மாணவர்களிடம் தமிழ் ஆர்வத்தையும் பற்றையும் விதைத்து, அவர்களுக்குப் பிழையற தமிழ் எழுதக் கற்றுத்தரும் நோக்கத்துடன் தமிழ் முரசு நாளிதழும் கவிஞர் மகுடேசுவரன் மாணவர் பாசறை (சிங்கப்பூர்) அமைப்பும் இணைந்து தமிழ்ப் பயிலரங்கு ஒன்றை நடத்தவிருக்கின்றன.
உயர்நிலை 3, 4 மற்றும் தொடக்கக் கல்லூரி மாணவர்களுக்கான ‘நல்ல தமிழ் எழுதுவோம்’ என்ற தலைப்பிலான அப்பயிலரங்கு ஜூலை 11ஆம் தேதி சனிக்கிழமை காலை மணி 10 முதல் பிற்பகல் மணி 12.30 வரை, தோ பாயோ நார்த்தில் அமைந்துள்ள எஸ்பிஎச் நியூஸ் சென்டர் கட்டடத்தில் நடைபெறும்.
கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர், திரைப்படப் பாடலாசிரியர் எனப் பன்முகத் திறனாளராகத் திகழ்ந்துவரும் கவிஞர் மகுடேசுவரன், தமிழ்நாட்டிலிருந்து வருகைதந்து மாணவர்களுக்குத் தமிழ் கற்றுத்தர இருக்கிறார்.
கவிதை, கட்டுரை, இலக்கணம் என இதுவரை ஐம்பதிற்கும் மேற்பட்ட நூல்களை இவர் எழுதியிருக்கிறார்.
குறிப்பாக, தமிழ்மீதான ஆர்வம் குறைந்துவரும் சூழலில், இளந்தலைமுறையினர்க்கு தமிழ் இலக்கணத்தின் அடிப்படைகளைக் கொண்டுசேர்த்து, அவர்கள் தமிழில் தேர்ச்சிமிக்கவர்களாக விளங்குவதற்கு இவர் பெருமுயற்சி எடுத்து வருகிறார்.
அவ்வகையில், ‘தமிழ் அறிவோம்’ என்ற நூல் வரிசையில் இதுவரை அவர் வெளியிட்டுள்ள 15 நூல்கள் தமிழ் ஆர்வலர்களிடம் பெருவரவேற்பைப் பெற்றுள்ளன.
இணையம் வழியாக இவர் நடத்திவரும் தமிழ் வகுப்புகளில் உலகெங்கிலும் இருந்தும் பலர் ஆர்வத்தோடு இணைந்து தமிழ் கற்றுத் தெளிகின்றனர்.
மாணவர்களுக்கு மட்டுமன்றி, பள்ளி, கல்லூரித் தமிழாசிரியர்களுக்கும் இவர் அவ்வப்போது பயிற்சிகளை நடத்தி வருகிறார்.
தமிழ் முரசு நடத்தும் பயிலரங்கில் மாணவர்கள் கலந்துகொள்ள கட்டணம் ஏதுமில்லை. குறைவான இடங்களே இருப்பதால் முதலில் பதிவுசெய்வோர்க்கே முன்னுரிமை அளிக்கப்படும். நண்பகல் உணவுண்டு.
பயிலரங்கில் கலந்துகொள்ள விரும்புவோர் https://forms.gle/f8apjap7y6Q2Uow56 எனும் கூகல் படிவம் வழியாகப் பதிவுசெய்து கொள்ளலாம்.

