நீதி நாடுவோரின் குரலாக ஒலிக்கும் நீதிமன்ற மொழிபெயர்ப்பாளர்கள்

நீதி நாடுவோரின் குரலாக ஒலிக்கும் நீதிமன்ற மொழிபெயர்ப்பாளர்கள்

6 mins read
சிங்கப்பூர்ச் சட்டத்துறையின் 200 ஆண்டுகாலப் பயணத்தின் மற்றுமொரு மைல்கல், நீதித்துறையில் ஒலிக்கும் தமிழ்மொழி. ஆங்கிலம் பேசத் தெரியாதவர்கள் நீதியை நாடும்போது, அவர்களின் குரலாகத் திகழ்கிறார்கள் நீதிமன்ற மொழிபெயர்ப்பாளர்கள்.
35eb0eb3-27c6-4cb3-8548-d94b29dda762
நீதி வேண்டுவோருக்கும் நீதிபதிகளுக்கும் இடையே வலுவான பாலமாகத் திகழும் நீதிமன்ற மொழிபெயர்ப்பாளர்கள். (இடமிருந்து) திருவாட்டி வைதீஸ்வரி சேகரன், திரு ஷேக் ஃபரிட், திருவாட்டி கீதா வேலு. - படம்: சுந்தர நடராஜ்

சிங்கப்பூர் நீதிமன்றங்களில் நீதி வேண்டுவோருக்கும் நீதிபதிகளுக்கும் இடையே வலுவான பாலமாகத் திகழ்ந்து நீதி நிலைநாட்டப்படுவதை உறுதிசெய்பவர்கள் அங்கு பணிபுரியும் மொழிபெயர்ப்பாளர்கள்.

திருவாட்டி கீதா வேலு: மூத்த மொழிபெயர்ப்பாளர், உச்ச நீதிமன்றம்

தமிழ்மொழி விழாவின்போது தமிழ் சார்ந்த நிகழ்ச்சிகளில் இளையர்கள் பங்கேற்பதைக் காண்பது மகிழ்ச்சி என்றார் மூத்த மொழிபெயர்ப்பாளர் திருவாட்டி கீதா வேலு. 
தமிழ்மொழி விழாவின்போது தமிழ் சார்ந்த நிகழ்ச்சிகளில் இளையர்கள் பங்கேற்பதைக் காண்பது மகிழ்ச்சி என்றார் மூத்த மொழிபெயர்ப்பாளர் திருவாட்டி கீதா வேலு.  - படம்: சுந்தர நடராஜ்

“என்னைத் தூக்கிலிட்டுவிடுவார்களா,” எனக் கேட்கும் ஒருவருக்குத் தீர்ப்பின் கடைசி வார்த்தைகளை மொழிபெயர்ப்பது உச்ச நீதிமன்றத்தில் மூத்த மொழிபெயர்ப்பாளராக இருக்கும் 48 வயது திருவாட்டி கீதா வேலுவின் பணி.

உரிமையியல், குற்றவியல், குடும்பநலம் என எந்தவித வழக்காக இருந்தாலும் ஒவ்வொரு நாளும் புது அனுபவம் காத்திருக்கும் என்றார் 16 ஆண்டுகள் இத்துறையில் அனுபவம் பெற்ற திருவாட்டி கீதா. 

மூத்தோருக்கும் சிறாருக்கும் வழக்கு விசாரணையின்போது துல்லியமாகவும் தெளிவாகவும் மொழிபெயர்க்க வேண்டும். அதேவேளையில், உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த அறிந்திருப்பது அவசியம் என்றார் அவர், தூக்குத்தண்டனை விவரங்களை மொழிபெயர்த்த முதல் வழக்கில் வேலைசெய்தபோது கண்கலங்கியதை நினைவுகூர்ந்தார்.

அன்றிலிருந்து நீதிமன்ற அறைகளில் உணர்ச்சிவசப்படகூடாது என்பதில் கவனத்துடன் இருக்கிறார்.

மரண தண்டனை தொடர்பான வழக்குகள் போதைப்பொருள், கொலைக் குற்றம் என எதுவாகவும் இருக்கலாம். முதற்கட்ட விசாரணை தொடங்கி வழக்கின் முடிவுவரை பல்வேறு கட்டங்களைக் கடக்கவேண்டியிருக்கும்.

அவர் ஈடுபட்டிருந்த ஒரு வழக்கில் விசாரணை முடிந்து குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது. அவர் மேல்முறையீடு செய்தார். கருணை மனுவும் நிராகரிக்கப்பட்டது. இப்படிப்பட்ட நிலையை எதிர்கொள்பவர்கள் இறுதிவரைக்கும் அவர்கள் உயிரைக் காக்க ஏதாவது ஒருவகையில் மனு தாக்கல் செய்து முயற்சி எடுத்துக்கொண்டே இருப்பார்கள்.

அவர்களின் அத்தனை கோரிக்கைகளும் ரத்து செய்யப்பட்டுவிட்டால், மொழிபெயர்க்கும்போது அவர்களிடம் அதைக் கூறவேண்டிய தருணம் சவால்மிக்கதாக இருக்கும்.

“நாளை காலை என்னை தூக்கில் போட்டுவிடுவார்களா” என அவர்கள் கேட்கையில் அவர்களின் கண்களையோ  முகத்தையோகூட பார்க்க முடியாது. ஏற்கெனவே கொடுத்த தீர்ப்பில் மாற்றம் இல்லை’ என்று சொல்லிவிடுவேன்,” என்றபோது அவர் குரலில் உணர்ச்சி தளும்பியது.

அத்தகைய தருணங்களில், “சிங்கப்பூரில் நீதியை நிலைநாட்ட வேண்டிய கடமை எங்களுக்கு உண்டு,” என்று தமக்குத் தாமே சமாதானம் சொல்லிக்கொள்வார்.

நாட்டின் அதிகாரபூர்வ மொழியாகத் தமிழ் இருப்பது சிறப்பு என்ற அவர், மொழிபெயர்ப்பாளர் பணி பெருமைமிக்கது என்றார்.

“சிங்கப்பூர் நீதிமன்ற வாதங்கள் ஆங்கிலத்தில் இருப்பதால், அம்மொழி பேசத் தெரியாதவர்களுக்கும் தமிழ் பேசுவோருக்கும் நீதி கிடைக்க உதவுகிறேன் என்பதை நினைக்கும்போது அது எனக்குப் பெருமையாக இருக்கும். அது எனக்கு விலைமதிப்பில்லாத பதவி உயர்வு,’’ என்றார் மூத்த மொழிபெயர்ப்பாளர் கீதா.

“தமிழ்மொழி விழாவின்போது தமிழ் சார்ந்த நிகழ்ச்சிகளில் இளையர்கள் பங்கேற்பதைக் காண்பதில் மனம் மகிழ்ச்சி அடைகிறது. அது, இன்னும் சிறப்பாகத் தொடர வேண்டும்,’’ என்று அவர் கூறினார்.

திரு ஷேக் ஃபரிட்: மொழிபெயர்ப்பாளர், குடும்ப நீதிமன்றம்

நீதித்துறையில் தமிழ் மொழி மிளிர்வதற்குத் தானும் ஒரு காரணமாக இருப்பதில் மகிழ்ச்சி என்றார் திரு ஷேக் ஃபரிட்.
நீதித்துறையில் தமிழ் மொழி மிளிர்வதற்குத் தானும் ஒரு காரணமாக இருப்பதில் மகிழ்ச்சி என்றார் திரு ஷேக் ஃபரிட். - படம்: சுந்தர நடராஜ்

விசாரணை, தீர்ப்பு, மேல்முறையீடு என்று பல நிலைகளில் மொழிபெயர்ப்பாளராக இருக்கிறார் 44 வயது திரு ஷேக் ஃபரிட். 

குடும்பங்கள் மீண்டும் ஒன்றிணைந்து செயல்பட உதவுவதும் நீதி கேட்டு வருவோருக்கு அவர்களது சட்டப் பயணத்தில் ஆதரவளிப்பதும் ஆசிரியர் பணியிலிருந்து நீதிமன்ற மொழிபெயர்ப்புத் துறைக்கு மாறிய ஷேக் ஃபரிட்டுக்கு மனநிறைவளிக்கும் பணி. 

செயற்கை நுண்ணறிவு வரவால் ஒவ்வொருநாளும் மொழிபெயர்ப்புக் களத்தில் பல வார்த்தைகள் வந்துசேர்ந்தவண்ணம் உள்ளதைச் சுட்டிய திரு ஃபரிட், ‘‘அதற்கேற்றார் போல் மொழிவளத்தை வலுப்படுத்துவதும் முக்கியம்,’’ என்றார்.

அவ்வகையில் பணிநிமித்தமாக அண்மையில் நடந்த சம்பவம் ஒன்றைப் பற்றி விவரித்தார் அவர்.

“மொழிபெயர்ப்புக்காக இந்திய விவாகரத்துச் சான்றிதழ் ஒன்றைக் கையாள நேரிட்டது. இஸ்லாமிய விவாகரத்துத் தொடர்புடைய அந்த ஆவணத்தில் அரபு வார்த்தைகள்  இருந்தன. அதைக் கண்டுபிடிப்பது சற்று சவாலானது வெளிநாட்டு நீதிமன்றத்தில் உள்ள தனித்துவமான வார்த்தைகளை கண்டுபிடிப்பதும் நல்ல அனுபவம்,’’ என்றார் திரு ஃபரிட். 

தமிழ் மொழியிலேயே பணி செய்வது வரம் என்ற அவர், எண்ணமாக இருந்த அந்தச் சிந்தனை வேலை வாய்ப்பாக மாறியது மகிழ்ச்சி என்றும் கூறினார்.

“சிங்கப்பூர் நீதித்துறையில் தமிழ் மொழியின் பரிணாம வளர்ச்சியை நேரில் காண்பதிலும் அதில் ஒரு பங்காக இருப்பதிலும் பெருமிதம் அடைகிறேன்,’’ என்று திரு ஃபரிட் கூறினார்.

குறிப்பாக, தமிழ் மொழியால் வாழ்க்கைத்தொழில் வசப்படுமா என்ற கருத்து நிலவுவதைக் குறிப்பிட்ட அவர், ‘‘இன்றைய காலகட்டத்தில் இளையர்கள் தமிழ் மொழியைப் பயன்படுத்துவது அரிதாக உள்ளது. அதற்கு நாமும் காரணம்,” என்றார்.

அத்தகைய இடைவெளிகளைக் களைய நீதித்துறையில் தமிழ் மொழியின் செயல்பாட்டை அறிந்திட மாணவப் பயிற்சியாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுவதாக அவர் கூறினார்.

இதன் மூலம், “தமிழ் மொழி எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது? வாழ்க்கைத்தொழில் சார்ந்த எதிர்காலம் தமிழிலும் உண்டு,’’ என்பதை இளம் தலைமுறையினருக்கு விளக்க முயற்சி எடுத்துவருவதாகவும் அவர் சொன்னார்.

“மாணவர்கள் இத்துறையில் எதிர்காலம் உண்டு என்பதை அறிந்துகொள்ள நாங்கள் சாட்சி. நீதித்துறையின் நூற்றாண்டுகால வரலாற்றில், தமிழ் மொழிக்கும் ஒரு பங்கு உள்ளது என்பது சிறப்பு. நீதித்துறையில் தமிழ் மொழி நிலைத்து வாழும் மொழியாக மிளிர்வதற்கு நானும் ஒரு காரணமாக இருப்பதில் எனக்கு மகிழ்ச்சி,’’ என்றார் ஏழு ஆண்டு அனுபவம் பெற்ற திரு ஃபரிட்.

திருவாட்டி வைதீஸ்வரி சேகரன்: மொழிபெயர்ப்பாளர், அரசு நீதிமன்றம்

நீதியின் வாசலைத் தட்டுவதற்கு மொழி தடையாக இருக்குமா என்று யோசிக்க வேண்டாம் என்றார் திருவாட்டி வைதீஸ்வரி சேகரன்.
நீதியின் வாசலைத் தட்டுவதற்கு மொழி தடையாக இருக்குமா என்று யோசிக்க வேண்டாம் என்றார் திருவாட்டி வைதீஸ்வரி சேகரன். - படம்: சுந்தர நடராஜ்

உளவியல் பட்டதாரியான 32 வயது திருவாட்டி வைதீஸ்வரி சேகரன் தற்செயலாக இந்தத் துறையைத் தெரிவு செய்தார்.

சிறுகோரிக்கை நீதிமன்ற வழக்குகள், வேலை சம்பந்தப்பட்ட கோரிக்கை வழக்குகள், சாலைப் போக்குவரத்து வழக்குகள் என தமது ஏழு ஆண்டு கால பணி அனுபவத்தில் பற்பல வழக்குகள் சார்ந்த மொழிபெயர்ப்புகளில் அவர் ஈடுட்டுள்ளார்.

‘‘இவற்றுக்கான ஆயத்தங்கள் முக்கியம். குற்றச்சாட்டுகள், குற்றப்பத்திரிகைகள், குற்ற விவரங்கள், குறிப்புகள் உள்ளிட்ட பற்பல ஆவணங்களைப் பார்ப்போம். சில வேளைகளில், நீதிமன்ற அறையில் விசாரணையின்போது புது வார்த்தைகளைக் கேட்க நேரிடும்.

“அப்போது நீதிமன்றத்திற்கு இடையூறு ஏற்படாத வகையில், அதை தெளிவுப்படுத்திக்கொள்வோம்,” என்ற அவர், தம் பணியில் சந்தித்த ஒரு வழக்கின் அனுபவத்தையும் பகிர்ந்துகொண்டார்.

‘‘மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு எதிரான குற்றச்சாட்டு கொண்டுவரப்பட்டது. தாதியரைத் தாக்கியதாகக் கூறப்பட்ட அந்த வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்டிருந்தவருக்கு ஆங்கிலம் தெரியாது. தமிழில்தான் பேசுவார். அவரின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள வேண்டும்.

“அவரின் நிலையைக் கண்டு உணர்ச்சிவயப்படாமல் வழக்கு விசாரணையில் ஈடுபட்ட தருணம் சவால்மிக்கதாக இருந்தது.  

“நீதிபதி என்ன தீர்ப்பு வழங்குவார் என்பதைத் தெரிந்துகொள்ள மிகவும் ஆர்வமாக இருந்தேன்,’’ என்று விவரித்தார் திருவாட்டி வைதீஸ்வரி.  

‘‘நீதிமன்ற வழக்குகளில் சாட்சியம் அளிக்கும்போது உணர்ச்சிபூர்வமாகப் பேசுவோரைப் பார்க்க நேரிடும். ஆனாலும், நிபுணத்துவ வரையறைகளை வகுத்துவிடுவேன்.

‘‘முன்னுரிமை மொழிபெயர்ப்புக்குத்தான். அவர்களுக்கு ஆறுதல் சொல்வது கிடையாது. நான் உணர்ச்சிவசப்பட்டு மொழிபெயர்ப்பில் ஏதாவது தவறு செய்துவிட்டால் அது பாதகமாக முடியும். அர்த்தங்கள் மாறாமல் சரியாக மொழிபெயர்ப்பதில் மட்டுமே கவனம் இருக்கும்,’’ என்றார் அவர்.

மறக்கமுடியாத மற்றொரு சம்பவம் பற்றியும் அவர் பகிர்ந்துகொண்டார்.

“பேனாகத்தி வைத்திருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட வெளிநாட்டு ஊழியர் ஒருவரின் வழக்கு. அவருக்கு வழக்கறிஞர் யாரும் இல்லை. அந்த ஊழியரே அவரது வழக்கில் வாதாடினார்.

“இறுதியில் அவர் நிரபராதி என்ற தீர்ப்பு வழங்கப்பட்டபோது, அவர் நீதிமன்ற அறையிலேயே கண்ணீர் மல்கி கரம்கூப்பி எனக்கு நன்றி கூறினார். அதை மறக்க இயலாது,’’ என்று திருவாட்டி வைதீஸ்வரி நெகிழ்ந்தார் .

தற்போது தமிழ் பேசுவதற்கான கோரிக்கைகள் அதிகமாக வருவதைப் பார்க்க முடிவதாக சொன்ன அவர், சிலர் ஆங்கிலம் தெரிந்திருந்தாலும் தங்கள் தாய்மொழியான தமிழில் வழக்கு விசாரணை சார்ந்த மொழிபெயர்ப்பை நாடுவதாகத் தெரிவித்தார்.

“தங்கள் உணர்வுகளைச் சீராகப் பதிவுசெய்வதற்கு தமிழ் அவர்களுக்குச் சிறந்தத் தளமாக இருப்பதாக அவர்கள் கூறுவர். வழக்கு விசாரணையின்போது சிலருக்குப் பதற்றத்தினால் அவர்கள் கூற நினைக்கும் வார்த்தைகளை ஆங்கிலத்தில் கூற இயலாது. அப்போது அவர்கள் தமிழில் பேசுவதையே நாடுவர்,” என்றார் அவர். 

குற்ற ஒப்புதல் வழக்குகளுக்கு மொழிபெயர்ப்பு சுருக்கமாக இருக்கும் என்ற அவர், ‘‘ஆனால் உரிமையியல் வழக்கு ஆவணங்கள் கட்டுக்கட்டாக இருக்கும். அவ்வகையில், அண்மையில் வழக்கு விசாரணை சார்ந்த ஆவணத்தின் ஒரு கோப்பு மட்டும் 500 பக்கமாக இருந்தது,’’ என நினைவுகூர்ந்தார்.

மொழிபெயர்ப்பாளராக இருப்பதால் படம் பார்க்கும்போதும்கூட வசனங்களுக்கான துணை உரைகளை (subtitles) வாசிக்கையில் இது சரியான மொழிபெயர்ப்பு இல்லையே என்று தானாகவே மனம் யோசிக்கத் தொடங்கும் என்று புன்னகைத்தார் அவர்.

‘‘நீதியின் வாசலைத் தட்டுவதற்கு மொழி ஒரு தடை இல்லை,” என்று கூறிய திருவாட்டி வைதீஸ்வரி, நீதி கேட்டு வருவோருக்கு நியாயம் கிடைப்பதைப் பார்க்கும்போது, என்னாலும் சிறிய பங்களிப்பை நல்க முடிந்ததை எண்ணிப் பார்க்கும்போது திருப்தியாக இருக்கும்,’’ என்றார்.

குறிப்புச் சொற்கள்