தொழில்நுட்பத்தால் மேம்பட்ட தமிழ்ப் படிப்பு

தொழில்நுட்பத்தால் மேம்பட்ட தமிழ்ப் படிப்பு

2 mins read
செயற்கை நுண்ணறிவு மற்றும் பிற செயலிகள் மூலம் தமிழ் கற்றல்
e4ba9d82-e9c0-4754-ab35-5961af1fd5b3
தமது தமிழ் வகுப்பில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி, பாடம் கற்பிக்கும் ஆசிரியர் யோகேஸ்வரி பாலசுப்பிரமணியன். - படம்: பே. கார்த்திகேயன்

இன்றைய நவீனக் காலத்தில் தமிழ்மொழிக் கற்றல் என்பது வகுப்பறைச் சுவர்களிடையே மட்டும் அடங்கிவிடாமல், செயற்கை நுண்ணறிவு, தொழில்நுட்பம் ஆகியவற்றின் துணையோடு ஒரு புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது.

கடந்த 26 ஆண்டுகளாகத் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றி வரும் திருமதி யோகேஸ்வரி பாலசுப்பிரமணியன் கடந்த ஏழு ஆண்டுகளாகப் பொங்கோல் உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றுகிறார். 

அவர் மாணவர்களுக்குத் தமிழ்மொழியில் ஆர்வத்தை ஏற்படுத்த அவர்களிடையே தொழில்நுட்பத்தைப் புகுத்திவருகிறார்.

“தமிழ்மொழியை மிகச் சிறப்பாகத் தொழில்நுட்பத்தில் பயன்படுத்த முடியும் என்பதை நாம் மாணவர்களுக்கு எடுத்துரைக்கும்போது தமிழ் மொழி இக்காலத்திற்கும் பயனுள்ளது என்பது மாணவர்களின் மனத்தில் பதியும்,” என்றார் திருமதி யோகேஸ்வரி.

வயது ஒரு தடை அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில், இளம் ஆசிரியர்களிடமிருந்து ‘ஜெமினாய்’ போன்ற செயற்கை நுண்ணறிவுச் செயலிகளைக் கற்றுக்கொண்டு, தமக்குத் தெரிந்த கற்பித்தல் உத்திகளுடன் தொழில்நுட்பத்தை இணைத்து திருமதி யோகேஸ்வரி பாடம் நடத்துகிறார்.

மூன்றாம் நிலை மாணவியான 15 வயது நூருநிஷா, முன்பு கட்டுரை எழுதுவதற்குத் தேவையான கருத்துகளைத் திரட்டத் தடுமாறிய நிலையில், இப்போது செயற்கை நுண்ணறிவின் உதவியால் உடனடியாகவும் விரிவாகவும் பதில்களைப் பெறுகிறார்.

கணினியில் தம் தமிழாசிரியர் உருவாக்கிய செயலிகளைப் பயன்படுத்தும் நூருநிஷா.
கணினியில் தம் தமிழாசிரியர் உருவாக்கிய செயலிகளைப் பயன்படுத்தும் நூருநிஷா. - படம்: பே. கார்த்திகேயன்

ஆசிரியர் ஒரு நண்பரைப் போல தரையில் அமர்ந்து குழுச் செயல்பாடுகளை ஊக்குவிப்பதும் பழமையான தமிழ் மொழியைத் தற்காலத் தொழில்நுட்பத்தில் பயன்படுத்துவதும் தமக்கு மிகுந்த பெருமையளிப்பதாக மாணவி நிஷா கூறுகிறார்.

மற்றொரு மாணவரான 15 வயது முகம்மது ஹிஷாம், ஆசிரியர் யோகேஸ்வரி உருவாக்கிய ‘மிசஸ் பாலா ஜிபிடி’ தன்னிடம் கேட்கும் கேள்விகள் தன்னை ஆழமாகச் சிந்திக்கத் தூண்டுவதாகவும் அதன்மூலம் தமது மொழி ஆற்றல் மேலோங்குவதாகவும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் பாடம் எழுதும் முகம்மது ஹிஷாம்.
செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் பாடம் எழுதும் முகம்மது ஹிஷாம். - படம்: பே. கார்த்திகேயன்

தொடக்கத்தில் கணினியை விளையாட்டுக்காக மட்டுமே பயன்படுத்திய ஹிஷாம், இப்போது ‘கஹூட்’ போன்ற இணைய விளையாட்டுகள்மூலம் நண்பர்களுடன் போட்டியிட்டுத் தமிழை ஆர்வத்துடன் கற்றுவருகிறார்.

தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும்போது சில சவால்கள் ஏற்பட்டாலும், அவற்றை மாணவர்கள் முன்னிலையிலேயே சரிசெய்து, தோல்வியே வெற்றியின் முதல்படி என்பதைத் திருமதி யோகேஸ்வரி தம் மாணவர்களுக்குச் செயல்முறையில் போதிக்கிறார்.

“தொழில்நுட்பத்தை அடிப்படையாகக்கொண்டு கற்றல் இருக்கக்கூடாது. கற்பித்தலுக்கு ஏற்ப தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும் என்பதில் நான் மிக உறுதியாக இருக்கிறேன்,” என்றார்.

‘கேன்வா ஏஐ’, ‘பேட்லெட்’ போன்ற செயலிகளைப் பயன்படுத்தித் தமிழ் வகுப்பறையைத் துடிப்புமிக்க இடமாக அவர் மாற்றியுள்ளார்.

மாணவர்களின் தேவைக்கேற்பவும் அவர்களின் கற்றல் நிலைக்குத் தகுந்தவாறும் பாடங்களை வடிவமைப்பதில் அவர் காட்டும் அக்கறை, மாணவர்களைத் தமிழ்மொழியின் பக்கம் ஈர்க்கிறது.

உலகம் மாறிக்கொண்டே வரும்போது, மாணவர்களை மாற்ற முயல்வதைவிட ஆசிரியர்கள் தங்களை மாற்றிக்கொள்வதே காலத்தின் கட்டாயம் என்பதை இவரது முயற்சி உணர்த்துகிறது.

ஆசிரியரின் அர்ப்பணிப்பும் நவீனக் கருவிகளின் துணையும் இணையும்போது, தமிழ்மொழி எக்காலத்திற்கும் நிலைத்து நிற்கும் என்பது திண்ணம்.

குறிப்புச் சொற்கள்