பாரம்பரிய விளையாட்டுகள்வழி தமிழ் கற்ற மாணவர்கள்

பாரம்பரிய விளையாட்டுகள்வழி தமிழ் கற்ற மாணவர்கள்

படம்: எடுவில்

09 Oct 2026 - 4:33 pm

2 mins read

சிங்கப்பூரில் தமிழ்மொழி, பாரம்பரிய விளையாட்டுகள், தொழில்நுட்பம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து ‘எடுவில்’ அமைப்பு மாணவர்களுக்கான ‘இன்பத்தமிழ்க் கொண்டாட்டம்’ நிகழ்ச்சியை நடத்தியது நடத்தப்பட்டது.

தமிழ் வளர்ச்சிக் குழுவின் ஆதரவுடன் இந்நிகழ்ச்சி அக்டோபர்  4ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இந்திய மரபுடைமை நிலையத்தில் நடைபெற்றது.

தொடக்கப் பள்ளி மேல்வகுப்பு, உயர்நிலைப் பள்ளி கீழ்வகுப்பு மாணவர்களுக்காக இரு அமர்வுகளாக நடைபெற்ற அந்நிகழ்ச்சியில், மாணவர்கள் பாரம்பரிய விளையாட்டுகளை அடிப்படையாகக் கொண்ட ‘எடுவில்’ செயலி வழியிலான கற்றல் நடவடிக்கைகளில் பங்கேற்றனர்.

‘எடுவில்’ செயலி வழியாக தமிழ்மொழித் திறன், நினைவாற்றல் உள்ளிட்ட பல்வேறு திறன்களைச் சோதிக்கும் விளையாட்டுகளில் மாணவர்கள் பங்கேற்றனர். பாரம்பரிய விளையாட்டுகளான பல்லாங்குழி, ஆடு புலி ஆட்டம், ஐந்துகல் உள்ளிட்டவற்றிலும் மாணவர்கள் நேரடியாகப் பங்கேற்றனர். 

‘எடுவில்’ செயலி வழியாக மாணவர்கள் விளையாட்டுகளில் போட்டியிட்டனர்
‘எடுவில்’ செயலி வழியாக மாணவர்கள் விளையாட்டுகளில் போட்டியிட்டனர் - படம்: எடுவில்

சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கத் தலைவர் தனபால் குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு இரு அமர்வுகளிலும் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசு வழங்கினார்.

“மாணவர்களாகிய நாங்கள் உருவாக்கிய செயலி இது. விளையாட்டுகள்மூலம் சமூகத்துக்குத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று விரும்பினோம். தமிழாசிரியர்களுக்கு உதவும் வகையில் மொழியைக் கற்றுக்கொடுக்கும் ஒரு கருவியை உருவாக்க வேண்டும் என்பதும் எங்கள் நோக்கமாக இருந்தது,” என்றார் எடுவில் நிறுவனர் சஞ்சய் முத்துக்குமரன்.

திறன்பலகைகளிலும் பயன்படுத்தவல்ல அந்தச் செயலி, உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் கடந்த ஆறு மாதங்களாக முன்னோடித் திட்டமாகப் பயன்படுத்தப்பட்டு வருவதாக சஞ்சய் தெரிவித்தார்.

“பாரம்பரியத்தையும் மின்னிலக்கத் தொழில்நுட்பத்தையும் எவ்வாறு இணைக்கலாம் என்ற எண்ணத்தில் இந்த நிகழ்ச்சி உருவானது. நம் பண்பாட்டை நாமே அறிந்துகொள்ளாவிடில் வேறு யார் அதனை அறிந்துகொள்வர்?” என்றார் ‘எடுவில்’ கற்றல் பிரிவுத் தலைவர் மூர்த்தி கௌசியாதர்ஷினி.

“இளையர்களே முன்வந்து இத்தகைய நிகழ்ச்சிகளை நடத்துவது, எதிர்காலத்தில் தமிழைத் தாங்கிப் பிடிப்பதற்கான நல்ல எடுத்துக்காட்டு. தமிழ் சார்ந்த துறைகளில் இல்லாவிடினும், தமிழுடன் தங்களை இணைத்துக்கொண்டு இளையர்கள் இந்த நிகழ்ச்சியை நடத்தியது எனக்குப் பெருமையாக இருந்தது,” என்று திரு தனபால் குமார் கூறினார்.

போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்குச் சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கத் தலைவர் தனபால் குமார் பரிசு வழங்கினார்.
போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்குச் சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கத் தலைவர் தனபால் குமார் பரிசு வழங்கினார். - படம்: எடுவில்

“ஒவ்வொரு மொழிக்கும் தனித்துவம் உண்டு. நமது தமிழ்ப் பண்பாட்டில் இவ்வளவு தனித்துவமான விளையாட்டுகள் இருப்பது குறித்து பெருமையாக இருக்கிறது,” என்றார் நிகழ்ச்சியில் பங்கேற்ற 12 வயது முத்துக்குமாரசாமி சாஸ்தா. 

“இன்றைய இளைய தலைமுறையினர் தங்களது பண்பாடு, மரபுடன் தொடர்பை இழந்து வருவதாகத் தோன்றுகிறது. இத்தகைய விளையாட்டுகள்மூலம் எங்களது ஆர்வத்தை அதிகரித்துக்கொள்ள முடிந்தது. விளையாடிக்கொண்டே நம் பண்பாடு குறித்து நிறைய கற்றுக்கொள்ளவும் முடிந்தது,” என்றார் உயர்நிலைப் பள்ளி மாணவியான பாலாஜி கனிஷ்கா, 14.

குறிப்புச் சொற்கள்