‘தொடுவானம் நோக்கி’ எனும் கருப்பொருளைக் கொண்ட இவ்வாண்டின் தேசிய தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் தமிழ் வரவேற்பில் தொடங்கி, பாடல், நடனம் என பலவற்றிலும் தமிழ் அங்கங்களைப் பார்வையாளர்கள் எதிர்பார்க்கலாம்.
சிங்கப்பூரின் பல இனக் கலாசாரத்தைக் கொண்டாடும் வகையில் 36 கலைஞர்கள், 2,600 பங்கேற்பாளர்களுடன் இணைந்து இவ்வாண்டின் தேசிய தின அணிவகுப்பை துடிப்புடன் வழங்குகின்றனர்.
மொத்தம் 170 வண்ணச் சுடர்விடும் கருவிகள், நான்கு ‘ஐமேக்ஸ்’ திரை அளவிலான காட்சித் திரைகள், 1,600 அசையும் விளக்குகள், 50 ‘லேசர்’ ஒளிக்கற்றைகள் நிகழ்ச்சிக்கு வண்ணம் சேர்க்கவுள்ளன. ஏறத்தாழ 300 ஆளில்லா வானூர்திகளும் உள்ளரங்கக் காட்சியில் பங்களிக்கின்றன.
கடந்த 2016ஆம் ஆண்டுக்குப் பின்னர் தேசிய விளையாட்டரங்கில் நடைபெறும் தேசிய தின அணிவகுப்புக்கான கலை நிகழ்ச்சிகள் ஆறு அங்கங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
பாதுகாத்தல் (Protect), வழங்குதல் (Provide), வடிவமைத்தல் (Create) , கட்டமைத்தல் (Build), பராமரித்தல் (Care), நீதி (Justice) எனச் சிங்கப்பூரர்கள் கொண்டுள்ள அடிப்படை விழுமியங்களைப் பிரதிபலிக்கும் 18 அலங்கார ஊர்திகள் வலம்வரும் அங்கத்தின் இறுதிப்பகுதியில் பாடல், நடன அங்கம் இடம்பெறும்.
அதில், பிரபலமான தேசிய தினப் பாடலான ‘முன்னேறு வாலிபா’ பாடலுக்குக் குழு நடனம் இடம்பெறுகிறது.
சுஷ்மா சோமாவின் இசைக் குரலில் இனிய பாடல்
மூன்றாவது பிரிவில், சிங்கப்பூரைப் போற்றும் வகையிலான கர்நாடக இசைப் பாடலைப் பாடவுள்ளார் பாடகர் சுஷ்மா சோமா.
‘சோலையும் மணமும் மணந்து சிங்கப்பூராய்ப் பிறந்தவளே’ என அவரின் அழகிய தமிழ் வரிகளுடன் இடம்பெறும் இந்த அங்கத்தில், கடல்வாழ் உயிரினங்கள், வணிகக் கப்பல்கள் அரங்கத்தில் வலம் வந்து வரலாற்றைக் கண்முன் நிறுத்தும்.
“தேசிய தின நிகழ்ச்சியில் பாடுவதில் மகிழ்ச்சி, பெருமை. ஒரு பரவசமான உணர்வு. நான் பாடும் அங்கம் பல்லின இசை அங்கம்,” என்றார் சிங்கப்பூரின் இளங்கலைஞர் விருதை வென்ற கர்நாடக இசைக் கலைஞரான சுஷ்மா சோமா.
“சிறு வயதில் நான் கர்நாடக இசை கற்றபோது அது தேசிய தின மேடையில் அரங்கேறும் என எதிர்பார்க்கவில்லை. அது நடந்தேறுவதைக் காண்பது சிறப்பான அனுபவம். இது எனக்குக் கிடைத்த சிறந்த வாய்ப்பு,” என்று உணர்ச்சி பொங்கத் தமது மனநிலையை அவர் விவரித்தார்.
உதயசௌந்தரியின் விறுவிறுப்பான பாடலும் நிகழ்ச்சித் தொகுப்பும்
தேசிய தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் முதன்முறையாகத் தொகுப்பாளராக இணைந்துள்ளார் தொலைக்காட்சி பிரபலமான உதய சௌந்தரி.
கடந்த 1960களில், ஒரு கிராமத்தில் குழந்தைகளாக இருக்கும் ஐந்து தொகுப்பாளர்கள் முதன்முறையாக தொலைக்காட்சியைப் பார்ப்பதுபோல் அமைந்த குறும்படத்துடன் தொடங்குகிறது நான்காவது பிரிவு.
தொலைக்காட்சி பார்ப்பதின் ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் படம்பிடித்துக் காட்டுவதுடன், சுதந்திரம் அடைந்ததிலிருந்து மக்களிடம் தாக்கம் ஏற்படுத்திய நிகழ்ச்சிகளை நினைவுகூர்ந்து, பன்முக கலாசாரத்தைக் கொண்டாடுகிறது இந்த அங்கம்.
இந்த அங்கத்தில், வசந்தம் தொலைக்காட்சியில் காவல்துறையை மையமாகக்கொண்டு தயாரிக்கப்பட்ட பிரபல நாடகமான ‘வேட்டை’யின் கருப்பொருள் பாடல் இடம்பெறுகிறது.
தமது துறை சார்ந்த அங்கம் தேசிய தின நிகழ்ச்சியில் இடம்பெறுவதே பெருமை என்றும், குறிப்பாகத் தாம் பங்காற்றிய நிகழ்ச்சியின் பகுதி இடம்பெறுவதும், அதற்குத் தாம் மேடையேறுவதும் கூடுதல் மகிழ்ச்சியான தருணம் என்றார் உதயசெளந்தரி.
‘தடக் தடக் என தோட்டா வெடிக்குது; படக் படக் என நெஞ்சு துடிக்குது’ எனும் அப்பாடலுக்கு, தொகுப்பாளரும், அந்நாடகத்தில் பங்களித்தவருமான உதயசௌந்தரி நடனமாடுகிறார்.
பல இனக் கலைஞர்கள், சிறப்புத் தேவையுள்ள கலைஞர்கள் இருவருடன் இணைந்து நடன நிகழ்ச்சி படைக்கிறார் ஷ்ருதி நாயர், 29.
தேசிய தின தமிழ்ப் பாடல்கள்: தலைமுறைகள் கடந்த பயணம்
சிங்கப்பூரின் அதிகாரத்துவ மொழிகள் நான்காயினும், தேசிய ஒற்றுமையின் மொழியாக இசை ஒவ்வொரு தேசிய தினக் கொண்டாட்டத்திலும் போற்றப்பட்டு வருகிறது.
‘முன்னேறு வாலிபா’ முதல் ‘சிங்கை நாடு’ வரை பல தலைமுறைகளாகச் சிங்கப்பூர் மக்களின் மனங்களில் நிலைத்து நிற்கும் தமிழ்த் தேசியப் பாடல்கள், தேசிய உணர்வுக்கு வண்ணம் சேர்த்துள்ளன.
2012ஆம் ஆண்டு வெளிவந்த ‘சிங்கை நாடு’ எனும் பாடலின் வெற்றி முழுக்க முழுக்க மக்களால் வந்தது என்றார் பாடலின் இசையமைப்பாளரும் கலைஞருமான ஷபீர் சுல்தான்.
“எல்லா மொழியினரும் பாடக்கூடிய ‘முன்னேறு வாலிபா’ பாட்டுப் போன்ற தமிழையும் இசையையும் தேசிய உணர்வையும் பிரதிபலிக்க பாடல் வேண்டும் நினைத்தேன்,” என்று ‘சிங்கை நாடு’ பாடலை உருவாக்கியதன் பின்னணியை அவர் விளக்கினார்.
தற்போது, கிட்டத்தட்ட ஐந்து குறிப்பிடத்தக்க தேசிய தினத் தமிழ்ப் பாடல்கள் உள்ளன.
தமிழ் மொழியில் மேலும் பல தேசிய தினப் பாடல்களை உருவாக்க இதுதான் சரியான நேரம் என்று அவர் கருதுகிறார். அதேவேளையில், இதுபோன்ற பாடல்களுக்கு இசையமைப்பதில் உள்ள சவால்களையும் ஷபீர் விளக்கினார்.
‘சிங்கை நாடு’ பாடலுக்கான செலவைத் தாமே ஏற்றுக்கொண்டதைக் குறிப்பிட்ட ஷபீர், இத்தகைய பாடல்களை உருவாக்க “நாட்டின் மீதான பற்றுடன், திறமை, நிதி ஆகியனவும் வேண்டும்,” என்றார்.
தமிழில் வெளிவந்த அனைத்துத் தேசிய தினப் பாடல்களும் ஒவ்வொரு தலைமுறையைக் குறிக்கின்றன என்றார் உள்ளூர் இசைத் தயாரிப்பாளரும் இசையமைப்பாளருமான ‘ஷபீர் மியூசிக் ஆசியா’ அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி புவனேஸ்வரன் கணேசன்.
“ஒருவிதத்தில் பாடல் எழுதுவதில் அப்பாடல்கள் எனக்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன,” என்றார் அவர்.
பொதுவாக, மக்கள் ஒரு பாடல் தங்களுக்கு ஏற்படுத்தும் உணர்வுகளைக்கொண்டே அதன் சிறப்பைத் தீர்மானிக்கிறார்கள் என்றார் புவனேஸ்வரன். இசையை முழு நேரப் பணியாக அமைத்துக்கொள்ள வேண்டும் என்பது அவரது கனவு.
எதிர்கால தேசிய தினத் தமிழ்ப் பாடல்கள் சிங்கப்பூர் மக்களின் கனவுகளையும் குறிக்கோள்களையும் பிரதிபலிக்க வேண்டும் என்றார் அவர்.
புதிய தமிழ்த் தேசிய தினப் பாடல்களை உருவாக்க அடுத்த தலைமுறையினரில் அதிக திறமைமிக்கவர்கள் உள்ளனர் என்று ஷபீர் சுட்டிக்காட்டினார்.


