பண்புகளைப் புகட்டிய கதை சொல்லும் போட்டி

பண்புகளைப் புகட்டிய கதை சொல்லும் போட்டி

3 mins read
718479cd-4d71-4d90-9a03-bf788401f5c1
ஜூரோங் மேற்கு உயர்நிலைப் பள்ளியில் மே மாதம் 30ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் பைனியர் தனித்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆலோசகருமான பேட்ரிக் டே டெக் குவான் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். - படம்: ஃபிரான்டியர் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழு

கதைவழி நற்பண்புகளையும் தன்னம்பிக்கையையும் புகட்டும் முயற்சியாகச் சிங்கப்பூர்த் தொடக்கப் பள்ளித் தமிழ் மாணவர்களுக்காக ‘சுட்டிக் குழந்தையே! குட்டிக் கதை சொல்’ என்ற நிகழ்ச்சி நடந்தேறியது.

ஜூரோங் மேற்கு உயர்நிலைப் பள்ளியில் மே 30ஆம் தேதி காலையில் இந்தக் கதை சொல்லும் போட்டி நடைபெற்றது.

மாணவர்களுக்குத் தமிழ்மொழிப் பற்று, நற்பண்புகள், பேச்சாற்றல், வாசிப்புப் பழக்கம் ஆகியவற்றை ஊக்குவிப்பதே நிகழ்ச்சியின் நோக்கம். ஃபிரான்டியர் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழுவும் ஜூரோங் மேற்கு உயர்நிலைப் பள்ளியும் இணைந்து இப்போட்டியை நடத்தின.

இப்போட்டி வயது அடிப்படையில் மூன்று பிரிவுகளில் நடத்தப்பட்டது. மாணவர்களுக்கு மட்டுமன்றிப் பெற்றோருக்கும் சில நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

முதலில் பெற்றோருக்கான தன்முனைப்புக் கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் வளர்ச்சி குறித்த கேள்விகளையும் உயர்நிலைப் பள்ளிக்கான பாடங்கள், இணைப்பாடங்கள் பற்றிய வினாக்களையும் ஆசிரியர்களிடம் கேட்டுத் தெளிவுபெற்றனர்.

மேலும், தமிழ் மரபு சார்ந்த விளையாட்டுகளான தாயம், பல்லாங்குழி, பரமபதம், ஆடுபுலியாட்டம் ஆகியவற்றையும் விளையாடி மகிழ்ந்தனர்.

போட்டியின் முடிவில் பரிசளிப்பு நிகழ்வும் நடைபெற்றது. இந்நிகழ்வில் பைனியர் தனித்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரும் அடித்தள அமைப்புகளின் ஆலோசகருமான பேட்ரிக் டே டெக் குவான் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

நிகழ்ச்சியின் ஒவ்வொரு பிரிவுப் போட்டியிலும் முதல் ஐந்து நிலைகளில் வந்த மாணவர்களுக்கு வெற்றிக் கோப்பைகள், பற்றுச்சீட்டுகள், வெற்றிக்கான சான்றிதழ்கள் ஆகியவை வழங்கப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் கலந்துகொண்ட அனைத்து மாணவர்களுக்கும் பங்கேற்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

தொடக்கநிலை ஒன்று, இரண்டு நிலைகளில் பயிலும் மாணவர்களுக்கு, ஆத்திசூடியிலிருந்து ஏதாவது ஒரு வரியைத் தேர்ந்தெடுத்து, அதன் பொருளை வலியுறுத்தும் கதை ஒன்றைப் படித்தோ உருவாக்கியோ சொல்லும்படிக் கூறப்பட்டது.

இப்பிரிவில் சாமி வினாலினி கலை என்ற மாணவி முதல் பரிசும், வாங்கல் பிரதீப் அனன்யா என்ற மாணவி இரண்டாம் பரிசும், முருகேசன் அக்ஷரா என்ற மாணவி மூன்றாம் பரிசும் பெற்றனர். அனன்யா சர்வேஸ்வரன் என்ற மாணவியும், செந்தில்முருகன் கமலினி என்ற மாணவியும் ஊக்கப் பரிசுகளைப் பெற்றனர்.

தொடக்கநிலை மூன்று, நான்கு நிலைகளில் பயிலும் மாணவர்களுக்கு, கொன்றை வேந்தனிலிருந்து சில வரிகளைத் தேர்ந்தெடுத்து, அவற்றை ஒட்டிய கதை ஒன்றைப் படித்தோ உருவாக்கியோ சொல்லும்படிக் கூறப்பட்டது.

இப்பிரிவில் கோபால் ஸ்ரீமான் என்ற மாணவன் முதல் பரிசும், மோகன்ராஜ் சுதிக்‌ஷா என்ற மாணவி இரண்டாம் பரிசும், தருண் நவின் மைவிழி என்ற மாணவி மூன்றாம் பரிசும் பெற்றனர். தருணிக்‌ஷா கோவிந்தராஜ் என்ற மாணவியும், இஷான் பிரபு என்ற மாணவனும் ஊக்கப் பரிசுகளைப் பெற்றனர்.

தொடக்கநிலை ஐந்து, ஆறு நிலைகளில் பயிலும் மாணவர்களுக்கு, திருக்குறளிலிருந்து ஏதாவது ஒரு குறளைத் தேர்ந்தெடுத்து, அதன் பொருளை வலியுறுத்தும் கதை ஒன்றைப் படித்தோ உருவாக்கியோ சொல்லும்படிக் கூறப்பட்டது.

இப்பிரிவில் சேகர் விபுஷா என்ற மாணவி முதல் பரிசும், ஜெயப்பிரகாசம் ஜோஷித் என்ற மாணவன் இரண்டாம் பரிசும், கார்த்திக் காஷ்வி என்ற மாணவி மூன்றாம் பரிசும் பெற்றனர். ஜயந்தினி என்ற மாணவியும், வி.எஸ். ஸ்ரீபிரதிக்‌ஷா நட்ராஜ் என்ற மாணவியும் ஊக்கப் பரிசுகளைப் பெற்றனர்.

“இளவயதிலேயே மாணவர்களிடத்தில் நல்ல பண்புகளை விதைக்க வேண்டும் என்பதற்காக ஆத்திசூடி, கொன்றைவேந்தன், திருக்குறள் ஆகிய நீதிநூல்களை இப்போட்டிக்குத் தேர்ந்தெடுத்தோம்,” என்று ஜூரோங் மேற்கு உயர்நிலைப் பள்ளியின் தமிழாசிரியர் கணேசுகுமார் பொன்னழகு தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்தமிழ்போட்டிநிகழ்வு