‘இளமை’ துடிப்புடன் தமிழ் இளையர் விழா 2025

4 mins read
d98d8efe-cdc9-407c-aa86-289da479e83b
‘இளமை’ எனும் கருப்பொருளின் அடிப்படையில் இவ்வாண்டின் இளையர் விழா பல நிகழ்ச்சிகளை வழங்கும்.  - படம்: வளர்தமிழ் இயக்கம் 

வளர்தமிழ் இயக்கம் ஐந்தாவது முறையாக தமிழ் இளையர் விழாவை இவ்வாண்டு நடத்தவிருக்கிறது.

‘இளமை’ எனும் கருப்பொருளின் அடிப்படையில் இவ்வாண்டின் இளையர் விழா செப்டம்பர் 6ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை பல நிகழ்ச்சிகளை வழங்கும்.

கலை, பண்பாடுவழி தமிழைப் போற்றுவது தவிர செயற்கை நுண்ணறிவு, உயிரோவியம்வழி தமிழ் கற்றலை இளையர்களிடம் கொண்டுசேர்க்கும் நோக்கத்தில் இவ்வாண்டின் இளையர் விழா நிகழ்ச்சிகள் அமைந்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாண்டு இளையர் விழாவில் மொத்தம் 12 பங்காளி அமைப்புகள் 12 நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளன. அவற்றில் ஐந்து அமைப்புகள் புதிய பங்காளிகள்.

அனைத்து நிகழ்ச்சிகளும் 35 வயதுக்குட்பட்ட இளையர்கள், மாணவர்களை இலக்காகக் கொண்டு தமிழில் படைக்கப்படும்.

நிகழ்ச்சிகள் அனைத்தும் இளையர்களால் இளையர்களுக்கு படைக்கப்படும் என்று வளர்தமிழ் இயக்கத்தின் தலைவர் நசீர் கனி தமிழ் முரசிடம் கூறினார்.

“ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் நடைபெறும் தமிழ்மொழி மாத நிகழ்ச்சிகள் பெரும்பாலும் இளையர்கள் முதல் முதியவர்கள்வரை ஒரு பெரிய மக்கள் தளத்தை உள்ளடக்கும். ஆனால், இளையர் விழா நிகழ்ச்சிகள், குறிப்பாக இளையர்களிடையே தமிழ்மொழிப் பயன்பாட்டை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது,” என்றார்.

பழங்கால மொழி, இக்கால வழி 

மின்னிலக்கம், செயற்கை நுண்ணறிவு, கேலிச்சித்திரம்வழி தமிழை ஊக்குவிக்கும் நிகழ்ச்சிகளை எதிர்பார்க்கலாம்.

செப்டம்பர் 6ஆம் தேதி (சனிக்கிழமை) ‘தமிழ் வளர்ச்சியில் இளைையர்களின் பங்கு’ என்ற மொழிபெயர்ப்புப் போட்டிக்கும் காணொளி தயாரிப்புப் போட்டிக்கும் பெரியார் சமூக சேவை மன்றம் (சிங்கப்பூர்) ஏற்பாடு செய்துள்ளது.

‘எடுவில்’ கற்றல் நிறுவனத்தின் ஏற்பாட்டில் ‘மின்வழி தமிழ்மொழி!’ எனும் விறுவிறுப்பூட்டும் மின்னிலக்க விளையாட்டுகள்வழி தமிழ் சார்ந்த போட்டிகள் இடம்பெறும். 
‘எடுவில்’ கற்றல் நிறுவனத்தின் ஏற்பாட்டில் ‘மின்வழி தமிழ்மொழி!’ எனும் விறுவிறுப்பூட்டும் மின்னிலக்க விளையாட்டுகள்வழி தமிழ் சார்ந்த போட்டிகள் இடம்பெறும்.  - படம்: சஞ்சய் முத்துகுமரன்

‘எடுவில்’ கற்றல் நிறுவனத்தின் ஏற்பாட்டில் ‘மின்வழி தமிழ்மொழி!’ எனும் விறுவிறுப்பூட்டும் மின்னிலக்க விளையாட்டுகள்வழி தமிழ் சார்ந்த போட்டிகள் இடம்பெறும்.

இந்தப் போட்டிகள் உயர்நிலை ஒன்று, இரண்டாம் நிலைகளில் பயிலும் மாணவர்களின் வாசிப்பு, எழுதுதல், கேட்டல், பேச்சுத்திறன்களைக் கையாளும்.

அதே நாளன்று ‘செந்தமிழ் உலகில் செயற்கை நுண்ணறிவு’ பயிலரங்கும் நடைபெறும். புத்தாக்க இந்தியக் கலையகத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்ச்சி தமிழ்க் கலைகளையும் இலக்கியத்தையும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் ஒருங்கிணைக்கும்.

‘கிரியேட்டிவ் ஹேண்ட்ஸ்’ நிறுவனத்தின் ஏற்பாட்டில் செப்டம்பர் 13ஆம் தேதி (சனிக்கிழமை) ‘கதை நேரம்’ எனும் மூன்று நாள் உயிரோவியப் பயிலரங்கு இடம்பெறும். அதில், தமிழில் உயிரோவியக் காணொளிகளை உருவாக்கும் நுணுக்கங்களை இளையர்கள் கற்றுக்கொள்வர்.

தமிழ் மரபைப் பறைசாற்றும் பணி 

நவீன முறையில் தமிழார்வத்தைத் தூண்டுவதோடு மரபை விட்டுக்கொடுக்காத வகையில் இயல், இசை, நாடக நிகழ்ச்சிகளும் இடம்பெறும்.

‘இளம் சிறகுகள்’ எனும் பயிலரங்கு நடனம், கதை சொல்லுதல், கலை நுணுக்கங்களைப் பயன்படுத்தி, குறவஞ்சி மரபின் செழுமையை பாலர் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தும்.
‘இளம் சிறகுகள்’ எனும் பயிலரங்கு நடனம், கதை சொல்லுதல், கலை நுணுக்கங்களைப் பயன்படுத்தி, குறவஞ்சி மரபின் செழுமையை பாலர் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தும். - படம்: ஐஸ்வரியா சுந்தர்

இவ்வாண்டின் இளையர் விழாவில் சேர்ந்துள்ள புதிய பங்காளிகளில் ‘சிறகுகள்’ நடன அமைப்பும் ஒன்று.

‘இளம் சிறகுகள்’ எனும் பயிலரங்கு நடனம், கதை சொல்லுதல், கலை நுணுக்கங்களைப் பயன்படுத்தி, குறவஞ்சி மரபின் செழுமையை பாலர் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தும் என்று அவ்வமைப்பின் நிறுவனர் ஐஸ்வரியா சுந்தர், 35, கூறினார்.

“தமிழ், கலை, பண்பாடு மீதுள்ள ஆர்வம், அதன்வழி தன்னம்பிக்கை, மகிழ்ச்சி போன்றவற்றை பிள்ளைகள் கற்றுக்கொள்வர்,” என்றார் அவர்.

இந்த பயிலரங்கு செப்டம்பர் 13ஆம் தேதி நடைபெறும்.

சிங்கப்பூரின் உள்ளூர் எழுத்தாளர்களை பறைச்சாற்றி, சிறார் தமிழ் இலக்கியத்தை ஆராயும் நோக்கில், ‘கிரியேட்எஸ்ஜி’ அமைப்பு ஏற்பாடு செய்யும் ‘எழுத்தாளர் தினம்’ செப்டம்பர் 7ஆம் தேதி நடைபெறும். தமிழ் எழுத்தாளர்களுடன் தமிழ்க் கதைப் புத்தகங்களின் மேம்பாடு மற்றும் கல்வி வளங்கள் குறித்த சிந்தனையைத் தூண்டும் கலந்துரையாடலை எதிர்பார்க்கலாம்.

செப்டம்பர் 8ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை ‘மந்திரத் தூரிகை’ எனும் நான்கு நாள் நாடகப் பட்டறை நடைபெறும். தமிழில் தழுவப்பட்ட ஒரு சீனக் கதையை ஆராயும் நாடக படைப்பு பட்டறைக்கு ‘அகம்’ நாடகக் குழு ஏற்பாடு செய்துள்ளது.

நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர்கள் இளையர்களுக்காக ‘இளஞ்சுடர்’ எனும் பல்வேறு மொழி சார்ந்த விளையாட்டுகளுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். கதை சொல்லுதல், நடனம், நாடகம், மாறுவேடம் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் இந்த நிகழ்ச்சி செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெறும்.

அதே நாளில் ‘கலாபம் : இசையில் இளமை’ எனும் பாட்டுப் போட்டிக்கு சக்தி நுண்கலைக்கூடம் ஏற்பாடு செய்துள்ளது. பங்குபெறும் உயர்நிலை, கல்லூரி மாணவர்கள் 1980ஆம் ஆண்டு முதல் இவ்வாண்டு வரை வெளியிடப்பட்ட தமிழ் பாடல்களைப் பாட வேண்டும்.

‘தத் வம் சி’ நிறுவனம் செப்டம்பர் 14ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ‘ஒரு கதை சொல்லவா?’ எனும் நிகழ்ச்சிமூலம் ஒரு நாடகத் தயாரிப்பை வழிநடத்தும்.

கடந்த ஆண்டின் ‘சொற்கனல்’ விவாத மேடையில் வாகை சூடிய சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக மாணவர்கள். 
கடந்த ஆண்டின் ‘சொற்கனல்’ விவாத மேடையில் வாகை சூடிய சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக மாணவர்கள்.  - படம்: சிங்கைத் தமிழ்ச் சங்கம்

அதே நாளில், சிங்கைத் தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் மூன்றாவது ஆண்டாக அரங்கேறவுள்ளது ‘சொற்கனல்’ விவாதக் களம். இந்த நிகழ்ச்சியில் பல்கலைக்கழக மாணவர்கள் ஒரே தலைப்பில், ஒரே மேடையில் மின்னிலக்கக் காட்சிக் கருவிகளைப் பயன்படுத்தி தங்கள் விவாதங்களை முன்வைப்பர்.

மீடியாகார்ப் தமிழ்ச்செய்தி, நடப்பு விவகாரப் பிரிவின் ஏற்பாட்டில் புதிதாக இவ்வாண்டு இளையர் விழாவில் ‘சுவடுகள்: செய்தியின் 60 ஆண்டுப் பயணம்’ எனும் நிகழ்ச்சியும் செப்டம்பர் 14ஆம் தேதி இடம்பெறும்.

தொலைக்காட்சி, வானொலிச் செய்திகள்வழி தமிழ்மொழியின் பரிணாம வளர்ச்சியை விவரிக்கும் ஓர் ஆவணப்படம் காட்சிப்படுத்தப்படும். அத்துடன், இளையர்களுடனான உரையாடல் அங்கமும் நடைபெறும்.

தமிழ் இளையர் விழா நிகழ்ச்சிகள் பற்றிய மேல்விவரங்களுக்கு www.tamil.org.sg எனும் இணையத்தளத்தை நாடலாம்.

குறிப்புச் சொற்கள்