தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆங்கிலத்தைச் சிறப்பாகக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு விருது

2 mins read
402b38e2-9e91-43bd-ba99-fc4e693fe4de
அமைச்சர் டெஸ்மண்ட் லீயிடமிருந்து (வலது) ஆங்கில மொழிக்கான நல்லாசிரியர் விருது பெற்ற திருவாட்டி உமா ராமகிருஷ்ணன் ஜேக்கப். உடன் ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ செய்தித்தாள் ஆசிரியர் ஜேமி ஹோ (இடக்கோடி). - படம்: அனுஷா செல்வமணி

அன்றாட வாழ்க்கையில் நடக்கும் விவகாரங்களை மாணவர்கள் கல்வி மூலம் அறிய வேண்டும் என்பது திருவாட்டி உமா ராமகிருஷ்ணன் ஜேக்கப்பின் கற்றல் முறைகளில் ஒன்று.

மாணவர்களின் விமர்சனச் சிந்தனையைத் தூண்ட கலந்துரையாடல்கள், பொது ஆலோசனைகள் போன்றவற்றை நடத்துகிறார் திருவாட்டி உமா, 39.

கடந்த 12 ஆண்டுகளாக ஆங்கில ஆசிரியராக இருக்கும் அவர், சிஎச்ஐஜே செயிண்ட் நிக்கலஸ் பெண்கள் பள்ளியில் பணியாற்றுகிறார்.

அனைத்து கேள்விகளுக்கும் பதில் அறிந்த ஆசிரியராக இருப்பதற்குப் பதிலாக வகுப்பறையில் ஒரு வழிகாட்டியாகவும் மாணவர்களை வழிநடத்துபவராகவும் இருக்கிறார் திருவாட்டி உமா.

ஆங்கிலத்தைச் செயல்முறை வடிவில் கற்பிப்பதற்கான முயற்சிகளை எடுத்து வரும் அவர், இவ்வாண்டின் ஆங்கில மொழிக்கான நல்லாசிரியர் விருதை உயர்நிலை பள்ளிப் பிரிவில் பெற்றார்.

“இன்றைய மாணவர்கள் நாளைய குடிமக்கள். அவர்கள் தகவல்களாலும் தொழில்நுட்ப முன்னேற்றங்களாலும் சூழப்பட்ட ஒரு தலைமுறையைச் சேர்ந்தவர்கள். அவர்களின் சமூக நடத்தைகளை நிர்வகிப்பதோடு அவர்களின் உலகப் பார்வையையும் அவை வடிவமைக்கின்றன,” என்றார் திருவாட்டி உமா.

பொது பேச்சுத் திறனில் மாணவர்களின் நம்பிக்கையை வளர்க்க வாய்ப்புகளை வடிவமைக்கும் திருவாட்டி உமா, பட்டிமன்றங்கள் போன்றவற்றை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துகிறார்.

சிங்கப்பூரின் கலாசாரத்துடன் மாணவர்கள் பின்னிப் பிணைந்திருக்க வேண்டுமென்ற நோக்கத்தில் அண்மையில் உணவங்காடி கலாசாரத்தைப் பாதுகாக்கும் கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்.

“மாணவர்கள் உணவங்காடி கடைக்காரர் ஒருவரை நேர்காணல் செய்து, காணொளி வர்ணனைகளை உருவாக்கினர். இது அவர்களுக்குக் கலாசாரப் பிரச்சினைகள் குறித்த முதல் நிலை அறிவை வளர்ப்பதைத் தாண்டி மாணவர்களின் விமர்சனச் சிந்தனையையும் செதுக்கியது,” என்று திருவாட்டி உமா தெரிவித்தார்.

தனது கற்றல்முறை மாணவர்களிடம் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தியதற்கான அடையாளமாக இவ்விருதை தான் கருதுவதாகக் கூறிய அவர், மாணவர்கள் ஆர்வமிக்க தனிநபர்களாக வளர்வதைப் பார்க்கும்போது அவர்களுடன் வகுப்பறையில் இருப்பதற்கு தான் உற்சாகப்படுவதாகச் சொன்னார்.

தொடக்கக்கல்லூரி பிரிவில் ஆங்கில மொழிக்கான நல்லாசிரியர் விருது பெற்ற மற்றொருவர் டாக்டர் சரவணன் மணி, 38.

ஆங்கிலோ சீனத் தன்னாட்சிப்பள்ளியில் ஆங்கிலம், ஆங்கில இலக்கியம் கற்பித்து வரும் அவர், புதுமையான பாணியில் மாணவர்களின் கற்றல் ஈடுபாட்டைத் தூண்ட ‘கட்டுப்படுத்தப்பட்ட குழப்பம்’ என்னும் கற்பித்தல் உத்தியைப் பயன்படுத்துகிறார்.

மாணவர்களைச் சவால் செய்ய தூண்டுதலான கேள்விகளைப் கேட்பதோடு உரையாடல்கள் மூலம் விமர்சனச் சிந்தனையை வளர்க்க முடியும் என்றும் நம்புகிறார் டாக்டர் சரவணன்.

தொடக்கக்கல்லூரி மாணவர்கள் கடினமான பாடங்களைப் படிப்பதால் அவர்கள் திறம்படப் பேசவும், அறிவார்ந்த முறையில் வளரவும், உணர்ச்சி ரீதியாக மேம்படவும், மன அழுத்தமில்லாத வகுப்பறையை உருவாக்கவும் தான் முற்படுவதாக அவர் தெரிவித்தார்.

கற்பிப்பது தன்னை இளமையாக வைத்திருக்க உதவுவதாகப் பகிர்ந்துகொண்ட டாக்டர் சரவணன், மாணவர்களுடன் இணைந்து செயல்படுவது தமக்குப் பிடித்தவற்றில் ஒன்று என்றார்.

மொழி, இலக்கியத்தின் நுட்பங்களைக் கண்டறிய மாணவர்களுக்கு வழிகாட்டுவது தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

டாக்டர் சரவணன் மணி.
டாக்டர் சரவணன் மணி. - படம்: நல்ல ஆங்கிலம் பேசுவோம் இயக்கம்
குறிப்புச் சொற்கள்