ரமலான் மாதம் வந்துவிட்டால் அன்றாடம் சிங்கப்பூரின் பள்ளிவாசல்களில் கமகமக்கும் வாசத்துடன் ‘நோன்புக் கஞ்சி’ தயாராக இருப்பது வழக்கம்.
இது வெறும் உணவாக மட்டுமல்லாமல் பல்லின மக்கள் வாழும் தீவில் ஒற்றுமையையும் ஈகையையும் பறைசாற்றும் அடையாளமாகவும் திகழ்கிறது.
நோன்புக் கஞ்சி விநியோகம் லிட்டில் இந்தியா பகுதியில் அமைந்துள்ள அப்துல் கஃபூர் பள்ளிவாசலில் மாலை 5.30 மணிக்கே தொடங்கிவிடுகிறது.
“சுமார் 1,000 கஞ்சிப் பொட்டலங்கள் தயார் செய்யப்பட்டு, 20 நிமிடத்திற்குள் அனைத்தும் விநியோகிக்கப்பட்டு விடுகின்றன,” என அந்தப் பள்ளிவாசல் நிர்வாகி இத்ரீஸ் கமால், 45, குறிப்பிட்டார்.
அங்கூலியா பள்ளிவாசலில் வார இறுதிகளில் கூட்டம் களைகட்டுகிறது.
“தொடக்கத்தில் 600 பேருக்குத் திட்டமிட்டிருந்தாலும் தற்போது சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் 2,500 முதல் 3,000 பேர் வரை பள்ளிவாசலுக்கு வருகை தருகின்றனர்,” என்கிறார் அதன் துணை நிர்வாகி ஃபாரூக் அஹமது, 32.
“ஜாமியா சூலியா பள்ளிவாசல் அமைந்துள்ள பகுதி அலுவலகங்கள் நிறைந்த இடம் என்பதால் வேலை முடிந்து வருபவர்கள், ரயிலில் வருபவர்களின் கூட்டம் இரவு 7:00 மணியளவில் அலைமோதும்” என்றார் அதன் செயலாளர் முஜ்ஜம்மில், 46.
“பென்கூலன் பள்ளிவாசலில் எங்கள் பகுதி மக்கள் மட்டுமின்றி, மலாய், சீன முஸ்லிம்களும் பங்ளாதேஷ் சகோதரர்களும் இங்கு வந்து நோன்பு துறக்கின்றனர்,” என்று பகிர்ந்தார் அதன் தலைவர் ஹாஜி மு யூ முகம்மது ரஃபீக், 61.
தொடர்புடைய செய்திகள்
ஜாமியா சூலியா பள்ளிவாசலில் உணவைக் கையாளக் கடுமையான சுகாதாரக் கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுகின்றன.
“இந்த ஆண்டு சமையல் செய்வதற்காக இந்தியாவில் இருந்து அதிகமானோரை வரவழைத்துள்ளோம். சிங்கப்பூர் உணவுச் சுகாதாரத் தரத்தின்படி சான்றிதழ் பெற்றவர்கள் மட்டுமே உணவைக் கையாள அனுமதிக்கப்படுகிறார்கள்,” என ஜாமியா சூலியா பள்ளிவாசலின் செயலாளர் முகமது சர்ஜூன் கூறுகிறார்.
பென்கூலன் பள்ளிவாசலின் தாரக மந்திரம் “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்பதுதான்.
பல்வேறு சமய அமைப்புகளும் இணைந்து செயல்படுவது சிங்கப்பூரின் தனிச்சிறப்பாக உள்ளது.
“இந்து அறக்கட்டளை வாரியம், பெருமாள் கோயில் சார்பில் பேரீச்சம்பழங்களையும் மற்றப் பழங்களையும் வழங்கி உதவி செய்கின்றனர்,” எனத் திரு ஃபாரூக் அஹமது நெகிழ்ச்சியுடன் கூறினார்.
“2,100 பேருக்கு, ஒரு பெட்டியில் மூவர் உண்ணும் வகையில் நானூறு பெட்டிகளில் அடைத்து வைப்போம்; அதனைப் பொதுமக்கள் இல்லங்களுக்கு எடுத்துச்செல்வார்கள்,”
“எஞ்சிய ஆயிரம் பேருக்குரிய உணவை, நம் பள்ளிவாசலில் நோன்பு துறக்கவரும் சகோதர சகோதரிகளுக்கு வழங்குகிறோம்,”
“அதில் முதன்மையாகப் பலவகை நவதானியங்களைச் சேர்க்கிறோம். அதனால் அது உடலுக்குக் குளிர்ச்சியையும் வலுவையும் தருகிறது,” என்கிறார் ஹாஜி மு யூ முகம்மது ரஃபீக்.

