ஜாமிஆ சூலியா பள்ளிவாசல், அல் அப்ரார் பள்ளிவாசல் தலைவர்களின் முன்னிலையில், யயாசன் மெண்டாக்கியும் நாகூர் தர்கா சங்கமும் இணைந்து கல்வி அறக்கட்டளை நிதி - ஜாமிஆ கல்வி உதவி நிதியை நீட்டிக்க மூன்று ஆண்டு இணக்கக் குறிப்பில் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 25) கையெழுத்திட்டன.
நாகூர் தர்கா சங்கம், ஜாமிஆ சூலியா பள்ளிவாசல், அல் அப்ரார் பள்ளிவாசல், 2025 முதல் 2027 வரை மொத்தம் $150,000 நிதி அளிக்கும்.
இந்த நிதி, தொழில்நுட்பக் கல்விக் கழகங்கள், பலதுறைத் தொழிற்கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றிலிருந்து ஆண்டுதோறும் 18 மலாய்/முஸ்லிம் மாணவர்களை ஆதரிக்கும்.
இந்தப் பங்காளித்துவம் மூலம், குறைந்த வருமானக் குடும்பங்களுக்கு நிதியாதரவு உறுதியாகும். மாணவர்கள் தம் கல்வி இலக்குகளை அடைய ஊக்குவிப்பாக அமையும்.
2022 முதல் நாகூர் தர்கா சங்கம், ஜாமிஆ சூலியா பள்ளிவாசல், அல் அப்ரார் பள்ளிவாசல் ஆகிய மூன்றும் மெண்டாக்கியின் கல்வி உதவி நிதிக்கு ஆதரவளித்து வந்துள்ளன. இதுவரை 90க்கும் மேற்பட்ட முஸ்லிம் உயர்கல்வி மாணவர்களுக்கு இவற்றின் நன்கொடை ஆதரவளித்துள்ளது.
“ஒவ்வொரு மாணவரும் நிதிச் சவால்களைத் தாண்டி, கல்வி இலக்கை அடைய வாய்ப்பைப் பெற வேண்டும் என நாங்கள் நம்புகிறோம்,” என்றார் நாகூர் தர்கா சங்கத் தலைவர் ஷேக் ஃபக்ருதீன்.
கட்டமைக்கப்பட்ட சூழல் (Built Environment) துறையில் உயர் நைட்டெக் பயின்றுவரும் முகமது ஏஎல் ஷாஸ்ரோய், 18, கடந்த ஆண்டு இந்த நிதியைப் பெற்றார்.
“இந்நிதி, என் தோள்களிலிருந்த பெரும் பாரத்தை இறக்கி வைத்துள்ளது. இனி என்னால் என் கல்வி, வேலைப் பயிற்சியில் இன்னும் நம்பிக்கையுடன் கவனம் செலுத்த முடியும்,” என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
“மெண்டாக்கி தொடர்ந்து மாணவர்களுக்கான கல்விப் பாதைகளை வலுப்படுத்தி வருகிறது. நிதியாதரவு தவிர, வழிகாட்டிகளுடன் தொடர்புகள், துறை சார்ந்த ஆதரவு, பங்காளித்துவங்களை வலுப்படுத்துவது போன்றவற்றையும் நாங்கள் மேற்கொள்வோம்,” என்றார் மெண்டாக்கி தலைமை நிர்வாகி ஃபெரோஸ் அக்பர்.
கல்வி அறக்கட்டளை நிதி மலாய்/முஸ்லிம் மாணவர்கள், குறிப்பாக, குறைந்த வருமானக் குடும்பங்களைச் சேர்ந்தோரின் கல்விக்காக 2002ல் அமைக்கப்பட்டது. தனிநபர் குடும்ப மாத வருமானமாக $750 மற்றும் அதற்கும் குறைவாக ஈட்டும் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு இது நிதியாதரவு அளிக்கிறது. மெண்டாக்கி இந்நிதியை நிர்வகிக்கிறது.
இந்நிதி தொடங்கியதிலிருந்து 100,000க்கும் மேற்பட்ட மாணவர்களை ஆதரித்துள்ளது. ஆண்டுக்குக் கிட்டத்தட்ட $1 மில்லியன் நிதியாதரவு வழங்கி வந்துள்ளது.
இந்நிதியைப் பெறுவோருக்கு மெண்டாக்கி துணைப்பாடத் திட்டம் அல்லது கூட்டு முயற்சித் துணைப்பாடத் திட்டம் மூலம் கல்வியாதரவும் வழங்கப்படுகிறது.

