பண்பாட்டுக் கூறுகளைச் சுவைவழியாகப் பலருக்கு வழங்கி மகிழ்வித்தது, பொங்கோல் வட்டாரத்தில் சென்ற மாதம் (ஏப்ரல்) 26ஆம் தேதி நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு நிகழ்ச்சி.
‘ரசிப்போம் ருசிப்போம் 2026 - இந்திய உணவுத் திருவிழா’ எனும் அந்த நிகழ்ச்சியைப் பொங்கோல் 21 சமூக மன்றத்தின் இந்திய நற்பணிச் செயற்குழு ஏற்பாடு செய்திருந்தது.
பல்வேறு உணவு வகைகளுடன் விறுவிறுப்பான நடனங்களும் நிகழ்ச்சியில் இடம்பெற்றன.
கோழி பிரியாணி, கத்தரிக்காய் பிரியாணி, சுஃபியான் சைவ பிரியாணி, பானி பூரி, ஆலு டிக்கி போன்ற பிரபலமான ‘சாட்’ வகைகள், பாரம்பரிய இனிப்புப் பலகாரங்கள் எனப் பலதரப்பட்ட இந்திய உணவு வகைகளைக் குடியிருப்பாளர்கள் சுவைத்தனர்.
இந்த உணவுத் திருவிழா, சிறப்பான பண்டிகை உணர்வைத் தந்ததோடு, உணவுப் பரிமாற்றத்தின் வழியாகச் சமூகப் பிணைப்பையும் ஊக்குவித்தது.
இந்திய மரபுகளையும் பாரம்பரியங்களையும் அனுபவிக்கும் வகையில், பல்வேறு பின்னணிகளைச் சேர்ந்த குடியிருப்பாளர்களைக் கொண்டாட்டம் ஒன்றிணைத்தது.
பொங்கோல் ஷோர் அடித்தள அமைப்புகளின் ஆலோசகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருவாட்டி இயோ வான் லிங் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
பாரம்பரிய நடனப் படைப்புகள், விளையாட்டுகள் எனத் துடிப்பான கலாசார அம்சங்களும் நிகழ்ச்சியில் இடம்பெற்றன.
தொடர்புடைய செய்திகள்
சிறியவர் முதல் பெரியவர் வரை அனைத்து வயதுப் பிரிவினரிடமும் இவற்றுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்தது. நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக அமைந்த ‘சிறந்த பாரம்பரிய உடை’ போட்டியில், இந்தியப் பாரம்பரிய உடைகளின் அழகையும் பன்முகத்தன்மையையும் குடியிருப்பாளர்கள் வெளிப்படுத்தினர்.
மரக்கட்டைகளைப் பயன்படுத்தும் இந்தியப் பாரம்பரியத் தற்காப்பு, உடற்பயிற்சிக் கலையான ‘கர்லா கட்டை’யைச் சுழற்றுவது தொடர்பான விளக்கம், பலரின் பாராட்டைப் பெற்றது.
குடும்பங்களில் தலைமுறை தலைமுறையாகப் பின்பற்றப்பட்ட கர்லா கட்டையைப் பற்றிப் பகிர்வதற்கு நிகழ்ச்சி நல்ல வாய்ப்பை அளித்ததாகக் கூறினார் அதனைச் செய்துகாட்டிய பிரவின் ராஜேந்திரன் பிள்ளை.
உடல் வலிமை, ஒருங்கிணைப்பு, சகிப்புத்தன்மை ஆகியவற்றைக் கர்லா கட்டைப் பயிற்சி மேம்படுத்துவதாகக் கூறப்படுகிறது.
சீனர், இந்தியர், ஜப்பானியர் எனப் பலதரப்பட்ட பின்னணிகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட 150 குடியிருப்பாளர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். அனைவரையும் உள்ளடக்கும் வகையில் பண்பு, கலாசாரம், சமூக நல்லிணக்கம் ஆகியவற்றைப் போற்றும் நோக்கத்துடன் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாகக் கூறினார் பொங்கோல் 21 சமூக மன்ற இந்திய நற்பணி செயற்குழுத் தலைவர் கெளரி சுப்பிரமணியம்.

