வெற்றியையும் தோல்வியையும் கற்றுக்கொடுக்கும் பாடங்கள், மன வலிமையை உறுதிப்படுத்தி வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ள உதவுகின்றன. அந்த அடிப்படையில், சிண்டா எனப்படும் சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கம் மூன்றாம் ஆண்டாக ‘ஸ்டெப் கிண்ணம்’ (STEP Cup) காற்பந்துப் போட்டியை நடத்தியது.
சிண்டாவின் ‘ஸ்டெப்’ துணைப்பாடத் திட்டத்தின் ஓர் அங்கமாக அப்போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. கடந்த மே 30ஆம் தேதி, ஈசூன் ‘ஃபுட்சால்’ திடலில் நடைபெற்ற விறுவிறுப்பான போட்டியில் தீவெங்கும் உள்ள வெவ்வேறு ஸ்டெப் மையங்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர்.
ஏட்டுக்கல்வியோடு நின்றுவிடாமல் பரந்துபட்ட உலக அறிவைப் பெற வேண்டும் என்பதற்காகக் காற்பந்து விளையாட்டை மாணவர்களிடையே சிண்டா அறிமுகப்படுத்தியதாகக் கூறினார் சிண்டாவின் தலைமை நிர்வாகி அன்பரசு ராஜேந்திரன்.
“தோல்வியைக் கண்டு மாணவர்கள் துவண்டுவிடக்கூடாது. போட்டியில் பங்கேற்பதே வெற்றியின் முதல் படி என்பதை உணர்த்த இந்த ‘ஸ்டெப் கிண்ணம்’ காற்பந்துப் போட்டியை நடத்துகிறோம். மாணவர்கள் ஒருவருக்கொருவர் கைதூக்கிவிடும் மனப்பான்மையை வளர்த்துக்கொண்டுள்ளனர் என்று நம்புகிறோம். அதிகமான மாணவிகளும் இம்முறை பங்கேற்றதில் மகிழ்ச்சி,” என்றார் அவர்.
காற்பந்தாட்டப் போட்டியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட வெஸ்ட் கோஸ்ட் - ஜூரோங் வெஸ்ட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஹமீது ரசாக், மாணவர்களின் திறனையும் அவர்களின் விளையாட்டு உணர்வையும் வெகுவாகப் பாராட்டினார்.
“கல்வி மட்டுமே வாழ்க்கையல்ல. கல்விக்கு அப்பால் மாணவர்கள் தங்களின் தனித்திறன்களையும் ஆற்றல்களையும் வளர்த்துக்கொள்வது அவசியம். அவர்கள் விளையாட்டு மூலமாகத் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொண்டு கல்வியிலும் மற்ற துறைகளிலும் சிறந்து விளங்க முடியும்,” என்று டாக்டர் ஹமீது வலியுறுத்தினார்.
பெண்கள் பிரிவில் சிராங்கூன் கார்டன் உயர்நிலைப் பள்ளி மாணவியர் வெற்றிபெற்றனர். அக்குழுவைச் சேர்ந்த 16 வயது ஹர்ஷிகா பாலமுருகன், “இந்தக் காற்பந்துப் போட்டி எனக்குத் தலைமைத்துவத்தையும் குழு உணர்வையும் கற்றுத்தந்தது,” என்று கூறினார்.
உட்லண்ட்ஸ் உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 16 வயது ஈஸ்வர் ராஜேந்திரன், “கடந்த மூன்று ஆண்டுகளாக எங்களது குழு மூன்றாவது அல்லது நான்காவது இடங்களையே பிடித்தது. ஆனால், இம்முறை தீவிரப் பயிற்சி செய்து வெற்றிபெற்றோம். காற்பந்து விளையாட்டில் எந்த நிமிடத்திலும் எதுவும் நடக்கலாம். எனவே, இறுதிவரை விடாமுயற்சியோடு போராட வேண்டும் என்பதைக் கற்றுக்கொண்டேன்,” என்றார்.
தொடர்புடைய செய்திகள்
வெஸ்ட் குரோவ் பள்ளிக் குழுவிலிருந்து போட்டியில் கலந்துகொண்ட 15 வயது நரேஷ் பாலமுருகன், “எங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு முயற்சி செய்தோம். அதுதான் எங்களுக்கு முக்கியமாகத் தெரிந்தது,” என்று கூறினார்.

