்விடத்தை நிர்வகித்தும் வருகிறார்.

முதன்முறையாக அவ்விடத்தில் சிங்கப்பூர் தேசிய தினத்தைக் கொண்டாடிய திரு ஜீவன், பூட்டானுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான நல்லுறவை மேம்படுத்த இத்தகைய முயற்சி எடுத்துள்ளார்.

தேசிய தினத்தன்று தேசிய கொடியேற்றி, பூட்டான் மக்களுக்கு சிங்கப்பூர் தேசிய கீதத்தை அறிமுகப்படுத்தினார் திரு ஜீவன்.

“பூட்டான் மக்கள் அமரர் லீ குவான் யூ பற்றி அதிகம் அறிந்து வைத்துள்ளனர். அவர்கள், திரு லீயையும் நம் நாட்டையும் பற்றிப் பெருமையாக பேசுவது என்னை நெகிழ வைக்கிறது,” என்று அவர் சொன்னார்.

முன்பு தொண்டூழியர்கள் மூலம் பூட்டான் நாட்டைப் பற்றி அறிய நேர்ந்த திரு ஜீவன், அந்நாட்டிற்குச் சென்று யோகா வகுப்புகள் நடத்த வேண்டுமென்பதில் திண்ணமாக இருந்தார்.

தேசிய தின கொண்டாட்ட நிகழ்ச்சியின்போது, சிங்கப்பூரிலிருந்து தனக்குத் தெரிந்தவர்களையும் உள்ளூர் பூட்டான் மக்களையும் வரவழைத்து அவர்களை ஒருங்கிணைத்தார் திரு ஜீவன்.

பூட்டான் வர்த்தக அமைச்சரும் உயர்பதவிகளில் உள்ளோரும் அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். மேலும், சிங்கப்பூர் உணவுக் கலாசாரம் சார்ந்த உணவு வகைகளும் பரிமாறப்பட்டன.

பூட்டான் மக்களுக்கு சிங்கப்பூர் கலாசாரத்தைப் பரப்ப வேண்டுமென்பதும் திரு ஜீவனின் மற்றொரு நோக்கமாக இருந்தது.

செண்டாவை வருங்காலத்தில் சிங்கப்பூரர்களை ஈர்க்கும் இடமாக அமைக்கவும் பல முயற்சிகளை அவர் எடுத்து வருகிறார்.

குறிப்புச் சொற்கள்