தமக்குக் கிடைத்திருக்கும் முதுகலைச் சான்றிதழைச் சமூகத்திற்குச் சேவையாற்றும் வாய்ப்பாகக் கருதுகிறார் இளம்பட்டதாரியான மக்ஃபிரா செனேவி, 25.
சிங்கப்பூர் இஸ்லாமியச் சமய மன்றத்தின் (முயிஸ்) பட்டமளிப்பு விழாவில் 84 சமய ஆசிரியர்கள் முதுகலைச் சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்டனர்.
அவ்வகையில், இஸ்லாமிய சமகால ஆய்வுகளில் முதுகலைச் சான்றிதழ்ப் பட்டம் பெற்ற மாணவர்களில் ஒருவரான மக்ஃபிரா, “அந்த அங்கீகாரம் வெறும் பட்டம் மட்டுமன்று. சமூகத்தில் நான் ஏற்கவேண்டிய பொறுப்புக்கான வாய்ப்பு,” என்றார்.
சமூகப் பணியை நோக்கிய மைல்கல்லாக அந்தக் கல்விப் பயணம் அமைந்ததாகத் தமிழ் முரசிடம் கூறினார் மக்ஃபிரா.
படிப்பைத் தாண்டிய சமூகப் பணி
அந்தச் சாதனையும் சான்றிதழும் தமது எதிர்கால முயற்சிகளை வடிவமைப்பதில் குறிப்பிடத்தக்க பங்காற்றும் என்ற மக்ஃபிரா, ‘‘அக்கல்வியில் உள்ள பாடங்கள்வழி பெற்ற திறன்கள், சமூகத்திற்குப் பரிவுடன் பங்காற்ற வழிகாட்டியாக இருக்கும்,’’ என்று கூறினார்.
அந்தச் சான்றிதழ், இஸ்லாமிய விழுமியங்களையும் கொள்கைகளையும் நிலைநிறுத்தி, சமுதாயத்திற்குச் சிறப்பாகச் சேவை செய்யவேண்டிய கடமை குறித்த நினைவூட்டலாக உள்ளதாகக் குறிப்பிட்டார் மக்ஃபிரா.
முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சரும் உள்துறைக்கான மூத்த துணை அமைச்சருமான முஹம்மது ஃபைஷால் இப்ராஹிம், மாணவர்களின் பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றிருந்தார்.
இஸ்லாமியக் கல்வியில் ஆழமான அறிவைப் பெற்றிருப்பதுடன், பன்முகத்தன்மை கொண்ட இக்காலச் சமூக நடைமுறைகளுக்கு ஏற்ப செயல்படக்கூடிய சமயத் தலைவர்களை உருவாக்குவதற்கான சிங்கப்பூரின் தொடர்முயற்சிகளைப் பட்டதாரிகள் பிரதிபலிப்பதாக அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
சூழலுக்கு ஏற்ப சமூகத்துடன் இணைதல்
கனிவன்பும் புரிதலும் இணைந்த அணுகுமுறையே சமூகத்துடன் இணைந்து பயணிக்க வகைசெய்யும் என்று மக்ஃபிரா கூறினார்.
‘‘இஸ்லாமிய சமகால ஆய்வுகள் எனும் பாடத்திட்டத்தின்மூலம் கற்றுக்கொண்ட அனைத்தும் தற்போதைய சூழலுக்கு ஏற்றதாக உள்ளன. அது நாட்டின் சமூக வரலாற்றுச் சூழல் குறித்த ஆழமான புரிதலை வழங்கியது.
‘‘மேலும், சூழ்நிலைக்கு ஏற்றவாறு சமூகத்துடன் இணைந்து செயலாற்றவும் அதற்கான ஆதரவை வழங்கவும் தேவையான திறன்கள் கற்பிக்கப்பட்டன. இதனால், இயன்ற அளவு ஆக்கபூர்வமான மாற்றத்தை ஏற்படுத்த நான் ஆர்வமாக உள்ளேன்,” என்று மக்ஃபிரா கூறினார்.
எடுத்துக்காட்டாக, சவால்களை எதிர்கொள்ளும்போது அதில் சொந்தக் கருத்துகளைத் திணிக்காமல், விழிப்புணர்வுடன்கூடிய அணுகுமுறையைக் கையாளவேண்டும் என்பதைத் தாம் பயின்ற செவ்வியல் நூல்கள் கண்ணோட்டம் என்ற பாடம் கற்றுக்கொடுத்ததாக மக்ஃபிரா கூறினார்.
இதனால், மற்றவர்களின் அக்கறைகளைச் செவிமடுப்பது, மேலும் நன்றாக அவற்றைப் புரிந்துகொள்வது ஆகியவை பற்றித் தெரிந்துகொண்டதாகவும் அவர் சொன்னார்.

