முதியோரை வீடுகளில் சென்றடையும் சன்லவ் இல்லத்தின் புதுத்திட்டம்

முதியோரை வீடுகளில் சென்றடையும் சன்லவ் இல்லத்தின் புதுத்திட்டம்

2 mins read
c1bb280d-9fb0-4a6e-ad86-31a59d220e6e
உள்துறைக்கான மூத்த துணை அமைச்சரும் முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சருமான முஹம்மது ஃபைஷால் இப்ராஹிம் (நடுவில்),  ‘மூவ்டுகனெக்ட்’ (Move2Connect) திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சியைச் சிறப்பித்தார்.  - படம்: சன்லவ்

வீட்டுக்குள்ளேயே முடங்கியிருக்கும் அல்லது சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் மூத்த குடிமக்களைச் சென்றுசேரும் நோக்கில் சன்லவ் இல்லம், அவர்களை ஈடுபடுத்தும் திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

சன்லவ் இல்லத்தின் சேவைகளைத் தேவைப்படும் மூத்தோரின் வீட்டுக்கே சென்றுசேர்க்க ‘மூவ்டுகனெக்ட்’ (Move2Connect) திட்டம் முனைகிறது. வேன்கள் வழி, பொருள்கள், உடற்பயிற்சிக் கருவிகள் ஆகியவற்றை மூத்தோரிடம் வழங்க அந்தப் புதிய சேவை உதவுகிறது.

யூனோஸ் கிரசெண்ட் புளோக் 12ன் கீழ்த்தளத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 16) அந்தத் திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சி நடந்தேறியது. உள்துறைக்கான மூத்த துணை அமைச்சரும் முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சருமான முஹம்மது ஃபைஷால் இப்ராஹிம் நிகழ்ச்சியைச் சிறப்பித்தார். 

சன்லவ் இல்லத்தின் துடிப்புமிக்க மூத்தோர் நிலையங்களின் சேவைகளைப் பயன்படுத்தும் 500க்கும் மேற்பட்ட முதியவர்கள், ‘மூவ்டுகனெக்ட்’ திட்டத்தின் மூலம் ஆண்டுதோறும் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

காலப்போக்கில் அத்திட்டம் மேலும் பல அக்கம்பக்க வட்டாரங்களுக்கு விரிவடையும்போது, பயனாளர்களின் எண்ணிக்கையும் படிப்படியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்வழி, சமூகத்திலுள்ள முதியவர்கள் பலரை ஒருங்கிணைத்து அவர்களுக்கு ஆதரவளிக்க முடியும் எனச் சன்லவ் இல்லம் கூறியது.

முதியோர்களுக்குச் சேவைகளை மிகவும் அருகிலேயே கொண்டுசெல்வதிலும், யாரும் விடுபட்டுப் போகாமல் இருப்பதை உறுதிசெய்வதிலும் சன்லவ்வின் அர்ப்பணிப்பை ‘மூவ்டுகனெக்ட்’ திட்டம் பிரதிபலிப்பதாக இல்லத்தின் தலைமைத் திட்ட அதிகாரியும் சன்லவ் இல்லத்தின் தலைவருமான எம்.கே. ராஜமோகன் தெரிவித்தார்.

“திட்டங்களை நேரடியாகக் குடியிருப்புகளுக்கே கொண்டுசெல்வதன் மூலம், நிலையங்களில் வழங்கப்படும் சேவைகளை அணுகுவதில் சிரமங்களை எதிர்கொள்ளும் முதியவர்களை மேலும் எளிதாக ஈடுபடுத்த முடியும்,” என அவர் கூறினார்.

உதவி தேவைப்படும் முதியவர்களுக்கு ஏற்ற தொடர்புகளை உருவாக்க அனைவரும் இணைந்து செயல்படுகையில், தொண்டர்கள், குடியிருப்பாளர்கள், சமூகப் பங்காளிகள் ஆகியோரின் ஆதரவை மனதார வரவேற்பதாக அவர் கூறினார்.

முதுமையைத் துடிப்பாகவும் கலகலப்பாகவும் கழித்திட 80 வயது சுசானா போன்ற சிலர், துடிப்புமிக்க மூத்தோர் நிலையங்களுக்குச் செல்கின்றனர்.

ஈராண்டுகளுக்கும் மேலாக சன்லவ் துடிப்புமிக்க மூத்தோர் நிலையத்திற்குச் செல்லும் அவர், ஒவ்வொரு திங்கட்கிழமையும் நடைபெறும் யோகா வகுப்புகளில் பங்கேற்கிறார்.

அவர் யோகா மட்டுமன்றி ரம்மி, பிங்கோ போன்ற விளையாட்டுகளிலும் அடிக்கடி ஈடுபட்டு மகிழ்கிறார்.

“வயது முதிர்ந்த நண்பர்களுடன் அடிக்கடி வருவதால் எனக்கு மகிழ்ச்சி. அதே வேளையில் வெளியே செல்லாதோரும் பயனடைய வேண்டும் என விரும்புகிறேன். புதிய திட்டம் இந்த இலக்கை அடையும் என நம்புகிறேன்,” என்று அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்