சிங்கப்பூரில் புகைமூட்டம் தீவிரமடைந்துள்ளது. அக்டோபர் 5ஆம் தேதிமுதல் தொடர்ந்து 12 நாள்களாகக் காற்றின் தரத்தைக் குறிக்கும் பிஎஸ்ஐ குறியீடு மோசமான நிலையிலேயே நீடிக்கிறது. இந்தோனீசியாவில் பற்றி எரியும் காட்டுத்தீ சிங்கப்பூரின் நுரையீரல்வரை புகைகிறது.
ஏறத்தாழ 11 ஆண்டுகளுக்குப் பிறகு சிங்கப்பூரில் காற்றின் தரம் தொடர்ந்து இத்தனை நாள்களாக மோசமான நிலையில் நீடிப்பதும் இதுவே முதன்முறை. பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் முடிந்தவரை கட்டடங்களின் உள்ளேயே இருக்குமாறும் தேசியச் சுற்றுப்புற அமைப்பு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.
தூய காற்றை நாடுவோர்க்கு ஆதரவளிக்க முந்நூற்றுக்கும் மேற்பட்ட சமூக மன்றங்களில் குளிரூட்டப்பட்ட அறைகள் திறக்கப்பட்டுள்ளன.
ஒரு தரப்பினர் முடிந்தவரை பாதுகாப்பாக இருக்க போதுமான முயற்சிகளை எடுக்கின்றனர். அவர்கள் வைத்திருக்கும் காற்று வடிகட்டி இயங்குகிறது; அலுவலகக் கூட்டங்கள் இணையவழிக்கு மாறுகின்றன; வீட்டிலிருந்தபடியே பணியாற்ற வாய்ப்பு கிடைக்கிறது; வாகன நிறுத்துமிடத்திலிருந்து அலுவலக வாயில்வரை முடிந்த அளவிற்குப் பாதுகாப்பாக இருக்க முடிகிறது. நாளொன்றிற்கு சில முகக்கவசங்களை அணிந்திடவும் அவற்றிற்கான விலைகொடுக்கவும் அவர்களுக்குக் கட்டுப்படியாகிறது.
ஆயினும், சிங்கப்பூரில் இருக்கும் மற்றுமொரு தரப்பினருக்குப் புகைமூட்டத்தால் காற்றின் தரம் குறைந்து தத்தளித்தாலும் அது ஒரு வேலை நாள் போலத்தான். வேலைக்குச் சென்றால்தான் வருமானம்.
அவ்வகையில், தொழில் நடந்தால்தான் ஊதியம் என்ற பிரிவில் தூய்மைப் பணியாளர்கள், அற்றைக்கூலிகள், வெளிநாட்டு ஊழியர்கள், வணிகர்கள் எனப் பலர் இடம்பிடிக்கிறார்கள்.
ஒரே வானத்தின்கீழ் இருந்தாலும் சுவாசிக்கும் புகையில் வேறுபாடு. புகைமூட்டம் இவர்களின் வாழ்க்கையில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்து அறிந்துவந்தது தமிழ் முரசு. சிலர் தங்கள் பெயரைக் குறிப்பிட்டாலும், ஊழியர்கள் பலர் தங்கள் பெயரைக் குறிப்பிட்டால் பணியிடத்தில் பிரச்சினை எழலாம் என்ற கவலையை முன்வைத்தனர்.
வியர்வையில் நனையும் முகக்கவசங்கள்
காலை வேளையில் செங்காங் வட்டாரத்தில் வெயிலும் புகையும் ஒன்றாக இறங்கும் கட்டுமானத் தளத்தில் இருந்த வெளிநாட்டு ஊழியர்கள் வழக்கம்போல் தங்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
புகைமூட்டம் பற்றிக் கேட்டபோது, சிங்கப்பூரில் ஓராண்டாகப் பணியாற்றும் 30 வயது வெளிநாட்டு ஊழியர் ஒருவர், தம் பெயரைக் குறிப்பிடக்கூடாது என்ற நிபந்தனையுடன் பேசினார்.
“புகைமூட்டம் ஏற்படுமுன் இரண்டு மணி நேரம் கூடுதலாக வேலை செய்வேன். ஆனால், இப்போது எட்டு மணி நேரம் மட்டுமே வேலை செய்கிறேன். இடையிடையே ஓய்வும் எடுத்துக்கொள்கிறேன். முகக்கவசமும் கொடுத்திருக்கிறார்கள்,” என்றார் அவர்.
செங்காங் வட்டாரத்தில் வீடமைப்பு வளர்ச்சிக் கழக குடியிருப்புப் பேட்டைகளில் பணியாற்றிக்கொண்டிருந்த பங்ளாதேஷ் ஊழியர் இருவர், “வேலை செய்யாவிடில் அந்த நாளுக்குரிய வருமானம் கிடைக்காது. எனவே வேலை செய்துதான் ஆக வேண்டும். முகக்கவசம் இருந்தாலும் முழுநேரமும் அணிவதால் வியர்வையில் அது நனைந்துவிடுகிறது,” என்றனர்.
அங்கிருந்த மற்றொருவர், தூய்மைப் பணியாளர். சாலையைச் சுத்தம் செய்யும் துடைப்பத்தைவிட நுரையீரலை காக்கும் முகக்கவசத்தை இறுக்கமாகப் பிடித்திருந்தார்.
புகைமூட்டம் வந்தபிறகு வாழ்வியல் முறை சற்றே மாறியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், “ஒவ்வொரு மணி நேரத்திற்கும் சற்று ஓய்வு எடுத்துக்கொண்டு நிறைய தண்ணீர் குடிக்கிறேன். காலை ஆறுமணி முதல் மாலை ஆறு மணிவரை வேலை இருக்கும். களைப்பாக உணர்ந்தால் உடனே ஓய்வு எடுக்கும்படி மேற்பார்வையாளர் அறிவுறுத்தியுள்ளார்,” என்றார்.
புகையிலும் நிற்காத பசிதீர்க்கும் வண்டிகள்
சென்ற மாதம் தொடங்கிய புகைமூட்டம் வீட்டுக்குள் இருப்பவர்களின் பசியை அதிகரித்திருக்கிறது என்றே சொல்லலாம். தோ பாயோவில் உள்ள ‘ஸம் ஸம் கார்னர்’ உணவுக்கடையின் உரிமையாளர் திருவாட்டி சபியா, 39, இணையவழியில் உணவு வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்திருந்தாலும், தங்கள் கடைக்கு நேரில் வந்து உணவு வாங்குவோரின் எண்ணிக்கை குறைந்துவிட்டது என்றார். இதனால், விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளது என்று அவர் சொன்னார்.
பெயர் கூற விரும்பாத 47 வயது உணவு விநியோக ஊழியர் ஒருவரின் குரலில் வெறுப்பும் பொறுப்பும் ஒன்றாக எதிரொலித்தன. புகைமூட்டத்தின்போது உணவு விநியோகிப்பது முன்பைவிட கடினமாக இருப்பதாக ஒப்புக்கொண்ட அவர், “கடந்த சில மாதங்களாக ஊக்கத்தொகை பெறுவதற்கான விநியோக எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது,” என்றார்.
“முன்பு 21 முறை விநியோகம் செய்தால் போதும். இப்போது அது 30க்கும்மேல் அதிகரித்துவிட்டது. அந்த இலக்கை எட்டுவது கடினம். கொவிட்-19 காலத்தில் வழங்கப்பட்டதுபோல் விநியோகத்திற்கான கூடுதல் கட்டணமும் இப்போது இல்லை. முகக்கவசம் அணிந்துகொண்டு வேலை செய்வதும் சிரமமாக இருக்கிறது,” என்றார்.
மனைவி, இரு பிள்ளைகள் அடங்கிய குடும்பத்திற்காக காலையிலிருந்து இரவுவரை உழைக்க வேண்டியிருப்பதால், புகையைக் கருத்தில்கொண்டு வழக்கத்தைவிட முன்னதாகவே வேலையை முடித்துக்கொள்ள முயல்வதாகவும் அவர் சொன்னார்.
26 வயதான மற்றொரு விநியோக ஊழியர், பல்கலைக்கழகப் படிப்பை முடித்துவிட்டு வேலை தேடி வருவதாகவும் எனினும் தற்போது செய்யும் விநியோகப் பணியின் நிமித்தமாக நண்பகல் உணவு, இரவுணவு நேரங்களில் மட்டுமே வெளியில் சென்று வேலை செய்வதாகவும் சொன்னார்.
வருமானத்திற்காக வேலை செய்தாக வேண்டும் என்ற அவர், தம்மைப் போன்றோர் வேலைக்காக வைத்திருக்கும் செயலியில் ஒலிக்கும் சத்தம் பசியின் சத்தம் மட்டுமன்று, பிழைப்பின் சத்தமும்கூட என்றார்.
தீப ஒளிக்குமுன் சூழ்ந்த புகை
தீபாவளி நெருங்குகிறது. ஆனாலும், ஒளிர வேண்டிய நேரத்தில் லிட்டில் இந்தியா புகையில் மங்குகிறது. பண்டிகை வரப்போகும் வேளையில், சிங்கப்பூரில் புகைமூட்டப் பிரச்சினை பெருங்கவலையை ஏற்படுத்தியுள்ளது.
வாடிக்கையாளர்கள் பலர் தங்கள் நலன் காக்க வீட்டுக்குள்ளேயே தஞ்சமடைந்துள்ளதால், லிட்டில் இந்தியாவில் பண்டிகைக் கூட்டம் இன்னும் களைகட்டவில்லை.
இது குறித்துக் கருத்துரைத்த, ‘தி ஒரிஜினல் வடை’ நிறுவனத்தின் இயக்குநர் சூரியா செல்வராஜா, “உணவு வணிகங்களைப் பொறுத்தவரை வாடிக்கையாளர்களின் வருகையே முக்கியம். புகைமூட்டம் அதிகரிக்கும்போது மக்கள் வெளியில் நடமாடுவதையும் கடைகளுக்கு செல்வதையும் தவிர்ப்பர். தற்போது எங்கள் விற்பனை 30 முதல் 40 விழுக்காடு வரை குறைந்துள்ளது. எதிர்பார்த்த விற்பனை இல்லாததால் உணவுப்பொருள்கள் வீணாகும் அபாயமும் உள்ளது,’’ என்றார்.
சந்தைகள் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், சில வணிகங்கள் தங்களின் செயல்பாடுகளை உட்புற இடங்களுக்கு மாற்றியுள்ளன.
‘இந்தியன் இங்க்ஸ்’ மருதாணிக் கலை வணிகத்தின் நிறுவனர் ஷெரீன் பேகம், “எங்களின் மருதாணி தற்காலிகக் கடை உட்புறத்தில் செயல்படுவதை வாடிக்கையாளர்களுக்குத் தெரிவிக்க தீவிர சந்தைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்,” என்றார்.
‘தமிழ் டேல்ஸ்’ இணையவழிப் புத்தகக் கடையின் உரிமையாளர் சந்தியா ஜெயபாலன், “வணிகம் முழுமையாக உட்புறத்திலேயே நடப்பதால் புகைமூட்டம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. அதிக வாடிக்கையாளர்களைச் சென்றடையவே தீபாவளிக் காலத்தைத் தேர்ந்தெடுத்தேன்,” என்றார்.
ஆயினும், புகைமூட்டம் மோசமடைந்தால் தொழில் நலிவடையலாம் என்று கடைக்காரர்கள் அச்சப்படுகின்றனர்.
இறையகங்களிலும் முகக்கவசம்
வழிபாட்டுத் தலங்களையும் புகை விட்டுவைக்கவில்லை.
இது விழாக்காலம் என்பதால் பள்ளிவாசல், கோயில், தேவாலயங்களில் மக்கள் திரளாகக் கூடுவது இயல்பு. அவ்வகையில், இக்காலகட்டத்தில் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து சமய வழிபாட்டுத் தல நிர்வாகிகள் பகிர்ந்துகொண்டனர்.
வெள்ளிக்கிழமை தொழுகைக்குப்பின் பேசிய பென்கூலன் பள்ளிவாசலின் தலைவர் மு.யு.முகம்மது ரஃபீக், 61, “தேவைப்படுவோர்க்காக மூன்று பெட்டி என்95 முகக்கவசங்களையும் இதர முகக்கவசங்களையும் வைத்திருக்கிறோம். இன்று கூட்டம் குறைவாகவே இருந்தது. அறிவுரைப்படி பலர் முகக்கவசம் அணிந்திருந்தனர். மதரசா வழக்கம்போல் நடந்தது,” என்றார்.
இதன்தொடர்பில் பதிலளித்த இந்து அறக்கட்டளை வாரியம், அரசாங்கத்தின் புகைமூட்ட ஆலோசனைகள் தெளிவான வழிகாட்டுதலை வழங்குகின்றன. பெரும்பாலான இந்துக் கோயில்கள் திறந்தவெளிக் கட்டடங்கள் என்பதால் பக்தர்கள் புகைமூட்டத்திற்கு ஆளாக நேரிடும். எனவே, வாரியமும் அதன் கோயில்களும் புகைமூட்ட ஆலோசனைகளை வழங்கியுள்ளன. காணொளியும் பதிவேற்றம் செய்துள்ளதாக வாரியம் சொன்னது.
பாதிக்கப்பட வாய்ப்புள்ளோர்க்காகக் கணிசமான அளவில் முகக்கவசங்கள் உள்ளன என்றும் கையிருப்பைப் பொறுத்து அவை வழங்கப்படும் என்றும் அதன் அறிக்கை சுட்டியது.
மூத்த குடிமக்களும் சுவாசப் பிரச்சினை இருப்போரும் தங்கள் உடல்நலத்திற்கு ஆபத்து ஏற்படுமாயின் நீண்ட நேரம் புகையில் இருக்கும் சடங்குகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் பக்தர்கள் தனிப்பட்ட பொறுப்புணர்வுடன் தங்கள் உடல்நிலைக்கு ஏற்ப முடிவெடுக்க வேண்டும் என்றும் வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.
கிறிஸ்து சேகர திருச்சபையின் தலைமைப் போதகர் அருள்திரு ஸ்டீவன் ஆசிர்வாதம், “புகைமூட்டம் சார்ந்த தனி அறிவிப்பைப் பேராயம் வெளியிடவில்லை. என்றாலும், கொரோனா காலத்தில் இருந்ததைப் போன்றே அனைவரும் தங்கள் உடல்நலத்தைப் பார்த்துக்கொள்ள வேண்டும். தேவாலயத்திற்கு வர இயலாதவர்களுக்காக வழிபாடுகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகின்றன,” என்றார்.
அவ்வகையில், உள்ளே வர முடிந்தவர்களுக்காக சமய வழிபாட்டுத்தலக் கதவு திறந்திருக்கிறது; வெளியே செல்ல முடியாதவர்களுக்காக முகக்கவசம் காத்திருக்கிறது.
