வெளிநாட்டு ஊழியர் நலனுக்காகக் களம் கண்ட மாணவி

வெளிநாட்டு ஊழியர் நலனுக்காகக் களம் கண்ட மாணவி

2 mins read
35334b9a-8368-42ae-8622-92d1326dbdab
சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 30ஆம் தேதி நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்ற சித்தி நூர்மாஸ்லியானா நூர்அஸ்மான். - படம்: சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகம்
multi-img1 of 3
Google News Preferred Icon

சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தில் தன் பயணத்தைத் தொடங்கியதிலிருந்தே வெளிநாட்டு ஊழியர்களின் நலனை முன்னிறுத்தி, அனைவரையும் உள்ளடக்கும் சமூகத்தை உருவாக்கத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்துள்ளார் சித்தி நூர்மாஸ்லியானா நூர்அஸ்மான் (மாஸ்), 25.

கொவிட்-19 பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த ஊழியர்கள் மாதக்கணக்கில் விடுதிகளிலேயே முடங்கிக் கிடந்த காலகட்டத்தில் அவர்களின் உணர்வுகளையும் சிரமங்களையும் தன்னால் புரிந்துகொள்ள முடிந்தது என்று மாஸ் குறிப்பிட்டார்.

“அந்த உணர்வே சமூகத்திற்காக உழைக்கத் தூண்டுகோலாக அமைந்தது,” என்றார் இவர்.

சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 30ஆம் தேதி நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், அரசியல் அறிவியல் மற்றும் தகவல் தொடர்பு மேலாண்மையில் இளநிலைப் பட்டம் பெற்றார் மாஸ்.

2022ல் பல்கலைக்கழகத்தில் சேர்ந்த இவர், மனிதவள அமைச்சின் ஆதரவுடன் மாணவர்கள் நடத்தி வரும் ‘புரோஜெக்ட் கேண்டிலா’ (Project Candela) என்ற சமூக சேவைத் திட்டத்தின் இயக்குநராக 2023ல் பொறுப்பேற்றார்.

இத்திட்டத்தின் மூலம், இரு வாரங்களுக்கு ஒருமுறை வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதிகளுக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் சென்று வந்தனர். அங்கு மின்னிலக்கத் திறன்களை வளர்த்தல், சமூக ஊடகங்களைப் பயன்படுத்துதல் போன்ற பயிலரங்குகளை மாணவர்கள் நடத்தினர்.

அதோடு, தீபாவளி, சீனப் புத்தாண்டு, கிறிஸ்துமஸ், தேசிய தினம் போன்ற விடுமுறைகளை மாணவர்கள் வெளிநாட்டு ஊழியர்களோடு இணைந்து கொண்டாடினர்.

உள்ளூர் மாணவர்களுக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கும் இடையே இடைவெளியைக் குறைத்து நீடித்த தொடர்பை ஏற்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கம்.

“வெளிநாட்டு ஊழியர் என்ற பொதுவான சொல்லைக் கடந்து, அவர்களுக்குப் பின்னால் இருக்கும் தனிநபர்களைச் சமமான மனிதர்களாக அடையாளம் காண்பது அவசியம்,” என்றார் மாஸ்.

வெளிநாட்டு ஊழியர்கள் குறைந்த திறன்கொண்ட பணிகளை மட்டுமே செய்வர் என்ற தவறான எண்ணத்தை உடைத்தெறிய வேண்டும் என்பதே இத்திட்டத்தின் மூலம் மாஸ் கற்றுக்கொண்ட முதல் படிப்பினை.

“ஊழியர்களில் பலர் பொறியியல் போன்ற துறைகளில் பல்கலைக்கழகப் பட்டம் பெற்றவர்களாகவும் பிற நாடுகளில் பல்வேறு உயர்பதவிகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்,” என்று மாஸ் வலியுறுத்தினார்.

தமது தலைமைத்துவத்தின்கீழ் இத்திட்டத்தில் செயலாற்றிய சக மாணவர்களின் பார்வையில் பெருமாற்றம் ஏற்பட்டதை உணர்ந்ததாக இவர் தெரிவித்தார்.

பல்கலைக்கழகத்தின் கட்டாய 80 மணி நேர சமூக சேவைக்காக இத்திட்டத்தில் சேர்ந்த மாணவர்கள் பலர், பிற சமூக விழிப்புணர்வுத் திட்டங்களிலும் பின்னர் பங்கெடுக்கத் தொடங்கினர்.

“அண்டைவீட்டாராக இருந்தாலும் வெளிநாட்டு ஊழியராக இருந்தாலும், அவர்களின் கதைகளைக் கேட்க நாம் தயாராக இருக்க வேண்டும். ஒன்றிணைந்து செயல்படுவதன் மூலமே ஒரு வலுவான சமூகத்தைக் கட்டியெழுப்ப முடியும்,” என்றார் மாஸ்.

தற்போது கொள்கை ஆய்வுக் கழகத்தில் ஆய்வாளராகப் பணியாற்றும் மாஸ், சமூக உள்ளடக்கம் சார்ந்த துறையில் முதுநிலைப் பட்டப்படிப்பை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்
மாணவிபட்டதாரிவெளிநாட்டு ஊழியர்