வருங்காலத் தலைமுறையினரை வார்த்தெடுக்கும் அரும்பணியில் முக்கிய அங்கம் வகிப்பவர்கள் ஆசிரியர்கள். பண்புகள், கல்வியறிவு, வாழ்க்கைத்திறன்கள் போன்றவற்றைப் புகுத்தி மாணவர்களை இளம் வயதிலிருந்தே செதுக்குவதில் பங்களிக்கும் ஆசிரியரின் பொறுப்பு அளவிடற்கரியது. இந்த ஆண்டின் ஆசிரியர் தினத்தை (ஆகஸ்டு 30) முன்னிட்டு சிறப்புத் தேவையுடைய மாணவர்களுக்கான சிறப்புக் கல்வி ஆசிரியர்களின் அர்ப்பணிப்புக்குத் தலைவணங்குகிறது தமிழ் முரசு.
இளம் வயதில் முளைத்த ஆர்வம்
தமது 12ஆம் வயதிலேயே அண்டை வீட்டாரின் பிஞ்சுக் குழந்தைகளை கவனித்துக்கொண்ட அனுபவம் உண்டு என்கிறார் லக்ஷனா கணேசன், 21. சிறு பிள்ளைகள்மீது இளம் வயதில் ஏற்பட்ட ஆர்வம் அவருக்குத் தமது முழுநேரப் பணியைத் தேர்ந்தெடுக்கவும் உதவியது.
அனைத்துக் குழந்தைகளையும் உள்ளடக்கிய சிங்கப்பூரின் முதல் பாலர் பள்ளியான கிண்டல் கார்டெனில் ஆசிரியராகப் பணிபுரியும் லக்ஷனா, வெவ்வேறு ஆற்றல்களும் தேவைகளும் கொண்டுள்ள குழந்தைகளின் வளர்ச்சிக்குப் பங்காற்றி வருகிறார்.
“குறை இருந்தாலும் அதைக் குறையாகப் பார்க்காமல் குழந்தையின் ஓர் ஆற்றல் என்று எடுத்துக்கொண்டு அரவணைப்பதே எங்கள் நோக்கம்,” என்கிறார் லக்ஷனா. பள்ளியில் பயிலும் குழந்தைகள் மீது பேரளவில் அன்பைப் பொழிகிறார் இவர்.
ஒவ்வொரு குழந்தையின் தேவையையும் அறிந்து அதற்குத் தகுந்தாற்போலப் பாடத் திட்டங்களை அமைக்கும் லக்ஷனா இப்பணியில் தம்மை முழுமையாக அர்ப்பணித்துள்ளதாகக் கூறினார்.
“முன்பு பாலர் பள்ளி ஆசிரியர் என்றால் குழந்தைகளுக்கு உணவு ஊட்டுவது, அவர்களைக் கழிவறைகளுக்கு அழைத்துச்செல்ல உதவுவது போன்றவற்றைச் செய்பவர் என்ற கருத்தே நிலவியது. இப்பணியில் சம்பளம் குறைவாக இருக்கும் என்று குறைசொல்வர். ஆனால், நாளடைவில் பொதுமக்கள் விழிப்புணர்வு பெற்றதும் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன,” என்று லக்ஷனா கூறினார்.
குழந்தைகளுடன் செலவிடும் இனிமையான தருணங்களை நினைவுகூர்ந்த அவர், “ஊன்றுகோல் உதவியுடன் நடந்த ஒரு சிறுவன் எதிர்பார்த்ததைவிட முன்னதாகவே எவ்வித உதவியுமின்றி நடக்கத் தொடங்கியபோது என் மனம் சாதித்த மகிழ்ச்சியில் விம்மியது,” என்றார்.
“இவர்களும் சாதாரணக் குழந்தைகள் போன்றவர்களே. நாட்டின் வருங்காலத்தை வடிவமைப்பதில் பங்காற்றவிருக்கும் இக்குழந்தைகளின் எதிர்காலத்திற்குப் பங்களிப்பதில் பெருமை கொள்கிறேன்,” என்று புன்முறுவலுடன் சொன்னார் லக்ஷனா.
தொடர்புடைய செய்திகள்
ஊக்கமளித்தல் இருவழிப் பாதை
பல ஆண்டுகளுக்கு முன்பு சுகாதாரத் துறையில் சிகிச்சை உதவியாளராகப் பணியாற்றிய மதனரதி மதன் கோபால், 55, சிறப்புக் கல்வித் துறையைத் தேர்ந்தெடுக்க அவருடைய முந்தைய பணிகள் வித்திட்டன.
சிகிச்சைப் பிரிவில் பணிபுரிந்தபோது பேச்சு சிகிச்சை, ‘ஆக்குபேஷனல் தெரபி’ எனப்படும் தொழில்சார் சிகிச்சை போன்ற சிகிச்சைகளைப் பெற்றுக்கொண்ட நோயாளிகளை இவர் காண நேர்ந்தது. உடற்குறையுள்ளோரின் உலகின் பக்கம் மதனரதியின் கவனம் திரும்பியது.
“பிள்ளைகளுக்கு ஊக்கமளிப்பது என் வேலை. என் வேலையைச் சிறப்பாகச் செய்ய அவர்களிடமிருந்து எனக்கு ஊக்கம் கிடைக்கிறது. இந்தப் பணியில் நான் ஈடுபடுவதற்கான நோக்கம் நிறைவேறுகிறது. எனவே என் பணியை நான் மிகவும் நேசிக்கிறேன்,” என்று கூறிய மதனரதியின் முகத்தில் பணியின்மீதான அவரது பற்று தெரிந்தது.
22 ஆண்டுகளுக்கு முன்னர் ஏவா பள்ளியில் பயிற்சி பெறாத ஆசிரியராகச் சேர்ந்த மதனரதி தற்போது லோரோங் நேப்பிரியில் இருக்கும் ஏவா பள்ளியில் வாழ்க்கைத்திறன் பிரிவுகளுக்குத் தலைவராக உள்ளார்.
சமூகப் பங்கேற்பை உள்ளடக்கிய பாடக்கலைத் திட்டத்தை உருவாக்கும் பணியில் இருக்கும் மதனரதி, உடற்குறையுள்ள பிள்ளைகள் பலருடன் சேர்ந்து செயல்பட வேண்டும் என்பதில் தொடக்கம் முதலே உறுதியாக இருந்தார்.
“குடும்பங்களுடன் பணியாற்றுவது, அவர்களுடன் நெருக்கமான பிணைப்பைக் கொண்டிருப்பது போன்றவை என்னை ஒவ்வொரு நாளும் இந்தப் பணியின்பால் ஈர்க்கின்றன,” என்று மதனரதி தெரிவித்தார்.
பேரார்வத்தோடு ஒரு பணியில் இருந்தாலும் அனைத்து வேலைகளிலும் சவால்கள் நிறைந்துள்ளன என்று கூறிய மதனரதி, ஒவ்வொரு பிள்ளையையும் ஆழமாகப் புரிந்துகொண்டு அதற்கு ஏற்றவாறு ஆசிரியர்கள் நடந்துகொள்வது சவால்மிக்க பணி என்றார்.
ஆஸ்திரேலியாவில் சிறப்புக் கல்வியில் முதுநிலைப் பட்டம் பெற்றுள்ள இவர், ஏவாவில் பணியாற்றும் ஆசிரியர்களுக்குப் பக்கபலமாக இருப்பதோடு பாடத்திட்டங்களை மேம்படுத்தியும் வருகிறார்.
இது இருபாலருக்குமான அரும்பணி
முழுநேரப் பணியாக பாலர் பள்ளி ஆசிரியர் துறையைத் தேர்ந்தெடுக்க விரும்பியபோது, பு. தினேஷின் குடும்பத்தினர் வியப்படைந்தனர்.
“ஆண்கள் பெரும்பாலும் இத்துறையில் அடி எடுத்து வைப்பதில்லை, இது பெண்களுக்கு உரிய பணி, இதில் எவ்வளவு நாள் உன்னால் நிலைத்து நிற்க முடியும்?” என்று பலரும் கேட்டபோதும் பாலர் பள்ளி ஆசிரியர் பணியின்பால் தாம் ஈர்க்கப்பட்டதாகக் கூறுகிறார் தினேஷ், 29.
கடந்த ஆறு ஆண்டுகளாக பாலர் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றும் இவர், சிங்கப்பூரில் இத்துறையில் பணியாற்றும் 217 ஆண் ஆசிரியர்களில் ஒருவர்.
இத்துறையில் இருக்கும் ஆசிரியர்களில் ஆண்களின் எண்ணிக்கை ஒரு விழுக்காட்டுக்கும் குறைவு என்கிறது குழந்தைப் பருவ மேம்பாட்டு அமைப்பு.
பாலர் பள்ளி மாணவர்களுக்கு பாடங்களைக் கற்பிக்கும்போது தினேஷ் தாமே ஒரு சிறு பிள்ளையாக மாறிவிடுகிறார்.
“பிள்ளைகளுடன் பழகும்போது அவர்களுள் ஒருவராக மாறிவிட வேண்டும். அப்போதுதான் அவர்களை நாம் புரிந்துகொள்ள முடியும்; அவர்களும் நம்மை எளிதில் அணுகுவார்கள்,” என்கிறார் தினேஷ்.
இளம் வயதில் தமது தாத்தா பாட்டியுடன் வளர்ந்த தினேஷ், குடும்பத்தின் பெரும்பாலான சிறு பிள்ளைகளுடன் மிக நெருக்கமாகப் பழகினார்.
அந்தப் பிணைப்பால் பிள்ளைகள் சார்ந்த பணியில் ஈடுபட வேண்டுமென்ற ஆசை இவருக்குச் சிறு வயதிலேயே தோன்றியது.
“குடும்பத்தினர் என் முடிவைப் பெரிதாக ஆதரிக்கவில்லை என்றாலும், நான் பிள்ளைகளுடன் பழகும் முறையைக் கண்ட நண்பர்கள் இப்பணியில் சேர என்னைப் பெரிதும் ஊக்குவித்தனர்,” என்று தினேஷ் கூறினார்.
பொது இடங்களில் முதியவர்கள் சிலர் தம்மிடம், “ஆண்களும் பாலர் பள்ளியில் பணி புரிவார்களா?” என்று கேட்டதை வருத்தத்துடன் குறிப்பிட்ட தினேஷ், இப்பணி இரு பாலருக்கும் உகந்த அரும்பணி என்பதை வலியுறுத்த விரும்புகிறார்.
“தொடக்கத்தில் மாணவர்களும் அவர்களின் பெற்றோரும் என்னை ஏற்றுக்கொள்வார்களா என்ற அச்சம் எனக்கிருந்தது. பாலர் பள்ளி ஆசிரியராகப் பணிபுரிகிறேன் என்பதைச் சொல்லவும் கூச்சப்பட்டேன். ஆனால், இப்போது இப்பணி எவ்வளவு சிறந்தது என்பதைப் பெருமையுடன் எடுத்துச் சொல்கிறேன்,” என்றார் தினேஷ்.
அடுத்ததாக சிறப்புத் தேவையுடைய பிள்ளைகளின் வளர்ச்சிக்குக் கைகொடுக்க விரும்பும் தினேஷ் அதற்காகத் தம்மை மேம்படுத்திக்கொள்ளும் முயற்சிகளில் இறங்கவுள்ளார்.