‘டாசெக் செய்லர்ஸ்’ காற்பந்துப் பயிற்சித் திட்டத்தின்வழி, பின்தங்கிய இளையர்கள் விளையாட்டுத் திறன்களைக் கைவரப் பெறுகின்றனர்.
அத்துடன், வாழ்வில் முன்னேற உதவும் வழிகாட்டுதல், சிறந்த கட்டமைப்பு, ஆதரவு தரும் சகோதரச் சமூகம் ஆகியவற்றாலும் அவர்கள் பயனடைகின்றனர்.
‘டாசெக் செய்லர்ஸ்’ காற்பந்துத் திட்டத்தின்மூலம் முன்னேறிய இளையர்களில் ஒருவர் 18 வயதான சர்வின் ராஜ்.
‘லயன் சிட்டி செய்லர்ஸ் எலீட் டெவலப்மென்ட்’ திட்டத்தில் இடம்பெறுவதற்கு முன்பு, 2023ஆம் ஆண்டில் தாமான் ஜூரோங்கில் உள்ள சமூகத் திடலில் சர்வின் தமது 15வது வயதில் காற்பந்து விளையாடத் தொடங்கினார்.
பாரம்பரியக் காற்பந்தாட்டப் பயிலகங்களுக்குச் செல்வதற்கோ உயர்தர விளையாட்டுச் சூழல்கள் கிடைக்கவோ வாய்ப்பில்லாத இளையர்களுக்கு இத்தகைய காற்பந்துத் திட்டங்கள் புதிய வாய்ப்புகளை உருவாக்குகின்றன.
ஆட்டங்களில் கோல்களைப் புகுத்தி புள்ளிகளைப் பெறுவதில் விளையாட்டாளர்கள் முனைப்புடன் இருந்தாலும், கட்டுக்கோப்பு, ஒற்றுமை, சொன்ன சொல்லைக் காப்பாற்றுவது போன்ற பண்புகள் முக்கியம் என்பதையும் இந்தத் திட்டம் வலியுறுத்த முனைகிறது.
சிங்கப்பூரில் இளையர்களுக்கான போட்டித் தளங்களான சிங்கப்பூர்க் காற்பந்துச் சங்கத்தின் இளையர் லீக், ‘ஜேஎஸ்எஸ்எல்’ தேசிய இளையர் லீக், எஃப்ஏஎஸ் ஐலண்ட் வைட் லீக் ஆகியவற்றில் விளையாடும் வாய்ப்பையும் ‘டாசெக் செய்லர்ஸ்’ திட்டத்தைச் சேர்ந்த இளையர்கள் பெறுகின்றனர்.
சிங்கப்பூரின் பெண்களுக்கான மிகப்பெரிய காற்பந்துப் பள்ளி ஒன்றையும் ‘டாசெக் செய்லர்ஸ்’ காற்பந்துப் பள்ளி நடத்துகிறது.
போட்டித்தன்மை, வெற்றிக் கிண்ணங்கள் ஆகியவற்றைக் கடந்து, சமூக உணர்வை உருவாக்குவதிலும் பாதுகாப்பான, ஆதரவுமிக்க சூழலை ஏற்படுத்துவதிலும் தங்கள் கவனம் இருப்பதாகத் திட்டத்தின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
முன்னாள் சிறைக்கைதிகள் இடம்பெற்றுள்ள குழுவினர் 2013ல் தொடங்கிய ‘பீக்கன் ஆஃப் லைஃப்’ (Beacon of Life) அமைப்பிலிருந்து இந்தத் திட்டம் தொடங்கியது.
இளையர்களை மேம்படுத்தும் நோக்கிலும், காற்பந்து ஆர்வலர்களுக்கான அங்கீகாரத்தைத் தரும் வகையிலும் அவர்கள் செயல்பட்டனர்.
இளையர்கள் பயிற்சி பெறவும், ஒழுக்கத்தை வளர்த்துக்கொள்ளவும், பயிற்சியாளர்கள், சக நண்பர்களுடன் உறவுகளை ஏற்படுத்திக்கொள்ளவும் ஏற்ற சூழலை வழங்க அக்குழுவினர் முனைந்தனர்.
காலப்போக்கில் படிப்படியாக வளர்ந்த இந்தத் திட்டம், தாமான் ஜூரோங்கைத் தாண்டி விரிவடைந்தது.
பின்னர், ‘டாசெக் அகாடமி’ அமைப்பின்கீழ் மேம்பட்டு, சிங்கப்பூரின் மேற்குப் பகுதி முழுவதும் உள்ள குடும்பங்களைச் சென்றடையும் விரிவான திட்டமாக அது உருவெடுத்தது.

