எதிர்பாரா திருப்பங்கள், ஆச்சரியமூட்டும் முடிவுகள் என 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் சுவாரசியமான ஒன்றாக முடிந்தது.
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றி, பலரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
இம்முடிவுகள் குறித்த சிங்கப்பூரர்களின் கருத்துகளைக் கண்டாராய்ந்தது தமிழ் முரசு.
சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத் தெற்காசிய கல்வித் துறையின் துணைத் தலைவர் டாக்டர் தாரிணி அழகிரிசாமி, “இந்த முடிவுகளை நான் நிச்சயம் எதிர்பார்க்கவில்லை. தவெக, அதிமுகவின் வாக்கு எண்ணிக்கையைக் குறைக்குமென எதிர்பார்த்தேன். ஆனால், தற்போது ஆட்சியில் இருக்கும் திமுகவைவிட அதிக வாக்குகள் பெறுமென சற்றும் எதிர்பார்க்கவில்லை,” என்று கூறினார்.
“ஊழல் போன்ற சில குறைபாடுகள் இருந்தாலும், திமுக அரசு சிறப்பாகச் செயல்பட்டதாகவே நான் உணர்கிறேன். திராவிட அரசியலை நிலைநிறுத்துவதிலும் திமுக சிறப்பாகப் பணியாற்றியதாகவே எனக்குத் தோன்றியது. இருப்பினும், இந்த முடிவுகள் வந்திருப்பதே ஆச்சரியம்,” என்றார் அவர்.
இந்த முடிவுகள் நிச்சயம் பாஜகவுக்குச் சாதகமானவை என்றும் இத்தனைக் காலம் நுழைய முடியாத மாநிலத்தில் புதிய தலைவர் வருவது அதன் வருகைக்கு வழிவகுக்க வாய்ப்புள்ளதென்றும் அவர் எண்ணுகிறார்.
திரைப்படக் கலாசாரமும் ஜனரஞ்சக அரசியலும் தமிழ்நாட்டின்மீது கொண்டுள்ள தாக்கத்தை இம்முடிவுகள் காட்டுவதாக அவர் கருதுகிறார்.
“இந்த முடிவுகளை எதிர்பார்க்காவிடிலும், விஜய் சாதனை படைத்துள்ளார் என்றே கூற வேண்டும்,” என்றார் இந்திய மரபுடைமை நிலையத்தின் தலைவர் ரா.ராஜாராம்.
தொடர்புடைய செய்திகள்
“பல்லாண்டு காலமாகத் தமிழ்நாட்டு அரசியலில் திமுக, அதிமுகவின் ஆதிக்கத்தை எந்த கட்சியும் நெருங்கியதில்லை. ஆனால், களமிறங்கிய இரண்டு, மூன்று ஆண்டுகளிலேயே இத்தகைய வெற்றி என்பது பாராட்டத்தக்கது,” என்று அவர் கூறினார்.
“முன்பு எம்.ஜி.ராமச்சந்திரன் நடிகராக இருந்து முதலமைச்சர் ஆகியிருந்தாலும், அவருக்கு பல்லாண்டு அனுபவம் இருந்தது. விஜய்க்கு அது இல்லை. இருப்பினும், மக்கள் அவரை ஏற்றுக்கொண்டுள்ளனர்,” என்றார் அவர்.
விஜய் வேறு சில கட்சிகளுடன் கூட்டணி அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் பட்சத்தில், அவர் எந்தக் கட்சிகளுடன் கூட்டணி அமைப்பார் என்பதைக் காண ஆவலுடன் இருப்பதாக அவர் கூறினார்.
தமிழ்நாட்டு மக்கள் முன்பு எம்.ஜி.ராமச்சந்திரனைத் தங்களது காப்பாளராகப் பார்த்தது போல தற்போது விஜய்யைப் பார்க்கிறார்கள் என எண்ணுகிறார் நிதி தொழில்நுட்பத் துறை ஊழியர் முஹம்மது ஷா, 39.
“சிங்கப்பூரர்கள் பலருக்கு தமிழ்நாட்டு மக்களுடன் நல்ல உறவு உள்ளது. அதைத் தொடர செய்ய விஜய் முயல்வது முக்கியம்,” என்று அவர் கூறினார்.
முன்னாள் மூத்த செய்தியாளரான 64 வயது ரமேஷ் சுப்புராமனும் இந்த வெற்றி எதிர்பாராததே என்றார்.
இந்த முடிவுகளுக்கு இளம் வாக்காளர்களே முக்கியக் காரணம் என்று அவர் கருதுகிறார்.
“தவெக சுனாமி, தமிழ்நாட்டைப் புரட்டிப் போட்டதற்குக் காரணம் நிச்சயம் இளையர்களே. ஆனால், விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றால், அவர் அறிமுகப்படுத்தும் திட்டங்களைக் கூர்ந்து கவனிப்பது அவசியம்,” என்றார் அவர்.
“தற்போது நடப்பில் இருக்கும் அரசுத் திட்டங்களின் பணிகளை நிறைவு செய்வது, சமய சார்பற்ற அரசியல் கொள்கைகளையும் திட்டங்களையும் அறிமுகப்படுத்துவது போன்றவற்றில் அவர் கவனம் செலுத்த வேண்டும்,” என்றார் அவர்.
சிங்கப்பூருக்கும் தமிழ்நாட்டுக்குமிடையே முன்பு கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தங்களையும் திட்டங்களையும் நிலைநிறுத்தும் பொறுப்பும் விஜய்க்கு உள்ளதென திரு ரமேஷ் கருதுகிறார்.
திராவிட மொழியான தமிழைக் காக்க திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என எண்ணிய 45 வயது சீனிவாசன் காமாட்சிக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
“அரசியல் அனுபவமே இல்லாத ஒருவர் வெற்றி பெற்றிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
“ஆனால், இம்முடிவுகளின்வழி இளையர்களின் குரல் ஓங்கி ஒலித்துள்ளது. திரைப்படங்களின் மோகம் ஒரு பக்கம் இருக்க, மாற்றம் வேண்டுமென்ற அவர்களது எண்ணம் அவர்களது வாக்குகளின்வழி வெளிவந்துள்ளது,” என்றார் அவர்.
இது எதிர்பாரா முடிவாக இருந்தாலும், வரவேற்கத்தக்க முடிவு எனக் கருதுகிறார் லிஷா அமைப்பின் செயலாளர் ருத்ரா கண்ணன், 56.
“நீண்ட காலமாக ஆட்சி புரிந்து வந்த இரு கட்சிகள் மீதான மக்களின் ஆதங்கத்தை இம்முடிவுகள் வெளிக்கொணர்ந்துள்ளன. இந்த வாக்குகள் விஜய்க்கு ஆதரவானவை மட்டுமல்ல, மற்ற இரண்டு கட்சிகளுக்கும் எதிரானவையும்கூட,” என்று அவர் கூறினார்.
தற்போது தமிழ்நாட்டில் நிலவும் ஊழல் சார்ந்த பிரச்சினைகளின்மீது விஜய் கவனம் செலுத்துவது சிறப்பாக இருக்குமென அவர் எண்ணுகிறார்.
“இன்றும் நம்மில் பலர் இந்தியாவிற்குக் குடும்ப உறுப்பினர்களைச் சந்திக்க பயணம் மேற்கொண்டு வருகிறோம். அங்கிருக்கும் பிரச்சினைகளால் அவ்வப்போது பாதிக்கப்படுவதும் உண்டு. அவற்றைச் சீர்செய்தால், அங்கு செல்வது விரும்பத்தக்கதாக இருக்கும்,’ என்று திரு ருத்ரா குறிப்பிட்டார்.
தானும் இம்முடிவுகளை எதிர்பார்க்காததாகப் பகிர்ந்துகொண்டார் அபிநவ் பரணிதரன், 19.
“நான் இந்தியாவிலிருக்கும் எனது உறவினர்களுடன் பேசுகையில், திமுக செய்து வந்த தேர்தல் பிரசாரங்கள், முயற்சிகள் குறித்து அவர்கள் விவரித்ததைக் கேட்டு நிச்சயம் அக்கட்சிதான் வெல்லுமென நினைத்தேன். ஆனால், தவெக வென்றுள்ளது ஆச்சரியமளிக்கிறது,” என்று அவர் கூறினார்.
முடிவுகள் ஆச்சரியமளித்தாலும் மகிழ்ச்சியளிக்கின்றன என்று கூறினார் சுவேதா நாடி பிரபாகரன், 19.
“இளையர்கள், பெண்கள் இம்முறை அதிகம் வாக்களித்திருப்பது முடிவுகளின்வழி தெரிந்துகொள்ள முடிகிறது,” என்று அவர் கூறினார்.
தீவிர விஜய் ரசிகரான ராஜ்குமார் கீதா, 48 ,“எனக்கு விஜய் வெற்றிபெற வேண்டுமென்ற ஆசை இருந்தபோதும், நம்பிக்கை இல்லை,” என்று கூறினார்.
“நான் தமிழ்நாட்டிலிருக்கும் என் உறவினர்களுடன் பேசுகையில், அவர்கள் தவெகவை பெரிதாகப் பொருட்படுத்தவில்லை. ஆனால், இப்போது அவர் வென்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது,” என்றார் அவர்.
விஜய்யின் அனுபவமின்மையை ஈடுசெய்ய அனுபவமிக்கவர்களைத் தன்னுடன் இணைத்துக்கொள்வது அவசியமென அவர் கருதுகிறார்.
எதிர்க்கட்சிகளும் அவரை எளிதாக ஆட்சிசெய்ய அனுமதிக்க மாட்டார்கள் என்று அவர் எண்ணுகிறார்.
“சவால்களைக் கடந்து, விஜய் எப்படி ஆட்சி செய்வார், எத்தகைய திட்டங்களை முன்வைப்பார் என்பதைக் காண ஆவலாக உள்ளேன்,” என்று அவர் கூறினார்.
பலரும் முடிவுகளை எதிர்பார்க்காத நிலையில், இம்முடிவுகள் தமக்குப் பேராச்சரியம் அளிக்காததாகக் கூறினார் சோலாரிஸ் ஸ்ட்ரேட்டஜிஸ் நிறுவனத்தின் மூத்த அனைத்துலக விவகார ஆய்வாளர் முஸ்தபா இஸ்ஸுதீன்.
“மாற்றம் வரப்போவதை முன்னரே உணர முடிந்தது. 234 தொகுதிகளிலும் ஒரு புதிய கட்சி வேட்பாளர்களைக் களமிறக்கியது அசாதாரணமான செயல்,” என்றார் அவர்.
ஜனநாயகம் என்பது ஓர் இருமுனை கத்தி என்பது இம்முடிவுகள்வழி புலப்பட்டுள்ளதாக அவர் உணர்கிறார்.
“திரைப்படங்கள், அரசியல் மீதும் வாக்காளர்கள் மீதும் கொண்டுள்ள தாக்கத்தை இம்முடிவுகள் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. ஒரு நடிகருக்கு முதல் தேர்தலிலேயே வெற்றி அளிப்பது என்பது மிகப் பெரிய காரியம்,” என்றார் அவர்.
“நல்ல நடிகர்கள் அனைவரும் நல்ல அரசியல் தலைவர்களாகிவிட முடியாது. இது அவருக்கு ஒரு நல்வாய்ப்பு. அதை அவர் எவ்வாறு பயன்படுத்திக்கொள்வார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்,” என்று கூறினார் திரு முஸ்தபா.
விஜய்யின் அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் தமிழ்நாட்டு மக்களுடன் சிங்கப்பூர் தமிழர்களும் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

