பங்ளாதேஷ் ஊழியரான ஃபஸ்லி இலாஹி, சிங்கப்பூர்ச் சமூகத்துக்குப் பங்களிப்பதில் எப்போதும் வழிமுறைகளைக் கண்டறிகிறார்.
சொந்த நாட்டில் உள்ள தம் குடும்பத்தாரைக் கவனித்துக்கொள்ளும் அவர், சிங்கப்பூரில் உள்ள தமது சமூகத்துக்கும் சேவையாற்றி வந்துள்ளார்.
சக வெளிநாட்டு ஊழியர்களின் திறன்களை வெளிக்கொணர 2018ல் வருடாந்திர வெளிநாட்டு ஊழியர் கலாசார நிகழ்ச்சியையும் அவர்களிடத்தில் வாசிப்புப் பழக்கத்தை வளர்க்க 2017ல் ஒரு நூலகத்தையும் அவர் தொடங்கினார்.
ஆனால், அத்தகைய முயற்சிகளில் இருந்து விலகிக்கொள்ள வேண்டிய நிர்பந்தத்தில் தற்போது அவர் உள்ளார்.
வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 16) நடைபெறும் இவ்வாண்டின் வெளிநாட்டு ஊழியர் கலாசார நிகழ்ச்சியே ஃபஸ்லி, 37, ஏற்பாடு செய்யும் கடைசி நிகழ்ச்சியாகும்.
சிங்கப்பூரில் இருக்கும் நேரத்தை ஃபஸ்லி சுருக்கிக்கொள்ள வேண்டியுள்ளது. குணப்படுத்த முடியாத புற்றுநோயால் அவர் பாதிக்கப்பட்டுள்ளதே அதற்குக் காரணம். பெருங்குடலில் தொடங்கிய புற்றுநோய், தமது உடலின் மற்றப் பகுதிகளுக்கும் பரவியுள்ளதாக அவர் கூறினார்.
சிகிச்சை பெறாவிட்டால் மூன்றிலிருந்து ஆறு மாதங்கள் வரைதான் வாழக்கூடும் என மருத்துவர் கூறியதாக அவர் தெரிவித்தார்.
சிங்கப்பூரில் தொடர் சிகிச்சைக்கான மருத்துவச் செலவுகள் அதிகம் என்பதால், ஜூன் 23ஆம் தேதி அவர் பங்ளாதேஷ் திரும்பவுள்ளார். வாழ்நாளின் எஞ்சிய பகுதியை மனைவி, மகனுடன் சேர்ந்து வாழ அவர் விரும்புகிறார்.
தொடர்புடைய செய்திகள்
“நான் தமிழ்நாட்டின் வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற விரும்புகிறேன். ஆனால், நிறைய செலவாகும் என்றால் நான் சிகிச்சை பெறமாட்டேன்.
“என்னிடம் இருந்த பணம் அனைத்தையும் என் தந்தையின் மருத்துவத்துக்குச் செலவழித்து விட்டதால், என் மருத்துவத்துக்கு செலவு செய்ய என்னிடம் பணம் இல்லை,” என அவர் கூறினார்.
தன் மகனை இனி யார் பார்த்துக்கொள்வார் என்பதே அவரது தலையாய கவலை.
தமது மருத்துவச் செலவுகளுக்காக https://www.simplygiving.com/appeal/help-rubel-with-his-end-of-life-expenses இணையத்தளம் வழி ஃபஸ்லி நிதி திரட்டி வருகிறார்.
“ஒருநாள், சிங்கப்பூருக்குத் திரும்பி வந்து என் நண்பர்களைக் காண்பேன் என்ற கனவு எனக்கு இன்றும் உள்ளது. அப்போது வெளிநாட்டு ஊழியர்களுக்கு நல்ல உணவு, கூடுதல் மருத்துவச் சலுகைகள், சிறந்த வாழ்க்கைச் சூழல் இருக்கும் என நம்புகிறேன்,” என்றார் ஃபஸ்லி.
“வெளிநாட்டு ஊழியர்கள் நமக்காகப் பாடுபடுகிறார்கள். ஆனால் அவர்கள் நோய்வாய்ப்படும்போது அவர்களுக்கு அடுத்தது என்ன?” என ஃபஸ்லியின் நிலைமை குறித்து வினவினார் முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் ஆந்தியா ஓங்.
தொடக்கத்திலும் முடிவிலும் சிரமம்
பங்ளாதேஷின் நொவகாளி மாவட்டத்தில் பிறந்த ஃபஸ்லி, 2009 செப்டம்பரில் முதன்முதலில் சிங்கப்பூருக்கு வந்தார்.
“கல்லூரிப் படிப்பை முடித்த அந்தத் தறுவாயில், என் குடும்பம் நிதி நெருக்கடியால் அவதியுற்றது. இளம்வயதில் சிங்கப்பூருக்கு வந்து குடும்பப் பொறுப்பை தோளில் சுமப்பது கடினமான முடிவு என்றாலும், அது சரியானதே,” என்று அவர் கூறினார்.
ஃபஸ்லியை சிங்கப்பூருக்கு அனுப்ப அவரது குடும்பத்தால் முகவரிடம் பணம் செலுத்த இயலாததால், இங்கு வந்து வேலை செய்ய அவர் பலதரப்பினரிடமிருந்து கடன் வாங்க நேரிட்டது. கடனை அடைக்க அவருக்கு நான்கு ஆண்டுகள் தேவைப்பட்டன.
தமக்கு வாக்குறுதி அளிக்கப்பட்ட மின்னாளர் வேலையை எதிர்பார்த்து சிங்கப்பூர் வந்த ஃபஸ்லிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. சுத்தம் செய்தல், பளுவைச் சுமப்பதே அவரது வேலையாக இருந்தது. வேலை முடித்ததும், பத்து ஊழியர்களுடன் நகரக்கூட முடியாத சிறிய இடத்தில் தங்கினார்.
கடந்த 2022ல் புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்று முடித்ததும் அவர் வேலையிழந்தார். அதனால், அடுத்து சேர்ந்த நிறுவனத்திலும் வேலையிழக்க நேரிடுமோ என்ற அச்சத்தில், தான் சிகிச்சை பெற்று வருவதை அவர் நிறுவனத்திடம் கூறவில்லை. அதனால் நிறுவனத்தின் மருத்துவக் காப்பீட்டைப் பயன்படுத்தவும் இல்லை.

