தமிழ்நாட்டின் புகழ்பெற்ற கூத்தபிரான் நவபாரத் தியேட்டர்ஸ் நாடகக் குழு தனது இரண்டு பிரபல நாடகங்களைச் சிங்கப்பூரில் மேடையேற்ற உள்ளது.
மே 17ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவிலின் பிஜிபி மண்டபத்தில் அந்நிகழ்ச்சி நடைபெறும்.
சிங்கப்பூர் மண்ணில் தமிழ் நாடகக் கலைக்குப் புத்துயிர் ஊட்டுவதோடு, தமிழ் கலாசாரத்தின் விழுமியங்களை அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் உயரிய நோக்கோடு இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
14 கலைஞர்கள் உட்பட 17 பேர் கொண்ட குழுவினர் இந்நிகழ்ச்சிக்காகச் சிங்கப்பூருக்கு வருகையளிக்கவுள்ளனர்.
அவர்கள் படைக்கவிருக்கும் இரு நாடகங்களும் பொதுமக்களுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகின்றன.
ஒட்டுமொத்த நிகழ்விற்கான நிதியுதவியை தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் நீலமணி அறக்கட்டளை முழுமையாக ஏற்றுள்ளது. ஒருங்கிணைப்புப் பணிகளைச் சிங்கப்பூரின் மாஸ்க் ஸ்டூடியோஸ் நிறுவனம் மேற்கொள்கிறது.
ஒரே நாளில் இரு வேறு அனுபவங்கள்
இரு நாடகங்களும் மாலை 4 மணி, இரவு 7 மணியென இரு வேறு காட்சிகளாக அரங்கேறவுள்ளன. ஒவ்வொரு நாடகமும் கிட்டத்தட்ட 90 நிமிடங்கள் நீடிக்கும் கலை விருந்தாக அமையும்.
மாலை 4 மணிக்கு முதல் நாடகமான ‘சுருக்குப் பை’ மேடையேறும்.
தொடர்புடைய செய்திகள்
பாட்டி புதையலெனப் பாதுகாக்கும் சுருக்குப்பையை பேரன் எடுத்துச் செல்வதால் ஏற்படும் சவால்களையும் அதன் பின்னணியில் உள்ள மர்மங்களையும் நகைச்சுவை கலந்த இந்தக் குடும்பக் கதை சித்தரிக்கும்.
கூத்தபிரான் நவபாரத் தியேட்டர்ஸ் குழுவின் தலைவர் ரத்னம் கூத்தபிரானின் கதை, வசனத்தில் உருவாகியுள்ள இந்த நாடகத்தை, அவரது மகன் விக்னேஷ் இயக்கியுள்ளார். குறிப்பாக, மூத்த தலைமுறையினரின் மனத்தைத் தொடும் வகையில் இந்நாடகம் அமையும்.
இரு நாடகங்களுக்கு இடையே ஒரு சிறிய இடைவேளை இருப்பதால், பார்வையாளர்களுக்குச் சிற்றுண்டிகள் வழங்கப்படும்.
இரவு 7 மணிக்கு அடுத்த நாடகமான ‘லீலா வினோதம்’ படைக்கப்படும்.
தேயிலைத் தோட்ட முதலாளி எதிர்கொள்ளும் வினோத நிகழ்வுகளையும் அதைத் துப்பறியும்போது எழும் சிக்கல்களையும் எடுத்துரைக்கும் திகில் கலந்த நவீன நாடகமாக இது விளங்கும்.
இந்த நாடகத்தின் கதையை எழுதி விக்னேஷ் இயக்க, ரத்னம் கூத்தபிரான் வசனங்களை அமைத்துள்ளார்.
ஒளியுமிழ் இருமுனையக் காட்சித் திரைகள் (LED Screens) போன்ற நவீன தொழில்நுட்பத்தோடு படைக்கப்படும் இந்நாடகம் இளையர்களைப் பெரிதும் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“அனைத்து வயதினரையும் ஈர்க்கும் வகையில் இரு வேறு பாணியிலான நாடகங்களைத் தேர்ந்தெடுத்துள்ளோம்” என்று ஏற்பாட்டாளர்களுள் ஒருவரான திரு வா சுப்ரமணியன், 55, தெரிவித்தார்.
கலைத் தாகம் நிறைந்த சமூகப் பொறுப்பு
தமிழ்நாட்டில் ஏறத்தாழ 50 முறை மேடையேற்றப்பட்ட இந்த நாடகங்களைச் சிங்கப்பூர் மக்களும் ரசிக்க வேண்டும் என்ற நோக்கில் திரு நீலமணி முத்துகுமார், திரு சுப்ரமணியன் ஆகிய இருவரும் இணைந்து இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளனர்.
தமிழ்நாட்டின் கோடை நாடக விழாவில் பல விருதுகளை வென்ற இவ்விரு நாடகங்களின் சிறப்பைக் கண்ட திரு சுப்ரமணியன், இந்த உன்னதத்தை வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களும் உணர வேண்டும் என்று எண்ணினார்.
2017ஆம் ஆண்டு திரு நீலமணி முத்துகுமாரால் தொடங்கப்பட்டது நீலமணி அறக்கட்டளை. கலை மற்றும் பண்பாட்டைப் பாதுகாப்பதே வருங்காலத்திற்கான சிறந்த முதலீடு என நம்பும் இவ்வமைப்போடு இணைந்து சிங்கப்பூரில் இந்நாடகங்களை மேடையேற்ற முடிவெடுத்தார் திரு சுப்ரமணியம்.
மூன்று தலைமுறைப் பாரம்பரியம்
இந்த இரு நாடகங்களையும் புகழ்பெற்ற கூத்தபிரான் நவபாரத் தியேட்டர்ஸ் நாடகக் குழுவினர் வழங்குகின்றனர்.
அனைத்திந்திய வானொலியில் ‘வானொலி அண்ணா’ என்று அன்போடு அழைக்கப்பட்ட கலைமாமணி கூத்தபிரானால் 1985ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது இந்த நாடகக் குழு.
இன்று அவரது மகன் ரத்னம் கூத்தபிரான், பேரன் விக்னேஷ் என மூன்று தலைமுறைகளைத் தாண்டியும் தமிழ் நாடகத் துறைக்கு இக்குழுவினர் ஆற்றி வரும் தொண்டு மகத்தானது.
சமூகக் கருத்துகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பாலமாக நாடகக் கலை விளங்குகிறது என்ற ஆழந்த நம்பிக்கையோடு இக்குழு 40 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது.
லாப நோக்கமின்றி வெறும் கலை ஆர்வத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு சிங்கப்பூரின் தமிழ் மக்களுக்காக இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வெற்றி கண்ட இந்தத் தரமான நாடகங்கள் சிங்கப்பூர் தமிழ் மக்களையும் கலை ஆர்வலர்களையும் வெகுவாக ஈர்க்கும் என்பதே ஏற்பாட்டாளர்களின் நம்பிக்கை.
இந்த நாடகங்களைக் காண அனுமதி இலவசம் என்றாலும் முன்பதிவு அவசியம்.

