உள்ளங்கையில் உலகம் என்றிருக்கும் இன்றைய நவீன தொழில்நுட்ப, இணைய உலகச் சூழலில், ஆதி மொழிகளில் ஒன்றான தமிழின் படைப்புகளை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்வதில் பங்களிக்க வேண்டும் என்ற நோக்குடன் இயங்கி வருகிறார் இதழியல் துறை பேராசிரியரான முனைவர் தமிழ்ப்பரிதி மாரி.
கணினி, கைப்பேசித் திரைகள் போன்றவற்றில் தமிழ்ப் படைப்புகளைக் கிடைக்கச்செய்வதன் முக்கியத்துவத்தைத் தமிழ் முரசின் ‘ஆய கலை அரிய கலைஞர்’ வலையொளித் தொடருக்கு அளித்த சிறப்பு நேர்காணலின்போது அவர் வலியுறுத்தினார்.
அடிப்படையில் வேளாண்மைத் துறைப் பட்டதாரியான இவர், இதழியல் துறையில் முதுநிலைக் கல்வியும் முனைவர் பட்டமும் பெற்று சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். தமிழ் மொழியானது பனையோலைகள், செப்பேடுகள், கல்வெட்டுகள், தாள்கள் போன்றவற்றைக் கடந்து இப்போது கணினிகளிலும் அலைபேசிகளிலும் நிலைகொண்டுள்ள சூழலில், செயற்கை நுண்ணறிவுக் காலத்திற்கு ஏற்ப தமிழ்ச் சொற்கள் ஒருங்கிணைக்கப்பட்ட தரவுகளாக இணையத்தில் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே அகராதிப் பணிகளைத் தேர்ந்தெடுத்ததாக அவர் கூறினார்.
‘தமிழ்ப்பேழை’
சொற்களுக்குப் பொருள் தேடுபவர்களுக்காக கிட்டத்தட்ட 100 அகராதிகளைக் கொண்ட ‘தமிழ்ப் பேழை’ (mydictionary.in) எனும் பெருந்தொகுப்பு இணையத்தளத்தின் முதன்மை ஆசிரியராக முனைவர் தமிழ்ப்பரிதி செயலாற்றி வருகிறார்.
இந்த நூல்களுக்கான பதிப்புரிமைச் சவால்களை எதிர்கொள்ள மெக்சிகோ, லண்டன் அருங்காட்சியகம், ஆவணக்காப்பகம், ஐரோப்பிய நாடுகள், யாழ்ப்பாண நூலகம் என 20க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு தரவுகளை அவர் சேகரித்துள்ளார்.
மேலும், தமிழ் இணையக் கல்விக்கழகக் கணித்தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளராக இருந்தபோது தாம் பரிந்துரைத்ததை ஏற்று, அரசுத் துறைகளும் பல்கலைக்கழகங்களும் வெளியிடும் நூல்களை ‘படைப்பாக்கப் பொதும உரிம’த்தின்கீழ் வெளியிடுவதற்கான அரசாணையைத் தமிழ்நாடு அரசு வெளியிட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இதன் மூலம், பல்கலைக்கழக அகராதிகள், செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்டத்தின் ஆக்கங்கள், 1924க்கு முந்தைய பதிப்புரிமையற்ற நூல்கள் என 100 அகராதிகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
முனைவர் தமிழ்ப்பரிதி மாரி தமது சொந்தச் செலவில் சேலத்தில் 3,000 அகராதிகள், 4 லட்சம் பழமொழிகள், 1 லட்சம் விடுகதைகள், 1,000 இதழ்களின் அச்சுப்படிகள், 1918 முதல் திரட்டப்பட்ட 90 விழுக்காட்டுத் தமிழ்த் திரைப்பட ஆவணங்கள் அடங்கிய காப்பகத்தை உருவாக்கியுள்ளார்.
பழமொழி ஆய்வுகளும் சுவைத் தகவல்களும்
உடல்நலம் சார்ந்த பழமொழிகளில் முனைவர் பட்ட ஆய்வு செய்த அவர், 50,000 பழமொழிகளைத் தொகுத்து ‘தமிழ்ப்பேழை’யில் வெளியிட்டுள்ளார்.
அந்த ஆய்வில், மருத்துவர்கள் தங்களுக்குள் பேசும் பழமொழிகள், நோயாளிகளிடம் அவர்கள் பேசும் பழமொழிகள் எனப் பகுப்பாய்வு செய்துள்ளார். எடுத்துக்காட்டாக, ‘உப்புக்கட்டத் தெரியாதவன் துப்புக் கெட்டவன்’ என்ற பழமொழி, ஒரு மூலிகையிலிருந்து தாது உப்புகளைப் பிரித்தெடுத்து மருந்து செய்யத் தெரியாதவர் மருத்துவரே இல்லை என்பதைக் குறிக்கும் மருத்துவர்களுக்கான ரகசியப் பழமொழி என்று விளக்கினார்.
விக்கிப்பீடியா பங்களிப்புகள்
விக்கிமூலத்திற்கு (Wikisource) ஐந்து லட்சம் பக்கங்களைப் பங்களித்ததன் மூலம், உலக அளவில் 58ஆம் இடத்தில் இருந்த தமிழ் விக்கிமூலம் தற்போது 8ஆம் இடத்தைப் பிடித்துள்ளது என்று மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார் முனைவர் தமிழ்ப்பரிதி மாரி.
தமிழகத்தின் 35,000க்கும் மேற்பட்ட திருக்கோயில்கள், 12,000க்கும் மேற்பட்ட ஊராட்சிகள் பற்றிய தரவுகள் ஒருங்கிணைக்கப்பட்டு விக்கிப்பீடியாவில் கட்டுரைகளாகச் சேர்க்கப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், இப்பணிகளில் நீச்சல்காரன், ரவி போன்ற தோழர்கள் பலரும் இணைந்து செயல்பட்டதாகச் சொன்னார்.
பிற பங்களிப்புகள்
வெற்றிவேல் அறக்கட்டளையுடன் இணைந்து, புகழ்பெற்ற ‘கான் அகடமி’யின் 1,600க்கும் மேற்பட்ட அறிவியல், கணிதக் கல்விக் காணொளிகளைத் தமிழில் மொழியாக்கம் செய்து ஒலி/துணையுரை சேர்த்ததை அடுத்து அந்தத் தளத்தில் தமிழுக்கான தனிப் பகுதி (ta.khanacademy.org) அமைக்கப்பட்டதை விவரித்தார்.
மேலும், செல்லும் இடங்களை ஒளிப்படம் எடுத்து, தமிழில் மதிப்பீடுகள் வழங்கி தமிழ் மொழியின் பயன்பாட்டை கூகல் தளங்களிலும் கூகல் மொழிபெயர்ப்பிலும் அவர் உறுதிசெய்து வருகிறார்.
வேளாண் பின்னணி கொண்ட அவர், சூழலியல் விழிப்புணர்வை உணர்த்த ‘நத்தைப்பூக்கள்’ எனும் துளிப்பா (ஹைக்கூ) கவிதை நூலை எழுதியுள்ளார்.
எதிர்காலத் திட்டம்
தமது எதிர்காலத் திட்டம் குறித்துப் பகிர்ந்துகொண்ட முனைவர், அடுத்த 500 ஆண்டுகளுக்கான தமிழைச் செயற்கை நுண்ணறிவிற்கு ஏற்ற, பல்லூடகத்தன்மை கொண்ட தரவுகளாகத் தொகுப்பதே தம் முதன்மை இலக்கு என்றார்.
இதனையொட்டி, பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுக்கான 25 புதிய அகராதிகளை உருவாக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தமது பணிகளுக்கு மனைவி சுவிதா இளங்கோவன் நிரலாக்கம் (Coding) செய்து உறுதுணையாக இருந்து வருவதாக அவர் சொன்னார். இசையமைப்பாளர் இளையராஜாவின் இசையும் குடும்பத்தின் ஒத்துழைப்புமே அன்றாடம் 10 முதல் 12 மணி நேரம் சுறுசுறுப்பாகப் பணியாற்ற ஊக்கமளிப்பதாகக் கூறினார்.
எதிலும் தமிழ் இருக்கவேண்டும்; அதிலும் நம் தமிழ் முதலில் இருக்கவேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டுவரும் முனைவர் தமிழ்பரிதி மாரி தமிழ்ச்சொற்களுக்குப் பொருள் தேடுவதற்கான ஒருங்கிணைந்த தளமான தமிழ்ப்பேழையில் சொற்களைத் தேடுவது குறித்த செய்முறை விளக்கத்தையும் அளித்தார்.


